என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். இவர் தென்ஆப்பிரிக்காவில் விளையாடும்போது வலது முழங்கை காயத்தால் அவதிப்பட்டார். அதன்பின் தொடர்ந்து அந்த காயம் அவருக்கு தொந்தரவை கொடுத்து வந்தது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடும்போது, கையில் புதைந்திருந்த கண்ணாடி துண்டை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பதற்கான தொடரில் இருந்து வெளியேறினார். ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை.

    அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் அவர் முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். கடந்த 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, சசக்ஸ் அணிகள் இணைந்து ஆர்ச்சர் காயத்தில் இருந்து மீள்வதற்கான பணியை தொடரும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு  தெரிவித்துள்ளது. மேலும், 4 வாரங்கள் கழித்து அவரது காயம் குறித்து ஆராய்ந்து, அவர் எப்போது விளையாடுவதற்கு தயாராகுவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    இதனால் ஜூன், ஜூலை வரை ஜாப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜூன் 10 முதல் 14-ந்தேதி வரை எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கு முன் நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியை காண தினந்தோறும் 18 ஆயிரம் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 70 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

    போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு 16 வயது நிரம்பியவர்களாகவும், போட்டியை பார்க்க வருவதற்கு 24 மணி நேரத்திற்குள் கொரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரஞ்சி கோப்பை 2019-2020 சீசனில் 67 விக்கெட் வீழ்த்திய ஜெய்தேவ் உனத்கட் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
    இந்தியாவின் முதல்-தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் அபாரமாக பந்து வீச்சினார். அவர் 67 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவரது சிறப்பான பந்து வீச்சால் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.

    சிறப்பான பந்து வீச்சினால் 29 வயதான ஜெய்தேவ் உனத்கட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

    இதனால் உனத்கட் வேதனை அடைந்தார். இந்த நிலையில் சவுராஷ்டிரா ரஞ்சி கோப்பையை வென்றபோது அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த கர்சன் காவ்ரி, உனத்கட் இனிமேல் இந்திய அணியில் இடம் பிடிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கர்சன் காவ்ரி கூறுகையில்,

    ரஞ்சி போட்டி இறுதி ஆட்டம் நடைபெறும்போது நான் இந்திய அணியின் தேர்வாளர் ஒருவரிடம், உனத்கட் 60 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளார். தனிநபராக அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். அவருக்கு இந்திய ‘ஏ’ அணியிலாவது இடம் கொடுக்கக் கூடாதா? என்று கேட்டேன்.

    அதற்கு அந்த தேர்வாளர் என்னிடம், அவர் இந்திய அணிக்கு எப்போதும் தேர்வாகமாட்டார். நாங்கள் 30-க்கும் மேற்பட்ட வீரர்களை கண்காணித்து வருகிறோம். அதில் அவர் பெயர் குறித்து ஆலோசனைக்கூட செய்யவில்லை என்றார்.

    உனத்கட்

    உனத்கட் இவ்வளவு விக்கெட் வீழ்த்துவதின் பயன் என்ன? என்று கேட்டதற்கு, அவருக்கு ஏற்கனவே 32-33 வயது ஆகிவிட்டது. அவரது வயது அவரது கிரிக்கெட் கேரியரை வீணாக்கிவிட்டது. இது அவரை இந்திய அணியில் இடம்பிடிப்பதை நிறுத்திவிடும் என்றார்’’ எனக் கூறினார்.

    மேலும் அந்த தேர்வாளர், நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றார்.

    இடது கை வேகபந்து வீச்சாளரான உனத்கட் 2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
    சாஹிப் அல் ஹசன், அப்துர் ரசாக் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறிய வங்காளதேச வீரர் என்ற சாதனையை மெஹிதி ஹசன் பெற்றுள்ளார்.
    இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் முதல் போட்டியில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டும் வீழ்த்தினார். இரண்டு போட்டிகளிலும் ஏழு விக்கெட் வீழ்த்திய அவர், ஐசிசி-யின் பந்து வீச்சாளருக்கான ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ஐசிசி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றை பிடித்த 3-வது வங்காளதேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    சாஹிப் அல் ஹசன்

    2009-ம் சாஹிப் அல் ஹசன் முதல் இடத்தையும், 2010-ல் அப்துர் ரசாக் 2-வது இடத்தையும் பிடித்திருந்தனர்.

    முதல் இன்னிங்சில் 84 ரன்களும், 2-வது இன்னிங்சில் 125 ரன்களும் விளாசிய முஷ்பிகுர் ரஹ்மான் 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்த நிலையில், தற்போது 5 போட்டி கொண்ட தொடராக உயர்ந்துள்ளது.
    வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகளில் விளையாட இருந்தது.

    ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டி தற்போது ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்பின் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.

    ஜிம்பாப்வேயில் இருந்து திரும்பிய பின் ஆஸ்திரேலியாவுடன் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் இந்த முடிவுக்கு ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்துள்ளது.

    வங்காளதேசம் தற்போது இலங்கை தொடரில் விளையாடுகிறது. அதன்பின் வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதன்பின் ஜிம்பாப்வே சென்று விளையாடுகிறது. அதன்பின் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் வங்காளதேசம் செல்கின்றன. வீரர்களுக்கான பயோ-பபுள் மற்றும் தனிமைப்படுத்துதலை மனதில் வைத்துள்ளோம். இந்த வகையில் அதிகமான போட்டிகளில் விளையாடுவது சிறந்தது அல்ல. ஆகவே இலங்கை தொடருக்குப்பின் எங்களுடைய போட்டி அட்டவணை குறித்து யோசிப்போம் என்று வங்காளதேசம் கிரிக்கெட் ஆபரேசன் சேர்மன் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்குமே ஜப்பானுக்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என அமைப்பு குழு தெரிவித்துள்ளது.

    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.

    2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக் கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடை பெறுகிறது.

    இதற்கிடையே அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு செல்ல பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜப்பான், இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவு துறை 4-ம் நிலை பயண கட்டுப்பாட்டு ஆலோசனையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் நடைபெற இன்னும் 2 மாதத்துக்கு குறைவாக உள்ள நிலையில் இந்த கட்டுப்பாட்டால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

    ஏற்கனவே ஜப்பானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பலரும் ஒலிம்பிக் போட்டியை விரும்பவில்லை.

    இந்தநிலையில் அமெரிக்காவின் பயண கட்டுப்பாட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தலைமை அதிகாரி சிய்கோ கூறியதாவது:-

    அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை எந்த விதத்திலும் பாதிக்காது. போட்டியை நடத்த தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் நிபுணர்கள் குழு தொடர்ந்து மேற்கொள்ளும்.

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்குமே ஜப்பானுக்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜப்பானில் கடந்த வாரத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழு ஒலிம்பிக் போட்டி நடத்தும் முயற்சியை இப்போதே கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பி.எஸ்.பி.பி. பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல் 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் குழப்பமான இரவுகளை கழித்தேன். தற்போது ராஜகோபாலன் பெயர் வெளியே வந்து விட்டது. இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் அவசியம்.

    இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி பாதிக்கப்படும் போது மாற்றுநாள் ஆட்டம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    துபாய்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந்தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி வருகிற 18-ந்தேதி சவுத்தம்டனில் தொடங்குகிறது.

    அதைத்தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்டு 4 முதல் செப்டம்பர் 17-ந்தேதிவரை நடக்கிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இதுவரை விதிமுறைகளை அறிவிக்கவில்லை.

    இந்த போட்டி டிராவில் முடிந்தால் சாம்பியன் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுமா அல்லது அதில் மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் அதுகுறித்தான விதிமுறைகள்? என்பது குறித்து ஐ.சி.சி. இன்னும் தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆட்ட விதிமுறைகளை ஐ.சி.சி. விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம். ஆனால் தேதியை உறுதியாக கூறமுடியாது. அப்படி அறிவிக்கும்பட்சத்தில் போட்டிக்கான தெளிவான முடிவுக்கு வர முடியும்.

    இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி ஆட்டத்துக்கான விதி முறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த வாரம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் போட்டி பாதிக்கப்படும் போது மாற்றுநாள் ஆட்டம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    5 நாட்களுக்கும் சேர்த்து எத்தனை மணிநேரம் போட்டியை நடத்துவது என்பது குறித்தும் இந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்படும்.

    ஐ.சி.சி.யின் கூட்டம் வருகிற 1-ந்தேதி (புதன் கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதோடு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்தும் விவாதிக்கப்படும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது எனவும் இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும் எனவும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹேட்லி கூறியுள்ளார்.

    லண்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹேட்லி. அந்நாட்டுக்கு பெருமை சேர்த்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து கூறியதாவது:-

    ஹேட்லி

    இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது. இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும். எனவே கிரிக்கெட்டுக்கு இந்தியா தேவை.

    இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளது. இந்தியாவால்தான் டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய பயணத்தில் 36 ரன்களுக்கு சுருண்டு பின்னர் அபாரமாக விளையாடிய விதம் அற்புதமானது.

    தோல்வியில் இருந்து மீண்டு வந்தார்கள். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.

    அதிகமான இளைஞர்கள் இந்திய அணிக்கு தேர்வாகி நன்றாக விளையாடி வருகிறார்கள். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் உள்ளார்கள்.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்வது கடினமானது.

    இவ்வாறு ரிச்சர்ட் ஹேட்லி கூறி உள்ளார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடக்கிறது. 

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றின் முதல் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி கண்டனர்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூன் 13-ந்தேதி வரை பாரீஸ் நகரில் அரங்கேறுகிறது. இதையொட்டி தற்போது அங்கேயே தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் மைக்கேல் மோவை எதிர்கொண்டார். முதல் செட்டை பறிகொடுத்து 2-வது செட்டிலும் பின்தங்கிய ராம்குமார், அதன் பிறகு சுதாரித்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி 2-வது செட்டை வசப்படுத்தினார். கடைசி செட்டில் எதிராளியை எளிதில் அடக்கிய ராம்குமார் முடிவில் 2-6, 7-6 (7-4),6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 54 நிமிடங்கள் நீடித்தது. ராம்குமார் இன்னும் 2 சுற்றில் வெற்றி பெற்றால் பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்றுக்குள் கால்பதிக்க முடியும். உலக தரவரிசையில் 215-வது இடம் வகிக்கும் ராம்குமார், அடுத்து 203-ம் நிலை வீரரான டெனிஸ் இஸ்தோமினுடன் (உஸ்பெகிஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்.

    மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியிடம் (ஜெர்மனி) தோற்று ஏமாற்றம் அளித்தார்.

    முன்னதாக நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 182-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தனது முதல்தடையை வெற்றிகரமாக கடந்தார். 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அரினா ரோடியானோவை (ஆஸ்திரேலியா) போராடி சாய்த்த அங்கிதா அடுத்து 125-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் கிரீத் மினெனை இன்று சந்திக்கிறார்.
    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
    இஸ்லாமாபாத்:

    கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் தள்ளிவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கராச்சி மற்றும் லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு அபுதாபி செல்கிறார்கள். அங்கு அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    இந்த நிலையில் இந்த போட்டிக்கு செல்வதற்காக லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட அபுதாபி செல்ல முடியாது. முன்னதாக கிளாடியட்டர்ஸ் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாததால் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். முல்தான் சுல்தான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அதிரடி வீரர் அப்ரிடி முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
    இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
    மும்பை:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது. இதனை அடுத்து அங்கு இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த தொடர் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதேபோல் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் பயணித்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணிகள் மும்பையில் இருந்து வருகிற 2-ந்தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு இங்கிலாந்துக்கு செல்கிறது.

    இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்திய அணியினரின் தனிமைப்படுத்துதல் நடைமுறை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதற்காக வீரர், வீராங்கனைகள் தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டலில் உள்ள கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே இணைந்து விட்டனர். இதில் பங்கேற்பதில் இருந்து 6 நாட்கள் சிறப்பு சலுகை பெற்று இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் நேற்று பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர்.

    இங்கிலாந்துக்கு கிளம்பும் முன்னதாக அனைவருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×