என் மலர்
புதுச்சேரி

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி பேசிய போது எடுத்தபடம்.
அ.ம.மு.க. சார்பில் 500 பெண்களுக்கு சேலை
- கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி வழங்கினார்
- 500 பெண்களுக்கு சேலை மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி:
புதுவை அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநிலம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுவை சுதேசி மில் அருகே நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணை செயலாளர் லாவண்யா, காரைக்கால் மாவட்ட செயலாளர் முத்து என்ற முகமது சித்திக் மற்றும் ரகுபதி, தண்டபாணி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் மணி வண்ணன் என்ற மார்ட்டீன், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு சேலை மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில் துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி பேசியதாவது:-
ஏழை-எளியவர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் என்ன? என்பதை எல்லாம் புரிந்து ஆட்சி மற்றும் அரசியலை தமிழ்நாட்டில் நடத்திய காட்டியவர் அண்ணா. இவரை போன்று சிந்தனையாளர், பண்பாளர் இனி பிறப்பது இனி அறிது.
அறிவார்ந்த பேச்சை மட்டுமே பேசக்கூடியவர். அவரது கொள்கையை பின்பற்றியதாலேயே எம்.ஜி.ஆரை லட்சோபலட்ச தொண்டர்கள் ஏற்று அவரை ஆட்சியில் அமர வைத்தனர்.
ஒப்பற்ற தலைவரான எம்.ஜி.ஆரின் வழியில் நின்று அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரான தினகரன் திகழ்ந்து வருகிறார். அவரது கரத்தை வலுப்படுத்தி ஆட்சியில் அமர்த்த வேண்டியது நமது கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அணி செயலாளர்கள் சீத்தாராமன், காண்டீபன், புஷ்பா, ஜான்சன், ஜெகதீஷ், இளம்வழுதி, தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமரவேல், செல்லா என்ற தமிழ்செல்வன், ராமச்சந்திரன், பரிதிமால் கலைஞன், கலியமூர்த்தி மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.






