என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகரில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள சோலைக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 73). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவரும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் துரைப்பாண்டி (38) என்பவரும் ஒன்றாக மது குடித்தனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் பிச்சையின் மோட்டார் சைக்கிள் சாவி மாயமானதாக தெரிகிறது. இதனை துரைப்பாண்டி தான் எடுத்திருப்பார் என சந்தேகம் அடைந்தார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி, பிச்சையை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

    சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் சாத்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள இடுகாடு அருகில் ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரித்த போது அவர் ஓடைதெருவை சேர்ந்த சாகுல்அமீது மகன் நாகூர்மைதீன் (வயது 32) என தெரியவந்தது. அவர் வைத்து இருந்த பையை பரிசோதித்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் சோர்வுடன் காணப்பட்டார்.

    இதுகுறித்து அவரது தாய் மாணவியிடம் விசாரித்தபோது, கடந்த ஆண்டு முதல் தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் கூறி அழுதார். இதைக்கேட்டு மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மாணவியின் தாய் விருதுநகர் நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி முத்துப்பாண்டி (வயது42) என்பவரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவிலாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. தற்போது மழை பெய்ததில் நீர்வரத்து அதிகரித்து 27.17 அடியாக உயர்ந்தது.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பிளவக்கல் பெரியார், மற்றும் கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் பெரியார் அணையின் முழு கொள்ளளவு 47.56 அடியாகும். கோவிலாறு அணையின் முழு கொள்ளளவு 42.64 அடி ஆகும்.

    இந்த 2 அணைகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை முக்கிய நீராதாரமாக உள்ளது. அங்கு பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து சேருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அந்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார், கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்தது. நேற்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 29.27 அடியாக உயர்ந்தது. கோவிலாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. தற்போது மழை பெய்ததில் நீர்வரத்து அதிகரித்து 27.17 அடியாக உயர்ந்தது.

    இந்த நிலையில் 2 அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் அதை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது விவசாயிகள் நெல்நடவு செய்வதற்காக ஆயத்த பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.
    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை கண்டித்து விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    விருதுநகர்:

    தமிழ்நாடு அனைத்து போக்குவரத்து கழக சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை கண்டித்து விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொ.மு.ச.மண்டல பொதுச்செயலாளர் ராஜசெல்வம் தலைமை தாங்கினார். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., வங்கி, காப்பீடு, ரெயில்வே , நிலக்கரி சுரங்கம், இந்திய பாதுகாப்புத்துறை தொழிற்சாலை மற்றும் சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தினால் அனைத்து அரசு பஸ்களும் தாமதமாக கிளம்பிச் சென்றன.

    தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் மாடசாமி, ஏ.ஐ.யு.சி . மத்திய துணை செயலாளர் மூர்த்தி, சி.ஐ.டி.யு. கிளைச் செயலாளர் பாண்டி, ஐ. என். டி. யு. சி. கிளைச் செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    காயமடைந்த வியாபாரி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    சிவகாசி:

    திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் மேற்குரதவீதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு நேரங்களில் கடையிலேயே படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இரவு ராஜேந்திரன் தனது கடையின் வெளியே படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (22), மாரீஸ்வரன் (18) ஆகியோர் ராஜேந்திரனிடம் பீடி கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் அவர் அருகில் இருந்த நாய் குரைத்துள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் அங்கிருந்த இரும்பு குழாயை எடுத்து அவரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    விருதுநகரில் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் முகமது சம்சுதீன் (வயது 37) ஓட்டல் நடத்தி வருகிறார்.

    நேற்று இவரது ஓட்டலுக்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாப்பிட்டார். பின்னர் அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, முகமது சம்சுதீனிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணம் தர முடியாது என மிரட்டினார்.

    உடனே ஓட்டலில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியினர் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை பிடித்து கத்தியை பறித்தனர். பின்னர் இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், கத்தியை காட்டி மிரட்டியது நாகூரை சேர்ந்த அப்துல்பதாக் என தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    ராஜபாளையம் அருகே வெடிகுண்டுகளுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜ புரம், கணபதி சுந்தர நாச்சியார் புரம் கிராம மலையடிவார பகுதியில் அடிக்கடி நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவதாக புகார்கள் உள்ளன.

    இதனை தடுக்க வனத் துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் குருசாமி மற்றும் வனக்காப்பாளர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லு பத்தி பீட் தொட்டி அம்மன் கோவில் அருகே ரோந்து சென்றபோது 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் இருவர் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். மற்ற 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் பிடிபட்டனர்.

    விசாரணையில் அவர்களது பெயர் ராம் அழகு (வயது 43), பிள்ளையார் (31) என்பதும், கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகள், 9 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு அரிவாள் போன்றவை கைப்பற்றப்பட்டன. தப்பி ஓடிய சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைக்கனி(28), காளிராஜ் (25) ஆகியோரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சிவகாசி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி வெள்ளத்தாய் (வயது 45). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் அரசு மருத்துவமனை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திடீரென வந்த மாடுகளால் நிலைத்தடுமாறி முத்துராஜ் மற்றும் அவரது மனைவி வெள்ளத்தாய் இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக இருவரையும் சேர்த்தனர். இதில் வெள்ளத்தாயிக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    சிவகாசியில் வீட்டில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகாசி:

    சிவகாசி, கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் (வயது 58). இவரது 2-வது மகள் ஜென்சி கிறிஷ்டினாவுக்கும், மதுரையை சேர்ந்த ரவீன்சித்தார்த் என்பவருக்கும் கடந்த 20-ந் தேதி திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இருவீட்டையும் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் ஜென்சி கிறிஷ்டினா தான் அணிந்து இருந்த நகைகளை கழற்றி கபோர்டில் வைத்தபோது அதில் ஏற்கனவே இருந்த 16 பவுன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆசிர்வாதம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான திருவண்ணாமலை பகுதியில் அதிகாலை நேரங்களில் மோட்டார்சைக்கிளில் மணலை மூட்டைகளாக கட்டி கடத்துவதாக சப்-கலெக்டர் பிரித்திவிராஜ்க்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து மல்லி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சாலையில் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் (வயது39) என்பவர் மோட்டார் சைக்கிளில் மணலை மூட்டையாக கட்டி கடத்தி வந்தார். அவரை பிடித்து மணல் கடத்திய சுந்தரமகாலிங்கத்தை கைது செய்து மோட்டார் சைக்கிள், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் நிலையத்தில் ஒப்படைத்தனர். நகர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மேற்படி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயனடையுமாறு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் திருச்சுழி ரோட்டில் உள்ள ஸ்ரீ சவுடம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியிலும், நாளை (வெள்ளிக்கிழமை) ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகபாண்டியன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    எனவே தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மேற்படி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயனடையுமாறு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஹேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.
    ×