என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு-குருமாம்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேதராப்பட்டு கிராமம்,

    சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, முத்தமிழ் நகர் ஒரு பகுதி, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    • மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • ஏற்பாடுகளை ஓ.பி.சி. அணியின் பொருளாளர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக புதுவை பா.ஜனதா ஓ.பி.சி. அணியின் தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமையில் நெல்லித்தோப்பு பகுதியில் மோடி தொடங்கி வைத்த விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இத்திட்டத்துக்கு மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கைவினை தொழிலாளர்கள் பயன் அடையும் வகையில் அமைந்துள்ளது.

    இதனை பொதுமக்கள் பார்த்து பயனடைந்தனர். இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியின் போது 18தொழில்களின் அஞ்சல் தலைகள் அடங்கிய பிரதமர் மோடி வெளியிட்ட தொகுப்பையும் பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி

    யடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், ஓ.பி.சி. அணியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஓ.பி.சி. அணியின் பொருளாளர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

    • மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் நடந்தது.
    • காவ்யாவின் தாய் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் தேவாநகரை சேர்ந்தவர் அமிர்தமுருகன் புஷ்கரன். இவரது மனைவி லலிதா (வயது 50).

    பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களான இவர்களுக்கு விக்னேஷ்வரி (29), காவ்யா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். காவ்யா பிரான்சில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

    இதில் மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சிக்காக காவ்யா புதுவைக்கு வந்திருந்தார். தொடர்ந்து பெற்றோருடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் காவ்யா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து காவ்யாவின் தாய் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் காவ்யாவை அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையை சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரான்ஸ் மருத்துவ கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காவலர் பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
    • 30 வருடம் பணிமுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காவலர் பொதுநல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் புதுவை கவர்னர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    6-வது சம்பள கமிஷன் உத்தரவு அடிப்படையில் புதுவை காவல் துறையில் 10 வருடம் பணி முடித்த போலீசாருக்கு ஏட்டு பதவியும், 20 வருடம் பணி முடித்த ஏட்டுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் அதுபோல் 30 வருடம் பணிமுடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியும் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் புதுவை போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று புதுவை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால், ஜனாதிபதியின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு தற்போது புதுவை காவல் துறையில் நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்யபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பணியில் இருக்கும் போலீசாருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் அவர்கள் சிறப்பாக பணி செய்ய முடியாமல் மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் 10 வருடம் பணிமுடித்த போலீசாருக்கு தலைமை காவலர் (ஏட்டு) பதவி உயர்வு அளித்து வருகிறது.

    அதுபோல் புதுவை காவல்துறையில் நேரடி தேர்வை ரத்து செய்து விட்டு சீனியாரிட்டி அடிப்படையில் போலீசாருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
    • உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கலசாபி ஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடை விடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப் பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

    சதூர்த்தி விழாவை யொட்டி புதுவை கொசப்பாளையம் முத்து விநாயகர், காராமணிக் குப்பம் சுந்தர விநாயகர், முத்தியால்பேட்டை ஆதி விநாயகர், தேங்காய்திட்டு வரசித்தி விநாயகர், முதலி யார்பேட்டை ஜெயகுண்ட விநாயகர், ஆதிங்கப்பட்டு கற்பூர சுந்தர விநாயகர், சாரம் முத்து விநாயகர், தட்டாஞ்சாவடி கற்பக விநாயகர், சொக்கநாத விநாயகர் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும், விநாயகர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சேவா வாரம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதன் ஒரு அங்கமாக புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நகர மாவட்ட பா.ஜனதா சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார்.

    ரத்ததான முகாமை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில பொதுச்செயலாளர் அமல்ராஜ், மாநில சமூக ஊடகப்பிரிவு சார்லஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளர் சத்யா, அரவிந்த், ராஜ்குமார் துணைத் தலைவர் மகேந்திரன், செயலாளர் விஷ்ணு, வேல்முருகன், ராஜ்மோகன், தொகுதி தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி வழங்கினார்
    • 500 பெண்களுக்கு சேலை மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவை அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநிலம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுவை சுதேசி மில் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணை செயலாளர் லாவண்யா, காரைக்கால் மாவட்ட செயலாளர் முத்து என்ற முகமது சித்திக் மற்றும் ரகுபதி, தண்டபாணி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் மணி வண்ணன் என்ற மார்ட்டீன், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு சேலை மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    விழாவில் துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி பேசியதாவது:-

    ஏழை-எளியவர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் என்ன? என்பதை எல்லாம் புரிந்து ஆட்சி மற்றும் அரசியலை தமிழ்நாட்டில் நடத்திய காட்டியவர் அண்ணா. இவரை போன்று சிந்தனையாளர், பண்பாளர் இனி பிறப்பது இனி அறிது.

    அறிவார்ந்த பேச்சை மட்டுமே பேசக்கூடியவர். அவரது கொள்கையை பின்பற்றியதாலேயே எம்.ஜி.ஆரை லட்சோபலட்ச தொண்டர்கள் ஏற்று அவரை ஆட்சியில் அமர வைத்தனர்.

    ஒப்பற்ற தலைவரான எம்.ஜி.ஆரின் வழியில் நின்று அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரான தினகரன் திகழ்ந்து வருகிறார். அவரது கரத்தை வலுப்படுத்தி ஆட்சியில் அமர்த்த வேண்டியது நமது கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

     இந்த நிகழ்ச்சியில் மாநில அணி செயலாளர்கள் சீத்தாராமன், காண்டீபன், புஷ்பா, ஜான்சன், ஜெகதீஷ், இளம்வழுதி, தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமரவேல், செல்லா என்ற தமிழ்செல்வன், ராமச்சந்திரன், பரிதிமால் கலைஞன், கலியமூர்த்தி மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    • முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜனதா கட்சி உழவர்கரை மாவட்ட தலைவர் பிரபாகரன் ஏற்பாட்டில் மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன், கோபதி முன்னிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் இளைஞர் அணி நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர்.

    முகாமை மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் இளைஞர் அணி மாநில துணை தலைவர் ராக் பேட்ரிக் பொதுச் செயலாளர் வேல்முருகன் உழவர்கரை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் விஜயகுமார், செயலாளர்கள் ஹரிஷ், ஜோசப், விமல், பாலாஜி, அசோக் குமார், சரவண ராஜன், சிவகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர் நவீன் குமார் இந்திராநகர் இளைஞரணி தலைவர் ஸ்டீபன் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பெரிய மார்க்கெட் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வியாபாரம் செய்ய சென்றார்.
    • மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 49) இவர் பெரிய மார்க்கெட் காய்கறிகடையில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை இவர் பெரிய மார்க்கெட் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வியாபாரம் செய்ய சென்றார். பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் பழனி அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து பழனி பெரிய கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். மேலும் அங்குள்ள

    சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் கடைபிடித்து இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு லோக்சபா தேர்தலின்போது நாங்கள் வெற்றிப் பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என ஆட்சிக்கு வந்தது. ஆனால் தர வில்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல்- ரூ 65, டீசல்- ரூ 55 , கியாஸ் சிலிண்டர் ரூ 450 மானியத்துடன் கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. டீசல் சமையல் எரிவாயு விலை அனைத்தும் எகிறிவிட்டது.

    நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மறைப்பதற்காக ஜி-20 மாநாட்டினை நடத்தி 4 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வீணடித்துள்ளார்.

    நூற்றுக்கணக்கான அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்தும் உள்ளார். சிறுபான்மை, தலித் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    புதுச்சேரியை ஊழல் இல்லாத பெஸ்ட் மாநிலமாக மாற்றுவேன் என்று மோடி கூறினார். ஆனால் புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.

    மது கடைகளை திறந்து விட்டதால், மக்களுக்கு அமைதி இல்லை. கல்வி தரம் குறைந்து விட்டது. வியாபாரம் படுத்துவிட்டது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வருகிற லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • புறநகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

    புதுவையிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை இன்று மாலை 6 மணிக்கு பூஜை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்ப டுகிறது.

    காலாப்பட்டில் 19 அடி உயரத்திலும், பெரியார் நகர், வைத்திக்குப்பத்தில் 14 அடி உயரத்திலும், கோரிமேடு, காட்டே ரிக்குப்பம் பகுதிகளில் 12 அடி உயரத்திலும், வில்லியனூரில் 10 அடி உயரத்திலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் படுகிறது.

    இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவையின் அனுமதியோடு புதுவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    இதுதவிர லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, ரெட்டிபார்பாளையம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை உட்பட புதுவை நகர், புறநகர் பகுதிகளில் 5 அடி முதல் 21 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    பல்வேறு ஆட்டோ, கனரக வாகன தொழிலாளர் சங்கங்கள், சமூக அமைப்புகள், இளைஞர் நல அமைப்புகள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    புதுவையின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கடலில் விஜர்சனம் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கிராமப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 20-ந் தேதி காலாப்பட்டு மற்றும் நல்லவாடு கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது. 2-ம் கட்டமாக நகர்ப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் 22-ந் தேதி கடற்கரை சாலையில் 3 கிரேன் மூலம் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர், புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×