என் மலர்
விளையாட்டு
டோக்கியோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.
கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிக்கணக்கான ஏற்பாடுகளை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி குழு செய்து வருகிறது. இதற்கான சுடர் ஓட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்படி ஒலிம்பிக் சுடர்ஓட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கிடையே ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதை போட்டி அமைப்பு குழு மறுத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படமாட்டாது என்று போட்டி அமைப்புக்குழுவின் தலைவர் ஷிகோ ஹசி மோட்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பல்வேறு கவலை அளிக்கும் விஷயங்கள் நடைபெற்றாலும் போட்டியை ரத்து செய்வதை பற்றி சிந்திக்கவே இல்லை என்றார்.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் 9-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-வார்னர் தலைமையிலான சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. 2-வது போட்டியில் அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியது. ஐதராபாத்தை வீழ்த்தி அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஐதராபாத் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவி இருந்தது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 10 ரன்னிலும், 2-வது போட்டியில் பெங்களூருவிடம் 6 ரன்னிலும் தோற்றது.
இதனால் ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் ஐதராபாத் 8-ல், மும்பை 7-ல் வெற்றி பெற்று உள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது.
மும்பையில் நடந்த 8 வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்னே எடுக்க முடிந்தது.
தமிழக வீரர் ஷாருக்கான் அதிகபட்சமாக 36 பந்தில் 47 ரன் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் வேகப்பந்து வீரர் தீபக்சாஹர் அபாரமாக பந்து வீசினார். அவர் 13 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். சாம் கர்ரண், மொய்ன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 26 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 107 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. அந்த அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மொய்ன் அலி 31 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), டுபிளசிஸ் 33 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். முகமது ஷமி 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது.
இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறியதாவது:-
பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. தீபக் சாஹர் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த பவுலராக திகழ்ந்துள்ளார்.
அவரது பந்தில் டி.ஆர்.எஸ். கேட்குமாறு வலியுறுத்தினார். ஆனால் பந்து மேலே செல்வது தெளிவாக தெரிந்ததால் டி.ஆர்.எஸ்.கேட்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் விளையாடியதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இது ஒரு நீண்ட பயணம். 2008-ல் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, துபாய் என பயணம் நீண்டது.
தற்போது மும்பை எங்களது சொந்த மைதானமாக இருக்கிறது. மும்பை எங்களது ஆடுகளமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
இவ்வாறு டோனி கூறி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்சின் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 19-ந் தேதி மும்பையில் எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 18-ந் தேதி (நாளை) எதிர்கொள்கிறது.







மும்பை:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. கேப்டன் ரிஷப்பண்ட் 51 ரன் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டும், முஸ்தபா பிஜூர் ரகுமான் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 42 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. பின்னர் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 43 பந்தில் 62 ரன் எடுத்து அவுட் ஆனார்.
கடைசியாக கிறிஸ் மோரிஸ் அதிரடியாக ஆடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்ட நிலையில் கிறிஸ் மோரிஸ் இரண்டு சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.
ராஜஸ்தான் 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. வெற்றி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-
40 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்ததால் வெற்றி பெறுவதே கடினமானது என்று நினைத்தேன். எங்களிடம் மில்லர் மற்றும் மோரிஸ் இருந்தனர். ஆனாலும் கடினமானது என்றே நினைத்தேன். அது சூழ்நிலைகளை பொறுத்தது.
வேகத்தை எடுத்துக்கொள்வது எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் வலிமையாகும். கிறிஸ் மோரிஸ், தயவு செய்து ஒரு சிக்சரை அடிக்க முடியுமா? என்று நான் மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-
தொடக்கத்தில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இறுதி கட்டத்தில் அவர்கள் (ராஜஸ்தான்) எங்களை மீறி செல்ல அனுமதித்து விட்டோம்.
நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருக்க முடியும். பனி எங்களுக்கு சாதகமாக இருந்தது. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன்.
ஆனால் இந்த போட்டியில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்து கொள்ளலாம். எதிர்காலத்தில் அதை செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார்.
ராஜஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. டெல்லி அணி முதல் தோல்வியை (2 ஆட்டம்) சந்தித்தது.






