search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    கொரோனா வரியை ரத்து செய்யும் வரை மதுபான கொள்முதல் இல்லை- மது வியாபாரிகள் முடிவு

    கொரோனா வரியை ரத்து செய்யும் வரை மதுபான கொள்முதல் இல்லை என்று புதுவை மது வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த மே மாத இறுதியில் கவர்னர் கிரண் பேடி மதுகடைகளை திறக்க அனுமதி அளித்தார்.

    அப்போது மதுவுக்கு 25 சதவீதமும், சாராயத்துக்கு 20 சதவீதமும் கொரோனா வரி நிர்ணயிக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலும், புதுவையிலும் விற்பனையாகும் 154 வகையான மதுவுக்கு தமிழகத்திற்கு இணையான விலை உயர்த்தப்பட்டது.

    இதையடுத்து புதுவையில் தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை கடுமையாக உயர்ந்தது, முதலில் மே இறுதி முதல் ஆகஸ்டு வரையும், அதையடுத்து 2-வது முறையாக செப்டம்பர் முதல் நவம்பர் 30-ந் தேதி வரையும் கொரோனா வரி மதுவுக்கு நீட்டிக்கப்பட்டது.

    இதனால் மது விற்பனை புதுவையில் கடுமையாக வீழ்ந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளும், விடுமுறை காலம் என்பதாலும் மதுவுக்கான கொரோனா வரியை ரத்து செய்ய வேண்டும் என மதுபான வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு அரசும் மதுவுக்கான கொரோனா வரியை நீக்க கவர்னர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பியது. ஆனால், கவர்னர், கொரோனா வரியை நீக்க அனுமதிக்க வில்லை.

    இதனால், தற்போது டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை இவ்வரி 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கின் போது கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்த சில கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் புதுவை மாநில எப்.எல். 2 மதுபான வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்க தலைவர் அருளானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும், மதுபானங்களின் விற்பனையும் பெருமளவில் சரிந்துள்ளதால் அரசு நீட்டிப்பு செய்துள்ள கொரோனா வரியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து மதுபான வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா வரி 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை ரத்து செய்யும் வரை மதுபான வகைகளை கொள்முதல் செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். தற்போதுள்ள இருப்பு 10 நாட்களுக்குதான் வரும்.

    அதன்பிறகு கடைகளை திறந்தாலும் மது விற்பனைக்கு இருக்காது. கலால்துறை துணை ஆணையருக்கு தமிழ் தெரியாததால் எங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முடியவில்லை. தமிழ் தெரிந்த அதிகாரியை நியமிக்கவும் கோரியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×