என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிருமாம்பாக்கம் அருகே குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் 2 தினங்களுக்கு முன்பு புதுவை டி.என்.பாளையத்தில் உள்ள சாராயக் கடைக்கு குடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சுப்பிரமணி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மலட்டாற்றில் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர்.

    அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் அங்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் அது சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    கரிக்கன் நகர் - டி.என்.பாளையத்திற்கு இடையே உள்ள மலட்டாற்றின் சிறிய பாலத்தில் சுப்பிரமணி நடந்து சென்றபோது தவறி விழுந்து செத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    புதுவையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    நிவர் புயல் காரணமாக புதுவை கிராமப்புறங்களில் பயிர் செய்திருந்த காய்கறி செடிகள் சேதமடைந்துள்ளன. இதனால் வெளியூர்களில் இருந்து புதுவைக்கு காய்கறிகள் வருகின்றனர். தொடர் மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலைஉயர்ந்துள்ளது.

    நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மகா தீபம் ஏற்றப்பட்டது. தீப திருவிழாவின் போது இந்துக்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம். எனவே புதுவையில் நேற்று பெரும்பாலான இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. இதே போல் குபேர் அங்காடியில் உள்ள மீன்மார்க்கெட் உள்பட பல்வேறு மீன் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    ஆனால் நேற்று காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அதன் விவரம் கிலோவுக்கு வருமாறு (அடைப்புக் குறிக்குள் பழைய விலை குறிப்பிடப்பட்டுள்ளது):-

    வெங்காயம்- ரூ.80 (ரூ.70), தக்காளி ரூ.30 (ரூ.24), கத்தரிக்காய் ரூ.100 (ரூ.45), உருளைக்கிழங்கு ரூ.60 (ரூ.50), பீன்ஸ் ரூ.24(ரூ.20), கேரட் - ரூ.55 (ரூ.40), பீட்ரூட் - ரூ.50 (ரூ.35)-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழை இழையின் விலையும் அதிகமாக இருந்தது.

    இப்படி காய்கறிகள் அதிக விலை வைத்து விற்கப்பட்ட போதிலும் வேறு வழியின்றி பொதுமக்கள் வாங்கிச் சென்றதை காண முடிந்தது. இதில் கத்தரிக்காய் மட்டும் 2 மடங்கு அதிகம் விலை வைத்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘நிவர் புயல் காரணமாக மழை அதிகமாக பெய்ததால் இங்குள்ள காய்கறிகள் சேதம் அடைந்துள்ளன. வெளிமாநிலத்தில் இருந்து தான் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழாவால் விலை குறையவில்லை. இன்னும் ஓரிரு நாட்களுக்கு பின்னர் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
    திரிபுரா மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    திரிபுரா மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை பா.ஜ.க.வினர் நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா. கலைநாதன், கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர் சேது செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தில் வாத்துப் பண்ணையில் 5 சிறுமிகள் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த 5 சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில், வாத்துப்பண்ணை உரிமையாளர் மற்றும் சிலர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின்பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மேற்பார்வையில் சிறப்பு விசாரணை அதிகாரியாக பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    சிறுமிகளை சீரழித்ததாக கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் (வயது 53), அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23), வானூர் வேட்டைக்காரர்களான சிவா, மூர்த்தி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் வாத்துப்பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில் காலாப்பட்டு சிறையில் இருந்து வாத்துப்பண்ணை உரிமையாளர், அவரது மகன் உள்பட 6 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

    மேலும் காட்டேரிக்குப்பம், கீழ்சாத்தமங்கலம், கோர்க்காடு ஆகிய பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று சிறுமிகள் தங்க வைக்கப்பட்ட இடத்திலும் விசாரிக்கப்பட்டது. இதன் முடிவில் சிறுமிகள் எந்தந்த வகையில் துன்புறுத்தப்பட்டனர், யார் யாருக்கு தொடர்பு உள்ளது? போன்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சிறுமிகளில் இருவரின் வளர்ப்பு தந்தையான மதகடிப்பட்டு அருகே உள்ள ஆழியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது55) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஆறுமுகத்தை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே நல்லவாடு பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமிகளின் தாய் சாந்தி கொலைக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாமா? என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுகுறித்து சாந்தி கொலையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூபாலனிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,935 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்கி உள்ளது.

    மொத்த பாதிப்பு 93,92,920 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 496 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,696 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88,02,267 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 42,298 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,935ஆக உயர்ந்துள்ளது.
    புதுவையில் 7 கார்களை வாடகைக்கு வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது 47). புதுச்சேரி ரெயின்போ நகர் முதல் குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். பெரிய நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு இயக்க அனுமதி பெற்றுள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்தார். அதை பயன்படுத்தி பலரிடம் கார்களை மாத வாடகைக்கு வாங்கினார்.

    அதன்படி ரெட்டியார்பாளையம் ஜெயா நகரை சேர்ந்த ராஜகுரு என்பவர் 5 சொகுசு கார்களை வாடகைக்கு கொடுத்துள்ளார். இதற்காக சில மாதங்கள் மட்டும் வாடகையை ராஜசேகரன் சரியாக கொடுத்து வந்ததாகவும் அதன்பிறகு தராமல் இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல் மூலக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக், புது நகரை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் தலா ஒரு காரை வாடகைக்கு கொடுத்து இருந்தனர். அவர்களுக்கும் வாடகை பணம் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தங்களது கார்களை திரும்ப ஒப்படைக்கும்படி அதன் உரிமையாளர்கள் கேட்டனர்.

    ஆனால் 7 கார்களையும் தராமல் தாமதம் செய்து வந்ததால் சந்தேகமடைந்து ராஜசேகரனை தொடர்ந்து வற்புறுத்தி கேட்ட போது மோசடி செய்து இருப்பதை அறிந்து கார் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் ராஜகுரு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    ஏற்கனவே இதேபோல் கார்களை வாடகைக்கு விடுவதாக 3 பேர் மோசடி செய்து இருப்பது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது பெரியகடை போலீசில் கார் மோசடி புகார் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    கடந்த 4½ ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு செயல்படாத எதிர்க்கட்சிகள் எல்லாம் தேர்தலுக்காக அறிக்கை விடத் தொடங்கி உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் இன்னும் 5 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதுவரை செயல்படாமல் இருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் தற்போது மாறி, மாறி அறிக்கை விட தொடங்கியுள்ளன. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அரசை குறைகூறி வருகின்றனர். எங்கள் அரசு மக்கள்நல திட்டங்களை வெகு வரைவாக நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு நிதி தராத போதிலும் கவர்னரின் அன்றாட தொல்லைகள் ஒருபுறம் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து இரவு, பகலாக உழைத்து வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம்.

    கொரோனா, புயல் தாக்கிய போது கூட மக்களை பார்க்காமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர் தற்போது புதுவையில் எந்த வளர்ச்சியும் இல்லை என்கிறார். அரசு பற்றி தவறான கருத்துகளை மக்களுக்கு கூறி வருகிறார். புயலை சமாளிக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உயிர் சேதம் இன்றி பாதுகாத்ததற்காக அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    கடந்த 4½ ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் எங்கே இருந்தார்? என்பதே தெரியவில்லை. தற்போது தேர்தல் வரும் நேரத்தில் அறிக்கை விடுகின்றார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு செவிசாய்க்காவிட்டாலும், நாங்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டாலும் அதனை எதிர்த்து, சமாளித்து நிர்வாகத்தை நடத்தும்போது எதிர்க்கட்சி தலைவர் மக்கள் பிரச்சினையை முன்வைத்து பேசாமல் தற்போது ஒட்டுமொத்தமாக மாநில அரசை குறை கூறுவது அரசியலுக்காக பேசுகிறார் என்பதை தவிர வேறொன்றும் இல்லை.

    மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமல்லாமல், அரும்பார்த்தபுரம் மேம்பாலம், காமராஜர் மண்டபம், திருக்காஞ்சி பாலம், புதுச்சேரி நகராட்சி கட்டிடம், பாகூர் கலாசார மையம், கிழக்கு கடற்கரை சாலையில் அழகான ஆடிட்டோரியம், காரைக்காலில் நீதிமன்ற வளாகம், நேரு மார்க்கெட், கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் என நிறைவேற்றி உள்ளோம்.

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கைபேசி மூலமாக கல்வி கற்க வசதியாக டேப் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். மக்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். ஆனால் செயல்படாத எதிர்க்கட்சிகள் அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக குறை கூறுகின்றனர். இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது.

    ரங்கசாமி தலைமையிலான ஆட்சி இருந்த போது, தங்களை எந்த அளவுக்கு வஞ்சித்தார் என்பது மாநில மக்களுக்கு தெரியும். தற்போது அமைதியாக, நிம்மதியாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சியினர் எதிரிகட்சியாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பது யார் என்ற உண்மை மக்களுக்கு தெரியும். எதிர்க்கட்சிகள் பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம். அரசு செய்த சாதனைகளை மக்களுக்கு பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளோம்.

    கொரோனாவை சிறப்பான முறையால் கையாண்ட மாநிலம் புதுவை என்று பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அரசின் நடவடிக்கையால் தான் கடந்த 10 நாட்களாக கொரோனா இறப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து மார்க்கெட்டிற்கு வரும் போது புதுவை மக்களுக்கு அது இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் மாநிலத்திற்கு மாநிலம் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அன்பழகன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி காங்கிரஸ் அரசு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசின் இட ஒதுக்கீட்டிலும், கட்டணம் நிர்ணயிப்பதிலும் ஏழை மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் சேர்த்து ஆண்டுக்கு சுமார் ரூ.5 லட்சம் வசூல் செய்கின்றனர்.

    அதே கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆண்டிற்கு சுமார் ரூ.20 லட்சம் அளவிற்கு வசூலிக்க காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு துணை போகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் இதர கட்டணம் என ஆண்டிற்கு சுமார் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் கீழ் இயங்கும் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியான ஜிப்மரில் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே கட்டணம். இப்படி மாறுபட்டு கல்வி கட்டணம் உள்ளது.

    தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணமாக ரூ.13,670 தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரியில் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இது தி.மு.க.வினருக்கு தெரியுமா?

    புதுச்சேரியில் தற்போது பெய்த பெருமழையால் பல சாலைகள் முற்றிலுமாக சீரழிந்து விட்டன. 2 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படாததால் உள்ளூர் சாலைகளை செப்பனிட முடியவில்லை. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலைகளை அரசு செப்பனிட வேண்டும்.

    தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. புதுச்சேரியில் ஆளும் கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஒரு பைசா கூட நிவாரண உதவி வழங்க முன்வராதது ஏன்? புதுச்சேரியில் மக்கள் படும் வேதனைகள் குறித்து எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், புதுச்சேரியில் ஆளும் கட்சியின் கூட்டணியாகவும் செயல்படும் தி.மு.க. மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் இரட்டை வேடம் போடுகிறது. இதனை உணர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நெட்டப்பாக்கம் அருகே குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    வில்லியனூர்:

    நெட்டப்பாக்கம் அருகே உள்ள கரியமாணிக்கம் கோழிப்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் ராஜராஜன் (வயது 40). இவரது மனைவி ஹேமா(26). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ஹேமாவை, ராஜராஜன் அடித்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர், மகளின் வீட்டுக்கு சென்று மருமகனிடம் நியாயம் கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்து ராஜராஜன் கத்தியால் வெட்டினார். இதில் மாமியார் செல்விக்கு இடது கையிலும், மாமனார் பெருமாளின் தலையிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து புகார் செய்ததன் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நிவர் புயலால் புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இடைக்கால நிவாரணமாக ரூ. 100 கோடி வழங்க வேண்டும்.

    இந்த நிவாரணம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது.

    புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு திங்கள்கிழமை புதுச்சேரிக்கு வர உள்ள நிலையில் முதல் அமைச்சர் நாராயணசாமி ரூ.100 கோடி கேட்டுள்ளது குறிப்பிடித்தக்கது.
    புதுவை கவிக்குயில் நகரில் வியாபாரியை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவிக்குயில் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 55). இவரது மகன் ராமச்சந்திரன்(24). இரும்பு ஷீட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். அந்த பொருட்களை தனது வீட்டின் அருகில் அடுக்கி வைத்திருப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த பிரசாந்த் என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது இரும்பு ஷீட் காணாமல் போனால் உன் மீது போலீசில் புகார் செய்வேன் என்று ராமச்சந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சீனிவாசனின் மகன் ராமச்சந்திரன், பிரசாந்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

    உடனே பிரசாந்த் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ராமச்சந்திரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடி, வீட்டின் முன் நின்று கொண்டிருந்த காரை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ராமச்சந்திரன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், அவரது கூட்டாளிகளான சீனு, ஸ்டீபன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    மார்க்கெட்டுகளில் சேரும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ள மார்க்கெட்டுகளில் சேரும் காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக வழங்குவது போல் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

    காய்கறி கழிவுகளை கிராமப்புறங்களில் மாடுகள் வளர்ப்பவர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்த வேண்டும். பயனாளிகளுக்கு மானியம் வங்கி கணக்கில் நேரடியாக சென்று சேருவது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் பேரிடர் காலத்தில் மீட்பு படை வீரர்கள் பயன்பெறும் வகையில் சூ, இருள் சூழ்ந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட விளக்குள் பொருத்திய ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படுகிறது. இதனை பேரிடர் மேலாண்மை மற்றும் சாலை பாதுகாப்பில் இருந்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தலைமை செயலாளர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினேன். அவரும் அதனை வாங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    ×