search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பழகன்
    X
    அன்பழகன்

    மாநிலத்திற்கு மாநிலம் திமுக இரட்டை வேடம்- அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

    மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் மாநிலத்திற்கு மாநிலம் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அன்பழகன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி காங்கிரஸ் அரசு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசின் இட ஒதுக்கீட்டிலும், கட்டணம் நிர்ணயிப்பதிலும் ஏழை மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் சேர்த்து ஆண்டுக்கு சுமார் ரூ.5 லட்சம் வசூல் செய்கின்றனர்.

    அதே கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆண்டிற்கு சுமார் ரூ.20 லட்சம் அளவிற்கு வசூலிக்க காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு துணை போகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் இதர கட்டணம் என ஆண்டிற்கு சுமார் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் கீழ் இயங்கும் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியான ஜிப்மரில் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே கட்டணம். இப்படி மாறுபட்டு கல்வி கட்டணம் உள்ளது.

    தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணமாக ரூ.13,670 தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரியில் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இது தி.மு.க.வினருக்கு தெரியுமா?

    புதுச்சேரியில் தற்போது பெய்த பெருமழையால் பல சாலைகள் முற்றிலுமாக சீரழிந்து விட்டன. 2 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படாததால் உள்ளூர் சாலைகளை செப்பனிட முடியவில்லை. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலைகளை அரசு செப்பனிட வேண்டும்.

    தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. புதுச்சேரியில் ஆளும் கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஒரு பைசா கூட நிவாரண உதவி வழங்க முன்வராதது ஏன்? புதுச்சேரியில் மக்கள் படும் வேதனைகள் குறித்து எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், புதுச்சேரியில் ஆளும் கட்சியின் கூட்டணியாகவும் செயல்படும் தி.மு.க. மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் இரட்டை வேடம் போடுகிறது. இதனை உணர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×