என் மலர்tooltip icon

    விருதுநகர்

    நரிக்குடி அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரியாபட்டி:

    நரிக்குடி அருகே உள்ள எம்.புதுக்குளத்தில் தொடர்ந்து மழை பெய்தது. ஆதலால் அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளன.

    அத்துடன் தேங்கியுள்ள மழைநீரில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைக்க தொடங்கி விட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கருப்பசாமி, வைரவன் ஆகியோர் கூறியதாவது:-

    காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் இங்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து விட்டன.

    நாங்கள் பயிர் சாகுபடி செய்ய நகைகளை அடகு வைத்து கடன் பெற்று உள்ளோம். கடன் வாங்கி கஷ்டப்பட்ட வளர்த்து வந்த நெற்பயிர்கள் எல்லாம் தற்போது பெய்த மழையினால் சாய்ந்து விட்டன. தண்ணீர் வயல்களில் தேங்கி நிற்பதால் முளைக்க ஆரம்பித்து விட்டது.

    கடினப்பட்டு சாகுபடி செய்ய செலவுத்தொகையை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை பார்வையிட்டு சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தெய்வானை, மாவட்ட துணைத்தலைவர் ரேணுகாதேவி, தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் நகர தலைவர் மைதிலி, நகர செயலாளர் மேரி, நகர பொருளாளர் பிரியா, துணைத்தலைவர் முத்துலட்சுமி, துணை செயலாளர் மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு முன்பாக விறகு அடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. .

    அதன் அருகே 2 கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, அதன் முன்பு மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தின் போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி கூறியதாவது:-

    சமையல் கியாஸ் விலை உயர்வால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. பெண்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி செல்லக்கூடிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகாசியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி திருத்தங்கல் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் பவுன்ராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் மாரீஸ்வரன் (வயது 10). நேற்று காலை மாரீஸ்வரன் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சார வயரை தெரியாமல் தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் மாரீஸ்வரன் பரிதாபமாக இறந்தான். 

    இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அறுந்து கிடந்த மின்சார வயரை தெரியாமல் தொட்டு சிறுவன் மாரீஸ்வரன் இறந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வெள்ளூரைச்சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகள் பாண்டீஸ்வரி (வயது 20). கல்லூரி மாணவியான இவர் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது முன்பகை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி (59), மற்றும் அவரது மகன் சரவணன் (27) ஆகிய இருவரும் பாண்டீஸ்வரியுடன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதுபற்றிய புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தசாமி மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய 479 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நெல்லை தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத்தலைவர் கண்ணபிரான் பாண்டியன் தேவேந்திரகுல வேளாளர் என மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தியும், பட்டியல் இனத்தில் இருந்து நீக்கக் கோரியும் அனுமதி இல்லாமல் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தியதாக கூறைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பெண்கள் உள்பட 479 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிவகாசி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையொட்டி போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்ததாக ராமச்சந்திரன் (வயது 49), சரவணன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ராஜபாளையம் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் கோட்டம் முடங்கிய சாலையில் உள்ள உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அய்யனார் கோவில் பகுதி, ராஜுக்கள் கல்லூரி பகுதி, மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையபுரம், சம்மந்தபுரம், சின்ன, பெரிய சுரைக்காய்பட்டி பகுதிகள் பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவரம்பட்டி, ரெயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பெரியகடை பஜார் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    அதேபோல சேத்தூர் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம், ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மாலதி கூறினார்.
    வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலைப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று வந்தனர். கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் வழுக்கல் பாறை, மாங்கனி ஓடை, சின்ன படிவெட்டு பாறை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஒடை, கருப்பசாமி கோவில் ஓடை ஆகியவை உள்ளன.

    இந்த மலைப்பாதைகளில் நீர்வரத்து வரக்கூடிய பாதைகள் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், மழை காலங்களில் பக்தர்கள் நீரோடை பகுதிகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவும், மழைக்காலங்களில் பக்தர்கள் கோவிலுக்கு ஆற்றை கடந்து சென்று திரும்பும் வகையிலும் பாலங்கள் அமைப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மலைப்பாதையில் கோண தலைவாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வரக்கூடிய பல்வேறு இடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு இன்ஸ்பெக்டர் மாரிக்கனி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் சதுரகிரி கோவிலில் தங்கியிருந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் ராமசாமி மற்றும் அவரது மகள் அஞ்சலியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ரமேஷ் ஓட்டினார்.

    அப்போது மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து கார் மீது இரும்பு கம்பியால் தாக்கியதில் காரின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.

    இதில் சசிகலா புஷ்பா உள்பட 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 167 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 157 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 841 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3262 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை. வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப் படவில்லை.

    இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 16 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. 1,310 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 3,200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை தாமதமாக அறிவிப்பதுடன், தெரிவிக்கும் முடிவுகளையும் முழு விவரங்களுடன் தெரிவிக்காத நிலையே நீடிக்கிறது. இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை அருகே மூதாட்டியிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி லட்சுமி அம்மாள் (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் வந்த ஒருவர், குடிக்க தண்ணீர் கேட்டார். அப்போது லட்சுமி அம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றார். 

    இதுகுறித்து லட்சுமியம்மாள் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தேடி வந்தனர்.

    இந்தநிலையில் தனிப்படை போலீசார் பாலமுருகன், ராமமூர்த்தி ஆகியோர் நான்கு வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும் படி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விளாத்திகுளம் புதூரை சேர்ந்த அருணகிரிநாதன் (32) என்பதும், லட்சுமியம்மாளிடம் இருந்து நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3 பவுன் செயினை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 148 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    15,817 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,240 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 103 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது. 1,640 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 3,200 மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.

    முடிவுகள் தாமதமாவதால் நோய் பாதிப்பின் உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்தால் தான் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கும் நிலை ஏற்படும்.

    ஆனால் மாவட்ட சுகாதாரத்துறை அது பற்றி அக்கறை கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை. விருதுநகர் பகுதியில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக அவருடன் பணியாற்றும் போலீசாருக்கும் தொடரில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை நடத்தி பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

    ஆனாலும் இதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதே நிலைதான் பிற நிகழ்வுகளிலும் நடைபெறுகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் தூய்மைப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இதன் மூலமே அவர்கள் நலன் பாதுகாக்கப்படுவதுடன் அவர்கள் மூலம் நோய் பரவாமல் இருக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
    ×