என் மலர்
புதுச்சேரி
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுவை அருகே கடந்த 26-ந் தேதி கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் வடதமிழகத்தில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளது. இதற்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுவை துறைமுகத்தில் நேற்றும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று முன் தினம் இரவு லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், விடுதலை நகர், புஸ்சி வீதி, ரோடியர் மில் திடல் உள்பட நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது.
இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்களும், மார்க்கெட் மற்றும் கடை வீதிக்கு சென்றவர்களும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பியதை காண முடிந்தது. சிலர் குடைகள் பிடித்த படியும், மழை கோட்டு அணிந்தும் சென்றனர். புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 1.7 செ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து நேற்று இரவு வரையும் மழை நீடித்தது. புதுவை கடல் பகுதி நேற்று வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. வரிசைகட்டி வந்த அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்து வந்து கரையை மோதியது. இதனை கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த மழை காரணமாக உழவர்கரை தொகுதி ஜவகர் நகரில் நேற்று இரவு மரம் ஒன்று திடீரென சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். மின்துறையினர் விரைந்து வந்து மின் இணைப்பை சரிசெய்தனர்.
இதேபோல் அஜந்தா சந்திப்பு அருகில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே பொதுப்பணி, நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு உள்ள ரவுடிகள் செல்போன் மூலம் தங்கள் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு வெளியில் குற்ற சம்பவங்களை நிகழ்த்துவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கைதிகளின் அறையில் இருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே முக்கிய கைதிகள் 5 பேரை வேறு மாநில சிறைக்கு மாற்ற கவர்னர் உத்தரவிட்டார்.
உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரவி என்கிற பாம்ரவி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். நேற்று முன்தினம் அவர் தனது அறையில் படுத் திருந்தார். அப்போது பிரபல ரவுடிகளான தடி அய்யனார், அஜித்குமார், தாடி அய்யனார் என்கிற ராஜதுரை ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர். அவர்கள் கையில் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகடுகளுடன் வந்து பாம் ரவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு பாம் ரவியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாம் ரவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட உடன் சிறை வார்டன்கள் அங்கு விரைந்து சென்று பாம் ரவியை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறை வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ் பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று மாஜிஸ்திரேட்டு அனுமதி பெற்று சிறையில் சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் பாம் ரவியும், தடி அய்யனாரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்து சென்றுள்ளனர். இதனால் அவர்கள் 2 கோஷ்டிகளாக செயல்பட்டுள் ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மோதல் சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது. ரவுடிகளான தடி அய்யனார் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளும், அஜித்குமார் மீது கொலை முயற்சி வழக்கும், தாடி அய்யனார் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண், ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் ஆகியோர் கலெக்டர் அருணை பார்ப்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றனர்.
கலெக்டரை பார்த்துவிட்டு அங்கிருந்து லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்தனர். தரை தளத்திற்கு வந்ததும் லிப்டின் கதவு திறக்கவில்லை. இதனால் முதலமைச்சர் உள்பட 3 பேரும் லிப்டின் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து 10 நிமிடம் போராடி கதவை திறந்தனர். அதன்பின்னர் 3 பேரையும் பத்திரமாக ‘லிப்டில்’ இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு அறிகுறி இல்லாமல் இருந்தால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண் சிறப்பாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் தன்னை வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் பணியில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று கலெக்டர் அருணுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த மே மாத இறுதியில் கவர்னர் கிரண் பேடி மதுகடைகளை திறக்க அனுமதி அளித்தார்.
அப்போது மதுவுக்கு 25 சதவீதமும், சாராயத்துக்கு 20 சதவீதமும் கொரோனா வரி நிர்ணயிக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலும், புதுவையிலும் விற்பனையாகும் 154 வகையான மதுவுக்கு தமிழகத்திற்கு இணையான விலை உயர்த்தப்பட்டது.
இதையடுத்து புதுவையில் தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை கடுமையாக உயர்ந்தது, முதலில் மே இறுதி முதல் ஆகஸ்டு வரையும், அதையடுத்து 2-வது முறையாக செப்டம்பர் முதல் நவம்பர் 30-ந் தேதி வரையும் கொரோனா வரி மதுவுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதனால் மது விற்பனை புதுவையில் கடுமையாக வீழ்ந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளும், விடுமுறை காலம் என்பதாலும் மதுவுக்கான கொரோனா வரியை ரத்து செய்ய வேண்டும் என மதுபான வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு அரசும் மதுவுக்கான கொரோனா வரியை நீக்க கவர்னர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பியது. ஆனால், கவர்னர், கொரோனா வரியை நீக்க அனுமதிக்க வில்லை.
இதனால், தற்போது டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை இவ்வரி 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கின் போது கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்த சில கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் புதுவை மாநில எப்.எல். 2 மதுபான வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் அருளானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும், மதுபானங்களின் விற்பனையும் பெருமளவில் சரிந்துள்ளதால் அரசு நீட்டிப்பு செய்துள்ள கொரோனா வரியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மதுபான வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வரி 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை ரத்து செய்யும் வரை மதுபான வகைகளை கொள்முதல் செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். தற்போதுள்ள இருப்பு 10 நாட்களுக்குதான் வரும்.
அதன்பிறகு கடைகளை திறந்தாலும் மது விற்பனைக்கு இருக்காது. கலால்துறை துணை ஆணையருக்கு தமிழ் தெரியாததால் எங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முடியவில்லை. தமிழ் தெரிந்த அதிகாரியை நியமிக்கவும் கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் கொரோனோ தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபான கடைகள், மதுபார்கள் மூடப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு மே 24-ந்தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்தது.
அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி காலம் முதலில் ஆகஸ்டு மாதம் வரை இருந்தது. அதையடுத்து நவம்பர் 30-ந் தேதி வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது.
தற்போது இந்த வரியை நீக்கக்கோரி கடந்த 29-ந் தேதி கோப்பு அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால், அதை கவர்னர் கிரண்பேடி ஏற்கவில்லை.
அதே நேரத்தில் கலால் துறை சார்பில் சிறப்பு கலால் வரியை மேலும் 2 மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார்.
அதன்படி இந்த உத்தரவு வரும் ஜனவரி 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலால்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கவர்னர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றில் இருந்து புதுவை தற்போது மீண்டு வருகிறது. விரைவில் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகியவை தொடர்ந்து வருகிறது.
அதனால் பண்டிகை காலம் முடிந்த பிறகு மீண்டும் இக்கோப்பை தாக்கல் செய்யலாம். அத்துடன் புதுவை அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவில் நிலவும் தொற்றின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.






