என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்தனர்.
அதிகாலை நேரத்தில் தொழிலாளி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்
- அருப்புக்கோட்டையில் அதிகாலை நேரத்தில் தொழிலாளி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
- இரட்டை கொலை நடந்த வீட்டின் அருகே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பது மேலும் அச்சுறுத்துவதாக உள்ளது.
பாலையம்பட்டி
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவில் கடந்த ஜூலை 18-ந் தேதி சங்கரபாண்டியன்- ஜோதிமணி என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினரை கொலை செய்து கொள்ளை கும்பல் 8 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பியது.
கொலையாளிகளை பிடிப்பதற்காக ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இந்த நிலையில் இரட்டை கொலை நடந்த அதே தெருவில் அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சமையல் தொழியான சவுந்தரபாண்டியன் என்பவரின் வீட்டிற்குள் இன்று அதிகாலை மர்ம நபர் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை சவுந்தரபாண்டியன் வீட்டின் முன்னால் இருந்த சுவரை ஏறி குதித்து உள்ளே இருந்த கதவை தட்டிய மர்ம நபர் உள்ளே போலீஸ் இருப்பதாகவும், விரைவாக கதவை திறக்கவும் என்று கூறியுள்ளார். கதவை யாரும் திறக்காததால் மாறி மாறி அந்த நபர் வேகமாக கதவை தட்டி உள்ளார்.
சவுந்தரபாண்டியன் மகள் கதவை திறக்க முயன்ற போது எதிர் வீட்டில் வசிக்கும் நபர் இதைப்பார்த்து சந்தேகம் அடைந்து யார் என்று கேட்டுள்ளார். சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.அதற்குள் அங்கிருந்தவர்கள் மர்ம நபரை மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவரை டவுன் போலீஸ் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே அச்சத்தில் உள்ளோம். இரட்டை கொலை நடந்த வீட்டின் அருகே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பது மேலும் அச்சுறுத்துவதாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.






