என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் போட்டியில் ரி‌ஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழாரம் சூட்டியுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட். அவர் சமீபத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சனை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருத்து தெரிவித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகனுக்கு பதிலடி கொடுத்தார்.

    இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீரர் பும்ராவை சல்மான் பட் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோருக்கு இணையானவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக சல்மான் பட் கூறியதாவது:-

    டொயோட்டோ, கொரோலா கார்கள்போல பும்ரா இல்லை. அவர் உயர் ரக கார்களான லாம்போர்கினி, பெராரி காரை போன்றவர். அவர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவமான பவுலர் ஆவார். அவரின் திறனை வீணடிக்காமல் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.

    முக்கியமான போட்டிகளில் பும்ராவின் பங்கு அவசியமானதாக இருக்கும். அவர் நெருக்கடி நேரத்தில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். அவர் இந்திய அணியின் பொக்கி‌ஷமாகும்.

    பும்ரா

    ரோகித் சர்மா அவரை சரியான விதத்தில் பயன்படுத்துகிறார். பும்ராவுக்கு முதலில் சில ஓவர்கள் கொடுத்துவிட்டு, பின்பு இறுதியில் மீண்டும் பந்துவீச அழைக்கிறார். இது ஒரு நல்ல அணுகுமுறை. ஏனென்றால் இறுதி ஓவர்களில் பும்ராவின் பந்துவீச்சில் ரன்களை எடுப்பது அவ்வளவு சாதாரணமானது கிடையாது.

    பாகிஸ்தான் அணிக்கு ஒரு காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் எவ்வளவு முக்கியமானவர்களாக திகழ்ந்தார்களோ அதுபோல அவர்களுக்கு இணையாக தற்போது பும்ரா இந்திய அணிக்காக இருக்கிறார். அவர்களை போன்று யார்க்கர் முதல் அனைத்துவிதமான ஸ்விங் பந்துகளை வீசக் கூடிய திறமை மிக்கவர் பும்ரா.

    ஐ.பி.எல். போட்டியில் ரி‌ஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். எதிர்கால இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருப்பார்.

    விராட் கோலி தற்போது இளமையாக இருக்கிறார். இன்னும் 8 முதல் 9 ஆண்டுகள் வரை அவர் கேப்டனாக செயல்படுவார். இதேபோல ரோகித் சர்மா, ரகானே ஆகியோரும் கேப்டன் பதவியில் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

    இவ்வாறு சல்மான் பட் கூறியுள்ளார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை வலுவாக்க புதிய பயிற்சியாளர் ரமேஷ் பவாருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்திய பெண்கள் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து ரமேஷ் பவார் தனது பயிற்சியாளர் பணியை தொடங்க இருக்கிறார்.

    முன்னதாக ரமேஷ் பவார் 2018-ம் ஆண்டில் 5 மாத காலம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக இருந்த போது வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையானது. இந்த போட்டிக்கு பிறகு இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இ-மெயில் அனுப்பினார்கள். ‘தன்னை அவமானப்படுத்தியதுடன், தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ்பவார் முயற்சிக்கிறார்’ என்று மிதாலி ராஜூம், ‘மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அணியின் நலனை விட தனது தனிப்பட்ட சாதனையில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்’ என்று ரமேஷ் பவாரும் புகார் தெரிவித்தனர்.

    இருவருக்கும் இடையிலான மோதல்போக்கு நடந்து 3 ஆண்டுக்கு பிறகு ரமேஷ் பவார் இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் திரும்பி இருக்கிறார். பிரிஸ்டலில் வருகிற 16-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் மிதாலிராஜூடன், ரமேஷ் பவார் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இதனால் முந்தைய பகையை மறந்து இருவரும் ஒன்றிணைந்து அணியை எப்படி வழிநடத்தப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த காலம் முடிந்து போய் விட்டது. நீங்கள் அதற்கு திரும்பி செல்ல முடியாது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் அணியின் முன்னேற்றத்துக்கான திட்டத்துடன் வந்து இருப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் ஒன்றிணைந்து அணியை வழிநடத்தி செல்வோம். வருங்காலத்தில் அணியை மிகவும் வலுவானதாக உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு வலுவாக தயாராகுவோம்.

    7 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறோம். நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாததால் திறந்த மனதுடன் விளையாட வேண்டியது அவசியமாதாகும். இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது நல்ல விஷயமாகும். நாங்கள் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும். பெண்கள் கிரிக்கெட்டில் 3 வகையான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிகளும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அனைத்து வகையான ஆட்டங்களையும் வீராங்கனைகள் அனுபவித்து விளையாட வேண்டும்’ என்றார்.
    ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜினேடின் ஜிடேன் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார்.
    மாட்ரிட்:

    ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜினேடின் ஜிடேன் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். அவரது ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே பதவியை துறந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த இந்த சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடரில் அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. நடப்பு சாம்பியனான ரியல்மாட்ரிட் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் அந்த அணி அரைஇறுதியுடன் நடையை கட்டியது. தொடர்ச்சியான தோல்விகளால் இந்த கிளப்புக்கு அவர் விடைகொடுத்துள்ளார். ‘ஜிடேனின் முடிவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் அவரது தொழில்முறை பயிற்சி பணி, அர்ப்பணிப்பு, ஆர்வம் எல்லாவற்றுக்கும் நன்றி கடன்பட்டுள்ளோம். ரியல் மாட்ரிட்டின் தனி அடையாளங்களில் ஜிடேனும் ஒருவா். ரியல்மாட்ரிட் எப்போதும் அவரது சொந்த ஊர் அணி போன்றது என்பதை அவர் அறிவார்.’ என்று அந்த கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

    2016-18-ம் ஆண்டு வரை ரியல்மாட்ரிட்டின் பயிற்சியாளராக இருந்த 48 வயதான ஜிடேன் அதன் பிறகு அந்த பதவியில் இருந்து விலகினார். அப்போது அவரது பயிற்சி காலத்தில் ரியல்மாட்ரிட் அணி கிளப்புக்கான உலக கோப்பை, சூப்பர் கோப்பை உள்பட 9 பட்டங்களை வென்று பிரமாதப்படுத்தியது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மறுபடியும் ரியல்மாட்ரிட்டின் பொறுப்பை ஏற்ற ஜிடேன் இந்த தடவை ஏமாற்றத்துடன் வெளியேறி இருக்கிறார். இந்த சீசனில் அந்த அணி எந்த பட்டமும் வெல்லவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு சீசன் ஒன்றில் ரியல்மாட்ரிட் ஒரு பட்டம் கூட வெல்லாதது இதுவே முதல்முறையாகும்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரேவழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் அவரை ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். மேலும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக, தனக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடராஜன் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த டுவிட்டர் பதிவில், இன்று காலை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மக்களுக்காக தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் அயராது உழைத்து வரும் சுகாதாரப்பணியாளர்களுக்கு லட்சக்கணக்கான நன்றிகள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார். 

    அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நடராஜன் இந்திய அணியில் மீண்டும் களமிறங்குவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஐரோப்பா லீக் பைனல் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 11-10 என வில்லாரியல் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    ஐரோப்பா சாம்பியன் லீக் பைனல் கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட்- ஸ்பெனியின் வில்லாரியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் வில்லாரியலின் ஜெரார்டு மொரேனோ முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் வில்லிரியல் 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் எடின்சன் கவானி பதில் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.

    வில்லாரியல் அணி

    அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நீண்ட நேரம் சென்ற பிறகு வில்லாரியல் 11-10 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    மான்செஸ்டர் யுனைடெட் அணி 2017-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய அளவிலான சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.
    பயிற்சி முறையை மாற்றாவிடில், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்கப்படுவீர்கள் என்று லாங்கருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார்.

    ஆஸ்திரேலியா கடைசியாக இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சொந்த மண்ணிலேயே நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இந்தியாவிடம் தோற்றது. மேலும், அடுத்தடுத்து சொந்த மண்ணில் இந்தியாவிடம் சரணடைந்தது.

    இந்த தொடர் குறித்து வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது பெரும்பாலான வீரர்கள் ஜஸ்டின் லாங்கரின் பயிற்சி முறை சரியில்லை எனத்தெரிவித்தனர்.

    இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஜஸ்டின் லாங்கர் மீது அதிருப்பதி அடைந்துள்ளது. இந்நிலையில் பயிற்சி முறையில் மாற்றம் செய்யவில்லை எனில், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஜஸ்டின் லாங்கர்

    கடந்த 2018-ம் ஆண்டு ஜஸ்டின் லாங்கர் நான்கு வருட ஒப்பந்தத்தில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2019 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடருக்கு முன் அவருடைய செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வீரர்களுடைய கருத்திற்கும் தகுந்த பதில் அளிப்பதை வைத்து லாங்கரின் பதவீ நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.
    முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ள ஜாப்ரா ஆர்ச்சர், முழு உடற்தகுதியுடன் டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடரில் விளையாட விரும்புகிறார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். தன்னுடைய அபார பவுன்சர் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். இவருக்கு முழங்கையில் நீண்ட நாட்களாக வலி இருந்து வந்தது.

    இதனால் கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அவரது காயம் குறித்து 4 வாரத்திற்குப்பின் ஆய்வு செய்து அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகிவிட்டார். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு அவரை தயார் செய்ய இங்கிலாந்து விரும்புகிறது.

    ஆனால், முழுமையாக உடற்தகுதி பெற்று உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட இருப்பதாக ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜாப்ரா ஆர்ச்சர் கூறுகையில் ‘‘நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின், உடனடியாக அணிக்கு திரும்பக் கூடாது என தீர்மானித்துள்ளேன். ஏனென்றால், என்னுடைய முக்கிய கவனம், இங்கிலாந்து அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான்.

    இரண்டும்தான் என்னுடைய இலக்கு. இந்திய தொடருக்கு நான் தயாராகிவிட்டால், விளையாடுவேன். அப்படி இல்லை என்றால், கோடைக்காலத்திற்குப் பிறகு சிறந்த வகையில் தயாராகிவிடுவேன்.

    ஜாப்ரா ஆர்ச்சர்

    நான் சிலவாரங்களை மிஸ் செய்வேன். அப்படி இருந்தால் சில வருடங்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெறுவேன். இந்த காயம் ஒரே நேரத்தில் முழுமையாக குணமடைந்து அத்துடன் முடிவுக்கு வரவேண்டும். இதனால்தான் அணிக்கு திரும்பும் தேதியை நான் எதிர்பார்க்கவில்லை. நான் இதை சரியாக கையாளவில்லை என்றால், காலத்திற்கும் எந்தவிதமான கிரிக்கெட்டும் விளையாடமுடியாது’’ என்றார்.

    டி20 உலகக்கோப்பை அக்டோபர்- நவம்பரிலும், ஆஷஸ் தொடரில் டிசம்பர் 8-ந்தேதியும் தொடங்குகிறது.
    இந்திய அணி இங்கிலாந்து சென்று உலக டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அக்‌ஷர் படேல். 27 வயதான இவர் 2014-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

    ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய 7 ஆண்டுகளுக்கு பிறகே அக்‌ஷர் படேலுக்கு டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

    கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடினார். 3 டெஸ்டில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி முத்திரை பதித்தார். 38 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட தால் அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

    தற்போது இந்திய அணி இங்கிலாந்து சென்று உலக டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. இதற்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல் இடம் பெற்றுள்ளார்.

    அக்சர் படேல்

    இந்தநிலையில் ஜடேஜாவால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று அக்‌ஷர் படேல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

    அதுவும் சமீப காலமாக ஜடேஜா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இன்னொரு இடது கை சுழற்பந்து வீரரான எனக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

    என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. எனக்கான வாய்ப்பு வரும் போது அதை நிரூபிக்கும் வகையில் விளையாடுவேன். அப்படித்தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக விளையாடினேன்.

    நானும், ஜடேஜாவும் நல்ல நண்பர்கள். அவர் இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். சில நேரங்களில் அணியில் மாற்றம் செய்யப்படும்போது நமக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

    இவ்வாறு அக்‌ஷர் படேல் கூறி உள்ளார்.

    அக்‌ஷர் படேல் ஒருநாள் போட்டியில் 45 விக்கெட்டும் (38 ஆட்டம்), 20 ஓவர் ஆட்டத்தில் 9 விக்கெட்டும்(12 ஆட்டம்) கைப்பற்றி உள்ளார்.

    வீரர்கள் அறையில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதால், நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பென் போக்ஸ் விலகியுள்ளார்.
    நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பென் போக்ஸ் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    கவுன்ட்டி சாம்பியன்ஷப் போட்டியில் சர்ரே அணிக்காக பென் போக்ஸ் விளையாடி வருகிறார். ஓவலில் மிடில்சக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இடம்பிடித்து விளையாடி வந்தார். வீரர்கள் அறையில் நடந்து வரும்போது காலுறை மாட்டி கீழே வழுக்கி விழுந்தார்.

    இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் சரியாக மூன்று வாரங்களுக்கு மேல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, கடுமையான டர்னிங் ஆடுகளத்தில் சிறப்பான வகையில் விக்கெட் கீப்பர் பணியை செய்தார். அதோடு பேட்டிங்கிலும் அசத்தினார். இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 8 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது பென் போக்ஸ் விளையாட வாய்ப்புள்ளது.

    முதல் டெஸ்ட் 2-ந்தேதியும், 2-வது டெஸ்ட் 10-ந்தேதியும் தொடங்குகிறது.
    கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்ட முழு விவரங்களையும் தெரிவிக்கும் படி தேசிய விளையாட்டு சம்மேளனங்களை, இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்த விவரங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியது இருப்பதால் தடுப்பூசியின் பெயர் மற்றும் அதன் ஒவ்வொரு டோசும் போட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி தெரிவித்துள்ளது.

    நமது வீரர்கள் எந்த நாட்டில் இருந்து டோக்கியோ செல்கிறார்கள் என்ற விவரத்தையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அத்துடன் போட்டிக்கு புறப்படும் முன்பாக கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்து வீரர்களுக்கு முழுமையாக விளக்க வேண்டும் என்றும் இ்ந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
    ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர்.
    துபாய்:

    ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர்.

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் குவைத் வீரர் நாடிர் ஒடாக்கை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார். 27 வயதான அசாமை சேர்ந்த ஷிவதபா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5-வது முறையாக பதக்கம் வெல்கிறார். அவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் தங்கமும், 2015, 2019-ம் ஆண்டுகளில் வெண்கலமும், 2017-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி இருந்தார். இதேபோல் 91 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் சஞ்சீத் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் ஜாசுர் குர்போனோவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார்.

    இ்ந்தியாவின் ஆதிக்கம் நேற்றும் நீடித்தது. நடப்பு சாம்பியன் அமித் பன்ஹால் (52 கிலோ) 3-2 என்ற கணக்கில் கார்கு இங்க்மன்டாக்கை (மங்கோலியா) சாய்த்து அரைஇறுதி வாய்ப்பை பெற்றார். விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), வரிந்தர் சிங் (60 கிலோ) ஆகிய இந்திய வீரர்களும் கால்இறுதியில் வெற்றியை சுவைத்தனர்.

    பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி 5-0 என்ற கணக்கில் ருஹாப்சோவை (தஜிகிஸ்தான்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 57 கிலோ பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் யுன்ட்செட்செக் யேசுஜென்னையும், 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கோடிரோவாவையும் சாய்த்து அரைஇறுதியை எட்டினர். 3 பேருக்கும் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

    6 முறை உலக சாம்பியனான மேரிகோம் (51 கிலோ), லால்பாட் சாய்ஹி (64 கிலோ), லவ்லினா (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), மோனிகா (48 கிலோ), சவீட்டி (81 கிலோ), அனுபமா (81 கிலோவுக்கு மேல்) ஆகிய இந்திய வீராங்கனைகள் நேரடியாக அரைஇறுதியில் களம் இறங்குவதால் இவர்களுக்கும் நிச்சயம் பதக்கம் உண்டு. ஆக மொத்தம் 15 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
    இங்கிலாந்தில் நிலவும் சூழல் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18-ம்தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெற்று முதன் சாம்பியன் பட்டத்தை வெல்வர் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

    இந்த போட்டி குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘இரண்டு அணிகளும் கடந்த 2 மாதங்களில் எவ்வித டெஸ்ட் ஆட்டங்களிலும் விளையாடவில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ஆனால், இங்கிலாந்தில் நிலவும் சூழல் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறை எனக்குப் பிடித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அது மேலும் கடினமானது. இருந்தாலும் இது சிறந்த நடைமுறை. ஒவ்வொரு டெஸ்ட் தொடரும், வெறும் டெஸ்ட் தொடருக்காக அல்லாமல் அதையும் தாண்டி அதில் ஒரு நோக்கம் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’’ என்றார்.
    ×