search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    7 கார்களை வாடகைக்கு வாங்கி மோசடி செய்தவர் கைது

    புதுவையில் 7 கார்களை வாடகைக்கு வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது 47). புதுச்சேரி ரெயின்போ நகர் முதல் குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். பெரிய நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு இயக்க அனுமதி பெற்றுள்ளதாக போலி ஆவணங்கள் தயாரித்தார். அதை பயன்படுத்தி பலரிடம் கார்களை மாத வாடகைக்கு வாங்கினார்.

    அதன்படி ரெட்டியார்பாளையம் ஜெயா நகரை சேர்ந்த ராஜகுரு என்பவர் 5 சொகுசு கார்களை வாடகைக்கு கொடுத்துள்ளார். இதற்காக சில மாதங்கள் மட்டும் வாடகையை ராஜசேகரன் சரியாக கொடுத்து வந்ததாகவும் அதன்பிறகு தராமல் இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல் மூலக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக், புது நகரை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் தலா ஒரு காரை வாடகைக்கு கொடுத்து இருந்தனர். அவர்களுக்கும் வாடகை பணம் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தங்களது கார்களை திரும்ப ஒப்படைக்கும்படி அதன் உரிமையாளர்கள் கேட்டனர்.

    ஆனால் 7 கார்களையும் தராமல் தாமதம் செய்து வந்ததால் சந்தேகமடைந்து ராஜசேகரனை தொடர்ந்து வற்புறுத்தி கேட்ட போது மோசடி செய்து இருப்பதை அறிந்து கார் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் ராஜகுரு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    ஏற்கனவே இதேபோல் கார்களை வாடகைக்கு விடுவதாக 3 பேர் மோசடி செய்து இருப்பது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது பெரியகடை போலீசில் கார் மோசடி புகார் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×