என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
    • ராஜபாளையம் அருகே தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சேத்தூர் சேவுகப்பாண்டி யன் அரசு மேல்நிலை பள்ளியிலும், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    நான் எத்தனையோ பள்ளி நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தாலும் சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் நடந்த யோகா, பேச்சு மற்றும் நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இதற்காக மாணவ, மாணவிகளையும், ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன். இந்த பள்ளி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையான வகுப்பறைக்கட்டிடத்திற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கி புதிய வகுப்பறைக்கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.

    சேத்தூர் பள்ளியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்த பள்ளியில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கலையரங்கமும், மாணவ, மாணவிகள் அமரும் இருக்கைகளும் வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கற்பகம்மாள், சுந்தரராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாளையம்பட்டி துணை மின்நிலைத்தில் பசுவநாதன் என்பவர் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
    • மின்வாரிய அலுவலக வளாகத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசுவநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பாளையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி துணை மின்நிலைத்தில் பசுவநாதன் என்பவர் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரிடம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த வீரம்மாள் தனது வீட்டின் பின்புறம் உள்ள மின்கம்பத்தை மாற்றி வேறு பகுதியில் அமைக்குமாறு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அப்போது மின் கம்பத்தை மாற்றி அமைக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரம்மாள் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் கொடுத்தார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின்படி ரசாயணம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை இன்று வீரம்மாள் உதவி மின்செயற்பொறியாளர் பசுவநாதனை சந்தித்து கொடுத்தார்.

    அப்போது மின்வாரிய அலுவலக வளாகத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசுவநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முரளி ராஜ் பாரதி படித்து முடித்து வேலை தேடி வந்தார்.
    • கடந்த மாதம் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் இறந்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சிதம்பரம் நகரை சேர்ந்தவர் சிதம்பரம். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி சுபா (வயது 55). இவர்களுக்கு முரளிராஜ் பாரதி (35) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    முரளி ராஜ் பாரதி படித்து முடித்து வேலை தேடி வந்தார். கடந்த மாதம் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் இறந்தார். கணவரின் பிரிவை சுபாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக அவர் விரக்தியுடன் காணப்பட்டார்.

    நேற்று சிதம்பரம் இறந்த 30-வது நாள் அனுசரிக்கப்பட்டது. வாழ்க்கையில் விரக்தியில் இருந்த சுபா கணவரின் இறப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு மகன் முரளி ராஜ் பாரதியும் சம்மதித்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று இரவு இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை தாய்-மகன் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் 'நாங்கள் அப்பாவை தேடி செல்கிறோம். நாங்கள் தற்கொலை செய்வதற்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவுடன் இருந்த நாட்கள் மிகவும் சந்தோசமானவை. யாரும் கவலைபட வேண்டாம். அனைவரும் நீண்ட காலம் நலமுடன் வாழ்க' சுபா கையெழுத்திட்டு எழுதியிருந்தார்.

    இதே போல் முரளி ராஜ் பாரதியும் ஆங்கிலத்தில் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவின் பிரிவை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். இந்த 2 கடிதங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பட்டாசு கிப்ட் பாக்ஸ்களுக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.
    • கிப்ட் பாக்ஸ்கள் தற்போது சிவகாசி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் வீடுகளில் தயாராகி வருகிறது.

    சிவகாசி:

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல ரக பட்டாசுகளை பெட்டிகளில் அடைத்து கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பலதரப்பட்ட வெடிகளை ஒரே பெட்டிக்குள் வைத்து விற்பது சம்பந்தமாகவும் பல்வேறு நிபந்தனைகளை வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் கிப்ட் பாக்ஸ்களுக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் விலையிலான கிப்ட் பாக்ஸ்கள் சிவகாசி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கிப்ட் பாக்ஸ்கள் தற்போது சிவகாசி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் வீடுகளில் தயாராகி வருகிறது. மூட்டை, மூட்டையாக பட்டாசுகளை வீடுகளில் இறக்கி வைத்துவிட்டு பல பட்டாசு ஆலைகள், அதற்கான பெட்டிகளையும் வீட்டில் உள்ள பெண்களிடம் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பெட்டிக்கும் எத்தனை பட்டாசுகள் போட வேண்டும் என்ற அட்டவணைப்படி பட்டாசுகள் போட்டு அடுத்த நாள் கொடுத்து விடுகிறார்கள். இதுபோன்ற சட்ட விரோத செயலால் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் பல கிராமங்களில் இது போன்ற செயல்கள் தற்போது அதிகரித்துள்ளன.

    இதுகுறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மாநில கல்வி ெகாள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நாளை (14-ந் தேதி) மதியம் 2 மணியளவில் நடக்கிறது.

    மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் எஸ்.எச்.என்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். கருத்து தெரிவிக்க விரும்புவோர் தங்களது கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்து இந்த கூட்டத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • சாத்தூர், சிவகாசியில் கிணற்றில் குதித்து முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருேக உள்ள கே.சொக்கலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 72). சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் வாழ்க்கை யில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து அவரது மகன் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    சிவகாசி துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி செல்வம் (50). இவர் சமீப த்தில் கண் ஆப்பரேசன் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு இருந்ததாக தொகிறது. இதனால் விரக்தியில் இருந்த அவர் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டையில் அதிகாலை நேரத்தில் தொழிலாளி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • இரட்டை கொலை நடந்த வீட்டின் அருகே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பது மேலும் அச்சுறுத்துவதாக உள்ளது.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவில் கடந்த ஜூலை 18-ந் தேதி சங்கரபாண்டியன்- ஜோதிமணி என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினரை கொலை செய்து கொள்ளை கும்பல் 8 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பியது.

    கொலையாளிகளை பிடிப்பதற்காக ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இந்த நிலையில் இரட்டை கொலை நடந்த அதே தெருவில் அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சமையல் தொழியான சவுந்தரபாண்டியன் என்பவரின் வீட்டிற்குள் இன்று அதிகாலை மர்ம நபர் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று அதிகாலை சவுந்தரபாண்டியன் வீட்டின் முன்னால் இருந்த சுவரை ஏறி குதித்து உள்ளே இருந்த கதவை தட்டிய மர்ம நபர் உள்ளே போலீஸ் இருப்பதாகவும், விரைவாக கதவை திறக்கவும் என்று கூறியுள்ளார். கதவை யாரும் திறக்காததால் மாறி மாறி அந்த நபர் வேகமாக கதவை தட்டி உள்ளார்.

    சவுந்தரபாண்டியன் மகள் கதவை திறக்க முயன்ற போது எதிர் வீட்டில் வசிக்கும் நபர் இதைப்பார்த்து சந்தேகம் அடைந்து யார் என்று கேட்டுள்ளார். சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.அதற்குள் அங்கிருந்தவர்கள் மர்ம நபரை மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவரை டவுன் போலீஸ் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே அச்சத்தில் உள்ளோம். இரட்டை கொலை நடந்த வீட்டின் அருகே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பது மேலும் அச்சுறுத்துவதாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.

    • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு ரூ.70.57 கோடியில் புதிய கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்
    • அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    இந்த கட்டிடம் ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 496 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதில், அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • ராஜபாளையத்தில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இதில் படுகாயமடைந்த அழகுராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜரத்தினம், சிவா, சுந்தர். இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று சித்தன்கோவில் முன்புள்ள நகராட்சிக்கு சொந்தமான தெருக்குழாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனை பேட்டைக்கடை தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நேற்று இரவு அங்குள்ள தனியார் மதுபான பார் அருகில் விஜயகுமாரை 3 பேரும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்.

    ராஜபாளையம் துரை ச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (48) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இருவரும் மது குடித்தனர். அப்போது செல்வராஜ் மதுபாட்டிலால் அழகுராஜாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அழகுராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து அவரது தாயார் ராக்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் வடமாநில தொழிலாளியின் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
    • பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கபா ளையத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுசங்கர். இவர் சொக்கலிங்கபுரம் பகுதியில் பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

    இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீத்மான்ஜி (வயது 45) என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சஞ்சீத்மான்ஜி யின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று சஞ்சீத்மான்ஜியுடன் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள் திரோபான்ஜி, வினோ த்பானியா ஆகியோர் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த சகோத ரர்கள் சஞ்சீத்மான்ஜியை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

    பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி யுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சஞ்சீத்மான்ஜியை கொலை செய்த 2 பேரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு சென்னைக்கு சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை பிடிக்க ராஜபாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
    • மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை மற்றும் கால்களை இழந்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

    பிற்படுத்தப்பட்டோர்,

    மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பேருக்கு மாவட்ட அலகில் இயங்கி வரும் விடுதிகளில், பகுதி நேர தொகுப்பூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் என்ற அடிப்படையில் தற்காலிகமாக பகுதி நேர தூய்மைப் பணிகளுக்கான நியமன ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளராக பணியாற்றி மரணமடைந்த செல்லேசுவரி என்பவரது வாரிசுதாரரான கவிதாவுக்கு அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) சங்கர நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஞானவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் கோதை நாச்சியார்புரம் உள்ளது.
    • மோதல் சம்பவத்தை கண்டித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் கோதை நாச்சியார்புரம் உள்ளது. இங்கு இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். இன்று காலை இவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கம்பு, கல் போன்றவற்றால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    சிலர் அரிவாளாலும் வெட்டிக் கொண்டனர். இதில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர். கலவரக்காரர்களை அப்புறப்படுத்தி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மோதல் சம்பவத்தை கண்டித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கோதை நாச்சியார்புரம் விலக்கு காயல்குடி ஆற்றுப்பாலத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் காரணமாக ராஜபாளையம்-மதுரை ரோட்டில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ×