என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணியின் அரை இறுதி தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
    • பாகிஸ்தானைபோல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திடம் மிகவும் மோசமாக தோற்றது. அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்ததால் இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்தது. இதற்கிடையே இந்திய அணியின் அரை இறுதி தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    அவர் தனது டுவிட்டர் பதிவில், 'எனவே இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி யில் 152/0 vs 170/0 என பதிவிட்டு இருந்தார்.

    கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இரு அணிகளும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) இறுதி போட்டியில் மோதுவதை பாகிஸ்தான் பிரதமர் கிண்டலுடன் தெரிவித்து இருந்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இந்த டுவிட்டர் பதிவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானைபோல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் நீங்களோ மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். அதனால் தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்தவில்லை.

    இவ்வாறு இர்பான் பதான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமரின் இந்த டுவிட் தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இறுதி போட்டியில் எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. ஆனால் மன்னிக்கவும். நான் அந்த டுவிட்டை பார்க்கவில்லை. இங்கிலாந்து கடும் போட்டியை அளிக்க கூடிய சிறந்த அணியாகும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள். இதுவே அவர்களது திறமைக்கு சான்றாகும்.

    பவர் பிளேயில் விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானதாகும்.

    • உலக கோப்பையை 2வது முறையாக வென்று வெஸ்ட் இண்டிசுடன் இணையப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை மழை பெய்தால் போட்டி நாளை நடத்தப்படும்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதில் ஜாஸ்பட்லர் தலைமையிலான இங்கிலாந்து- பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகள் ஏற்கனவே ஒருமுறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன.

    இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டும், பாகிஸ்தான் அணி 2009ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. இதனால் எந்த அணி உலக கோப்பையை 2வது முறையாக வென்று வெஸ்ட் இண்டிசுடன் இணையப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை மழை பெய்தால் போட்டி நாளை நடத்தப்படும்.

    20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.12.88 கோடி (1.6 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசு தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.6.44 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

    அரை இறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ.3.22 கோடி கிடைக்கும்.

    சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய மற்ற 8 அணிகளுக்கு தலா ரூ.56.73 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

    • டி20 உலக கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் மூன்றாவது முறையாக மோத உள்ளன.
    • இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்ப்பு

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டி20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3-வது முறை. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பை லீக் சுற்றில், பாகிஸ்தான், இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த போதும், கோப்பையை வென்றது. 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த டி20 உலக கோப்பை சூப்பர் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்படுவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

    • இறுதிப் போட்டியில் கீழே விழுந்ததால் காயமடைந்து வெளியேறினார்.
    • உஸ்பெகிஸ்தான் வீரர் தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிப்பு.

    அம்மான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப்பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சிவ தாபா, உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துல்லா ரஸ்லனை எதிர்கொண்டார். 2-வது ரவுண்டில் அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு சிவ தாபாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி அதிகம் இருந்ததால் போட்டியில் இருந்து அவர் விலகினார். இதையடுத்து அப்துல்லா ரஸ்லன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் இருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் சிவ தாபாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    • டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்தது.
    • இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இன்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்திய அணியின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்பது எனக்குத் தெரியும்.

    நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை இலக்காக வைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வோம். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 168 ரன்கள் போதுமானதல்ல.

    விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் நாம் தோல்வி அடைந்தோம். இது எங்களுக்கு கடினமான ஆட்டம், மோசமான மற்றும் ஏமாற்றம் தரும் தோல்வி.

    நம்பர் 1 இடத்தைப் பெறுவது என்பது ஒரே இரவில் நடக்காது. அந்த அணி குறிப்பிட்ட காலத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், இந்திய அணி அதைச் செய்திருக்கிறது.

    ஒரு தோல்வியின் அடிப்படையில் வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம். வீரர்களும் வெளியே சென்று தோல்வியடைய விரும்பவில்லை. விளையாட்டுகளில் இந்த ஏற்றத் தாழ்வுகள் உண்டு. நாம் அதில் ஒன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு கிரேக் பார்க்லே நன்றி தெரிவித்தார்
    • ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது.

    மெல்போர்ன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிமாப்வேயின் தாவெங்வா முகுலானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பார்க்லேவுக்கு ஐசிசி வாரியம் தனது முழு ஆதரவை தெரிவித்தது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பார்க்லே தலைவர் பதவியில் இருப்பார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக உள்ளது என்றும், தனக்கு ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பார்க்லே கூறினார்.

    இதேபோல், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா, ஐசிசி-யின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது. இந்த குழுவின் தலைவராக உள்ள ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ளார்.

    • ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும்.
    • முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 - 135 என குறைந்து விட்டது.

    டி20 உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    இத்தொடரில் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா அழுத்தமான நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.

    ஐபிஎல் தொடரில் பணம் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் போது முழுமூச்சுடன் போராடுவதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008-ல் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்ட பின் இந்தியா இதுவரை ஒரு டி20 உலக கோப்பையை கூட வெல்லவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    இந்தியா ஐபிஎல் தொடரால் பயனடையும் என்று அனைவரும் நினைத்தார்கள். இந்தியா 2007இல் டி20 உலக கோப்பையை வென்றது. ஆனால் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் அவர்கள் இன்னும் டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. 2011இல் அதுவும் சொந்த மண்ணில் 50 ஓவர் கோப்பையை வென்றார்கள்.

    எனவே இந்த இடத்தில் கேள்வி எழுகிறது. இதனால் வெளிநாட்டு தொடர்களில் தங்களது வீரர்களை அனுமதிக்கும் வகையில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றுமா? மேலும் ஆசிய கோப்பையிலேயே இந்திய பவுலர்களிடம் ஒரு மாற்றத்தை கண்டேன்.

    அதாவது ஐபிஎல் தொடருக்கு பின் அவர்களது வேகம் குறைந்து விட்டது. எடுத்துக்காட்டாக முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 - 135 என குறைந்து விட்டது. எனவே அவர் ஐபிஎல் தொடரில் 12 – 13 கோடி ரூபாய்களை சம்பாதித்து விட்டதால் இந்த வேகம் குறைந்து விட்டதா என்பதை பிசிசிஐ ஆராய வேண்டும்.

    மேலும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பசியுடன் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில் பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் நான் 24 கோடிகளை சம்பாதித்தால் எனது வேலை முடிந்து விட்டதாக நினைத்து நாட்டுக்காக முழு மூச்சுடன் விளையாட மாட்டேன்.

    என்று கூறினார். 

    • 35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.
    • ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

    மும்பை:

    ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகின்றன்.

    அதாவது 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை விடுவிக்கும். அந்தவகையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கவுள்ள வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. எனவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது பட்டியலை இறுதி செய்து அனுப்பிவிட்டது.

    மும்பை அணியில் மொத்தம் 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் மினி ஏலத்தில் விடுவிக்கப்பட்டனர். இதில் மும்பை அணியின் மிக முக்கிய வீரரான பொல்லார்ட்-ம் ஒருவர் என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவல். 2010-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி கடந்த சீசனில் 10-வது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. இதில் பொல்லார்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 144 ரன்களை மட்டுமே அடித்தார். மேலும் தனது கரியரில் மிக மோசமான சராசரியை ( 14.40 ) வைத்திருந்தார். பந்துவீச்சிலும் பொல்லார்ட் 6 இன்னிங்ஸ்களில் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

    35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர். பொல்லார்ட் மட்டுமின்றி மேலும் 4 நட்சத்திர வீரர்களான ஃபெபியன் ஆலன், டைமல் மில்ஸ், மயங்க் மார்காண்டே, ஹிர்திக் சௌக்கின் ஆகிய 4 பேரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

    • வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 2-வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

    குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியத்துடன் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதை விட கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக செய்த தேவையற்ற மாற்றங்கள் ஏற்கனவே அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது.

    இந்நிலையில் சீனியர் வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை நீங்கள் பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

    நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அவரிடம் கிரிக்கெட்டின் அபாரமான மூளை உள்ளது. ஆனால் ஒருவேளை அவரை நீங்கள் டி20 கிரிக்கெட்டின் பயிற்சிளராக நீக்காமல் போனால் குறைந்தபட்சம் அவருக்கு உதவி செய்வதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    அதிலும் ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். விரைவில் நீங்கள் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை வைத்திருப்பதால் அவர் இந்த நிலைமையில் சரியாக பொருந்தவர்.

    அவரில்லை என்றாலும் சமீபத்தில் ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள். மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவரை விட சிறந்த தேர்வு யாரும் இருக்க முடியாது. டி20 அணியின் சிறந்த வீரரான அவரைப் போன்ற நிறைய பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.
    • அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.

    மும்பை:

    8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அரையிரயிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னர் ஐசிசி அறிவித்தபடி அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) ,. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    அந்த வகையில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.

    • 1998-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மட்டும் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
    • இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே

    இந்த போட்டிக்கு முந்தைய நாளான இன்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பினார். நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், ஐ.பி.எல். குறித்து கேள்வி கேட்கிறாரே? என பாபர் ஆசமிற்கு சங்கடமாகிவிட்டது. கேள்வி கேட்டதும், அவர் பாகிஸ்தான் அணியின் மீடியா மானேஜர் நோக்கி தனது பார்வையை நோக்கினார். உடனடியாக அவர் தலையிட்டு பதில் அளித்தார்.

    பத்திரிகையாளர் ஒருவர் ''ஐ.பி.எல். விளையாடுவதன் நன்மைகளைப் பற்றி பேசுங்கள், அது உங்களுக்கும் உங்கள் அணிக்கும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அதுகுறித்து உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நம்பிக்கை உள்ளதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

    உடனடியாக பாபர் ஆசம் அவரது மீடியா மானேஜர் பக்கம் திரும்பினார். அவர் இடைமறித்து ''தற்போது நாம் உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து கேள்விகள் எடுத்து வருகிறோம்'' என்றார்.

    அதன்பின் உலகக் கோப்பை குறித்த கேள்விகள் தொடர்ந்தன.

    உலகளவில் ஐ.பி.எல். மிக பணக்கார லீக்காகவும், பெரிய லீக்காகவும் அறியப்படுகிறது. இதில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தங்களது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனால், இந்திய அணி மட்டும் ஐ.பி.எல். தொடங்கிய பின், உலகக் கோப்பையை வென்றது இல்லை என்பது துரதிருஷ்டமே....

    • கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வீழ்த்தியது
    • உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ''இந்த ஞாயிறு 152/0 vs 170/0'' என ட்டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் தொடக்க சுற்றில் பாகிஸ்தானை இந்தியா விக்கெட் இழப்பின்று 152 ரன்கள் எடுத்து வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் தொடரில் இங்கிலாந்து இந்தியாவை விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வீழ்த்தியது.

    இதை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் செய்திருந்தார். நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டி குறித்து இன்று பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டியளித்தார்.

    அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாபர் ஆசம் அளித்த பதில் பின்வறுமாறு:-

    அவரது டுவிட்டால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் சொல்வதற்கு மன்னிக்கவும், நான் அவரது டுவிட்டை பார்க்கவில்லை. ஆகவே, அது குறித்த அறிவு இல்லை. ஆனால், நாங்கள் எதிரணிக்கு எதிராக எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

    உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது. நாங்கள் கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவம். அணியை வழி நடத்தும் எனக்கு குறிப்பாக இந்த பெரிய மைதானத்தில் வெல்வது சிறந்த தருணம். எங்களுடைய 100 சதவீத முயற்சி வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. அதன்பின் சிறந்த முறையில் கம்-பேக் ஆனோம். பாகிஸ்தான் வீரர்கள் புலி போன்று போரிட்டனர். அங்கேயிருந்து தொடர்ந்து எங்கயுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த பார்ப்போம்'' என்றார்.

    ×