என் மலர்
விளையாட்டு
- விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
- எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை பி.டி.உஷா டெல்லி மேல் சபையின் நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் அவருக்கு நியமன எம்.பி. பதவி கிடைத்து இருப்பதால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவியது.
இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சிலர் விமர்சித்து இருந்தனர். இதற்கு பதில் அளித்து பி.டி.உஷா கூறியதாவது:-
எனக்கு விளையாட்டு பிடிக்கும். விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்காக நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை.
பாரதிய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.
எம்.பி.யானால் நான் டெல்லியிலேயே இருக்க மாட்டேன். நான் நடத்தி வரும் பள்ளியை விட்டுவிட முடியாது.
அதே நேரம் விளையாட்டிற்கும், பொது சேவையிலும் என்னால் முடிந்ததை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
- விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் ஜோகோவிச் தோற்றுள்ளார்.
லண்டன்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பி யனுமான ஜோகோவிச் (செர்பியா) அரை இறுதியில் 9-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எதிர் கொண்டார்.
இதில் ஜோகோவிச் 2-6, 6-3, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு 8-வது முறையாக முன்னேறினார். ஒட்டு மொத்தமாக கிராண்ட் சிலாம் போட்டியில் 32-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் அவர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) சாதனையை முறியடித்தார்.
ஜோகோவிச் நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நிக் கார்கியோசை (ஆஸ்திரேலியா) எதிர் கொள்கிறார். அவரை வீழ்த்தி 21-வது கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளார்.
நடால் 22 பட்டத்துடன் முதல் இடத்திலும், பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 20 பட்டத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
நாளை வெற்றி பெற்றால் ஜோகோவிச் முன்னேறி பெடரரை பின்னுக்கு தள்ளி விடுவார்.
ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறைதான் (2013) தோற்றுள்ளார்.
- நெல்லை அணி மட்டுமே இதுவரை தோற்கவில்லை.
- 2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடைபெற்றது.
2 நாள் இடைவெளிக்கு பிறகு கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை ( 10-ந் தேதி தொடங்குகிறது. கோவையில் முதல் முறையாக டி. என்.பி எல். ஆட்டங்கள் நடைபெறுகிறது.
நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை அணி மட்டுமே இதுவரை தோற்கவில்லை. தான் மோதிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் , 8 விக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சையும், 26 ரன்னில் மதுரை பாந்தர்சையும் தோற்கடித்தது. அந்த அணி 5-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
திருப்பூர் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் திண்டுக்கல்லிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது வெற்றி வேட்கையில் அந்த அணி இருக்கிறது.
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரஹில்ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன. 2-வது வெற்றியை பெறப்போவது திருச்சியா ? கோவையா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- 3 போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அரைசதத்துடன், 4 விக்கெட்டும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ரோகித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 13-வது வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 போட்டியில் தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த விராட்கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இந்த போட்டியில் க்ராவ்சிக் மற்றும் ஸ்குப்ஸ்கி கடைசி நிமிடத்தில் ஜோடி சேர்த்து விளையாடினர்.
- இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் ஜோடி தோல்வி அடைந்தது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை டெசிரே க்ராவ்சிக் மற்றும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ எப்டன் மற்றும் சாம் ஸ்டோசர் ஜோடியை எதிர் கொண்டது.
மொத்தம் ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் க்ராவ்சிக்- ஸ்குப்ஸ்கி ஜோடி வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த போட்டியில் அமெரிக்கா வீராங்கனை டெசிரே க்ராவ்சிக்வும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கியும் வேறு வேறு ஜோடிகளுடன் கலந்து கொள்ள இருந்த நிலையில், திடீர் மாற்றமாக கடைசி நிமிடத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து இறுதி போட்டியை எதிர்கொண்டனர். இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை அவர்கள் தட்டிச் சென்றனர்.
- முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் ஜோகோவிச் மோதுகிறார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
- இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் ஆகியோர் சதமடித்தனர்.
- இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.
கல்லே:
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய லபுசேன், ஸ்மித் ஜோடி பொறுப்புடன் ஆடியது. லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 12 ரன்னிலும், கேமரூன் கிரீன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லபுசேன், ஸ்மித் ஜோடி 134 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தும் சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்னுக்டன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்டும், ரஜிதா, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் செட்டை இழந்த பிவி சிந்து இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
- காலிறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யீங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த பிவி சிந்து, இரண்டாவது செட்டை 21-12 என வென்றார். சுதாரித்துக் கொண்ட டாய் சூ யீங் 3வது சுற்றை 21-12 என கைப்பற்றினார்.
சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- வங்காளதேசத்துக்கு எதிராக டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என கைப்பற்றியது.
- நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
கயானா:
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 என கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அபிப் ஹுசைன் அரை சதமடித்தார். லிட்டன் தாஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் 39 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டி 20 தொடரைக் கைப்பற்றியது. நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
- விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
- சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.
இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.
போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.
காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.
ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை முதல் முறையாக தகுதி.
- இறுதிப் போட்டியில் விளையாட கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை தகுதி பெற்றார்.
லண்டன்:
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதி சுற்றுக்கு எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இதன் மூலம் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குக்குள் நுழைந்த முதல் கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். நாளை நடைபெறம்விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜபீரை, எலினா எதிர்கொள்ள உள்ளார்.
- முதலில் விளையாடிய இந்திய அணி 198 ரன்கள் குவித்திருந்தது.
- இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்ததுடன், 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
சவுத்தம்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றன. இரு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி சவுத்தம்டனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜசன்ராய் 4 ரன்னுடன், கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். டேவிட் மலன் 21 ரன்னும், ஹாரி புரூக் 28 ரன்னும் அடித்தனர். லிவிங்ஸ்டோன் டக்அவுட்டானர். அதிகபட்சமாக மொயின் அலி 36 ரன்கள் அடித்தார். கிரிஷ் ஜோர்டன் ரன்கள் அடித்தார்.
19.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






