search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் மழை பெய்தபோது எடுத்த படம்.
    X
    புதுவை மறைமலை அடிகள் சாலையில் மழை பெய்தபோது எடுத்த படம்.

    புதுவையில் பரவலாக மழை- மரங்கள் சாய்ந்து விழுந்தன

    புரெவி புயல் எதிரொலியாக புதுவையில் நேற்று பரவலாக மழை பெய்தது.
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுவை அருகே கடந்த 26-ந் தேதி கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் வடதமிழகத்தில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளது. இதற்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த புயல் நாளை (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுவை துறைமுகத்தில் நேற்றும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுவையில் நேற்று முன் தினம் இரவு லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், விடுதலை நகர், புஸ்சி வீதி, ரோடியர் மில் திடல் உள்பட நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது.

    இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்களும், மார்க்கெட் மற்றும் கடை வீதிக்கு சென்றவர்களும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பியதை காண முடிந்தது. சிலர் குடைகள் பிடித்த படியும், மழை கோட்டு அணிந்தும் சென்றனர். புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 1.7 செ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து நேற்று இரவு வரையும் மழை நீடித்தது. புதுவை கடல் பகுதி நேற்று வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. வரிசைகட்டி வந்த அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்து வந்து கரையை மோதியது. இதனை கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இந்த மழை காரணமாக உழவர்கரை தொகுதி ஜவகர் நகரில் நேற்று இரவு மரம் ஒன்று திடீரென சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். மின்துறையினர் விரைந்து வந்து மின் இணைப்பை சரிசெய்தனர்.

    இதேபோல் அஜந்தா சந்திப்பு அருகில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே பொதுப்பணி, நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
    Next Story
    ×