என் மலர்
விளையாட்டு


மான்செஸ்டர்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
முதலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘பயிற்சி முகாமுக்குள் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருந்தத்தக்க வகையில் இந்தியா அணியை களம் இறக்க முடியவில்லை. இதனால் இந்தியா போட்டியை இழந்தது, என்று குறிப்பிட்டு இருந்தது.
பின்னர் உடனடியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதில் 5-வது மற்றும் கடைசி டெஸ்டை இந்தியா இழந்தது என்ற குறிப்பு மாற்றப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக தெரிவித்தது.
இதனால் இந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா அல்லது இந்தியா இந்த டெஸ்டை இழந்ததா என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்படி இந்த டெஸ்ட் தொடர் இன்னும் முடியவில்லை. இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்றும், கடைசி டெஸ்ட் மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியை எப்போது நடத்துவது என்பது குறித்து வருகிற 22 அல்லது 23-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகியுடன் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். கடைசி டெஸ்ட் ரத்தானதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அந்த போட்டி வேறொரு நாளில் நடத்தப்படுகிறது.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)- 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) மோதினார்கள்.
மிகவும் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அதற்கு அடுத்த செட்களில் ஜோகோவிச் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 6-2 என்ற கணக்கிலும், 3-வது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.
ஆனால் 4-வது செட்டை சுவரேவ் 6-4 என்ற கணக்கில் வென்றார். இருவரும் தலா 2 செட் கைப்பற்றியதால், வெற்றியை நிர்ணயம் செய்யும் 5-வது மற்றும் கடைசி செட் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செட்டை ஜோகோவிச் 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஸ்கோர்: 4-6, 6-2, 6-4, 4-6, 6-2.
இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 3½ மணி நேரம் தேவைப்பட்டது. 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்னும் ஒரு ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றால் அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர் மற்றும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்சிலாம் வென்றவர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டேனில் மெட்வதேவ் (ரஷியா)-கனடாவைச் சேர்ந்த பெலிக்ஸ் அகுர் அலிஸ்மி மோதினார்கள்.
இதில் மெட்வதேவ் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
அவர் 2-வது முறையாக அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார்.இதற்கு முன்பு 2019-ல் இறுதிப் போட்டியில் நுழைந்து நடாலிடம் தோற்று பட்டத்தை இழந்தார்.
நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - மெட்வதேவ் மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளான எம்மா ராடுகானு (இங்கிலாந்து)- பெர்னாண்டஸ் (கனடா) மோதுகிறார்கள். முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டோனி தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பையையும் மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இதனால் அவர் அணிக்கு ஆலோசகராக இருப்பது நல்ல பலனை அளிக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும், கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதை கபில்தேவ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இது ஒரு நல்ல முடிவு. டோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று ஒரு ஆண்டுதான் ஆகிறது. சிறப்பு நிகழ்வாக உலக கோப்பையில் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டது மிக முக்கியமானதாகும். பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்று 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் இதுபோன்ற வாய்ப்பை பெற முடியும்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் அடுத்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, பொலிவியாவை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. 34 வயதான மெஸ்சி 14-வது, 64-வது, 88-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அவர் சர்வதேச போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடிப்பது இது 7-வது முறையாகும்.
இந்த போட்டியில் மெஸ்சி 2-வது கோலை அடித்தபோது சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். அவர் 153 சர்வதேச போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு பிரேசில் முன்னாள் கதாநாயகன் பீலே (77 கோல்கள், 92 ஆட்டங்களில்) அதிக கோல் அடித்த தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த வீரராக விளங்கினார். அவரது சாதனையை மெஸ்சி முறியடித்து இருக்கிறார்.
சர்வதேச போட்டியில் ஒட்டுமொத்தத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (180 ஆட்டங்களில் ஆடி 111 கோல்கள்) முதலிடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் மெஸ்சி 5-வது இடத்தை ஜாம்பியா வீரர் காட்பிரையுடன் இணைந்து வகிக்கிறார்.







