என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர் மழையால் ஊசுடு ஏரி நிரம்பி கடல்போல் மாறியதையொட்டி அங்கு படகு சவாரி தொடங்கியது. குழந்தைகளுடன் வலம் வந்து ஏரியின் அழகை பொதுமக்கள் உற்சாகமாக ரசித்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தூரத்தில் ஊசுடு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் 900 ஏக்கர் தமிழகத்துக்கும், 150 ஏக்கர் புதுச்சேரிக்கும் சொந்தமானது. இங்கு சுத்துக்கேணி கால்வாய் மூலமாக செஞ்சியாற்றில் இருந்து பெருமளவில் தண்ணீர் வருகிறது.

    ஆண்டுதோறும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்து செல்கின்றன. எனவே இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஊடுசு ஏரி முழுவதுமாக நிரம்பாமல் இருந்து வந்தது.

    கடந்த சில நாட்களாக நிவர், புரெவி புயலால் பெய்த தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் வடிகால் வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தநிலையில் வீடூர் அணையில் திறக்கப்பட்ட உபரிநீர் ஊசுடு ஏரிக்கு கூடுதலாக வந்ததால் வறண்டு கிடந்த இந்த ஏரி தற்போது நிரம்பியுள்ளது.

    புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் ஊசுடு ஏரியின் உயரம் 11.51 அடி ஆகும். தற்போது நீர்மட்டம் 10.5 அடியாக உள்ளது கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் வெளியே வரமுடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடங்கி கிடந்தனர். நேற்று காலை லேசாக வெயில் முகம் காட்டியதையடுத்து புதுவையில் இருந்து குடும்பம் குடும்பமாக ஊசுடு ஏரிக்கு வந்தனர். நீண்ட காலமாக நிரம்பாமல் கிடந்த ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை பார்த்து மெய்சிலிர்த்தனர்.

    அந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி விட்டு ஊசுடு ஏரியின் அழகை கண்டு களித்தனர். சிலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    கொரோனா காரணமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊசுடு ஏரி தற்போது நிரம்பி இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் மீண்டும் படகு சவாரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.


    சிறிய, பெரிய படகுகள், பெடல் படகுகள் ஏரியில் விடப்பட்டுள்ளன. 20 நிமிட சவாரிக்கு தலா ரூ.100, 40 நிமிட சவாரிக்கு ரூ.180, பெடல் படகில் 4 பேர் சவாரி செய்ய 30 நிமிடத்திற்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் படகு சவாரிக்கு பொதுமக்களை அனுமதித்து வருகிறார்கள்.

    நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் ஊசுடு ஏரிக்கு சென்று பார்வையிட்டனர். நீர்வரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீரை வெளியேற்றினால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை நாராயணசாமி கேட்டுக் கொண்டார். அதன்பின் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
    சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் நடராஜன் தனி முத்திரை பதிக்க மனதார வாழ்த்துகிறேன் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, கிரிக்கெட் விளையாட்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு படிப் படியாக கற்றுக்கொண்டு தமிழ்நாடு பிரீமியம் லீக் கிரிக்கெட் மூலம் பல வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த நடராஜன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே நடராஜனின் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முக்கிய காரணம். தன்னம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் சாதித்து விடலாம் என்பதை நடராஜன் நிரூபித்து இருக்கிறார். நடராஜனின் சர்வதேச கிரிக்கெட் பயணம் சிறப்புடன் தொடர வேண்டும். மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல அவருடைய பந்துவீச்சு தொடர்ந்து கைக்கொடுக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர் கிரிக்கெட் விளையாட்டில் தனி முத்திரை பதிக்க மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கம் மற்றும் வ.உ.சி. எழுச்சி பேரவை ஆகியவற்றின் சார்பில் தங்கள் சமுதாய பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்க பரிந்துரைக்கும் தமிழக அரசின் செயலை கண்டித்து காரைக்குடி ஆனந்த மடத்திலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டது. 

    ஊர்வலத்துக்கு வட்டார வெள்ளாளர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சேவுகன் பிள்ளை தலைமை தாங்கினார்.வ.உ.சி.எழுச்சி பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரியில் இன்று 35 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,244 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96.44 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 96,44,222 ஆக உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 36,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 482 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,182 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,00,792 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 41,970 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,244ஆக உயர்ந்துள்ளது.
    திருபுவனை அருகே தனியார் வங்கி முன் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டை அணியாமல் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். திடீரென்று அங்கு கிடந்த கேபிள் டி.வி. வயரை கழுத்தில் மாட்டிக்கொண்டு வங்கி முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புதுவை மாநில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்கும் வரை சென்டாக் கலந்தாய்வை நடத்தக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் தனியார் கல்லூரிகள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடம் பெறுவதற்கான சட்டவரையறை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக விரைந்து முடிவு எடுக்கவும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    லாஸ்பேட்டை சுப்ரமணிய சாமி கோவில் நிலத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் ஒதுக்குவது தொடர்பான அரசின் கோப்புக்கு சட்டத்துறையின் கருத்துகளை கேட்க அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான தொகையை, கடன் வாங்கி செலுத்துவதற்கும், குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் தலைமையில் உணவு ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர்கள் பணி செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகள், கூடுதல் செலவினங்கள் போன்றவற்றை தீர்க்க உள்ள நடுவர் அமைப்புக்கு பதிலாக பிரச்சினைகளை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்க்க அரசு சார்பில் அனுப்பப்பட்ட கோப்பின் மீது எந்த முடிவும் அறிவிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவித்தொகையாக ரூ.29 கோடி வழங்கவும், மோட்டார் வாகன வரி 2 ஆண்டுக்கான தொகை ரூ.21 கோடியை தள்ளுபடி செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் 719 வீடுகள் கட்டவும் அனுமதி அளித்துள்ளார்.
    புதுவையில் மின்வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்கால்:

    புதுவையில் மின்வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து புதுச்சேரி அரசு, அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவை மின்துறை ஊழியர்கள் தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் மயில்வாகனம் தலைமையில் மாவட்ட மின்துறை அலுவலகம் முன் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் யூனியன் பிரதேசங்கள் மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது, மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    19 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில், 70 கூட்டுறவு ரேஷன் கடைகளில், 120 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும், ரேஷன் கடை வாயிலாக வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி, நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக, பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ரேஷன் கடைகள் மூடப்பட்டன.

    இதன் காரணமாக, ரேஷன்கடை ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வேலை மற்றும் சம்பளம் இன்றி தவித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 38 மாத சம்பளம் வழங்க வேண்டும், ரேஷன் கடைகளை உடனே திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் இலவச அரிசியை அண்மையில் அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு வழங்க, அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்க அலுவலக வளாகத்தில், மாவட்ட துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், காரைக்கால் கூட்டுறவு ரேஷன் கடை சங்க தலைவர் குமாரசாமி, மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குனர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதில் கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர் போராட்டக்குழு தலைவர் ரஹ்மத்பாஷா, செயலாளர் மனோகர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ரேஷன் கடை ஊழியர்கள், நிலுவையில் உள்ள 38 மாத சம்பளத்தில் 19 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கூட்டுறவு பால் வழங்கும் சங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்காலில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கோட்டுச்சேரியை அடுத்த பூவம் மாரியம்மன் கோவில் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காரைக்கால் நேருநகர் குறிஞ்சி வீதியை சேர்ந்த செய்யது இப்ராகிம் (வயது 32) என்பதும், அவர் தனது நண்பர் விஜயபாபுவுடன் சேர்ந்து கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    வானூர் அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பொம்மையார் பாளையத்தில் புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்மையார் பாளையத்தில் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமம் கடல்பகுதியை ஒட்டியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக இங்குள்ள வீடுகள் இடிந்தவண்ணம் உள்ளது. எனவே பொம்மையார்பாளையம் மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி தூண்டில்வளைவு அமைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல்நாட்டப்பட்டது. ஆனால் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவர்கள் ஆதங்கப்பட்டனர்.

    இன்று காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பொம்மையார் பாளையத்தில் புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது தூண்டில்வளைவு அமைக்க கோரி கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். மறியல் செய்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    வில்லியனூர் அருகே மளிகை கடையில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 42). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிச்சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் விமல்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மளிகை கடையில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.54 கோடி செலுத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி மத்திய அரசு உத்தரவின் படி இலவச அரிசிக்கு பதில் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த உத்தரவிட்டார். இதற்கு ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருப்பினும் தொடர்ந்து வங்கி கணக்கில் தான் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3 மாத இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இலவச அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த ரூ.54 கோடிக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி 1லட்சத்து 75 ஆயிரம் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.2,200, 1லட்சத்து 50 ஆயிரம் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். கொரோனா காலத்திற்கு, மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு மாதம் தலா 5 கிலோ அரிசிக்கான பணம் வீதம் 8 மாத காலத்திற்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×