என் மலர்
விருதுநகர்
- மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்வதாக துரைமுருகன் பேச்சு
- திராவிட ஆட்சியின் தத்துவத்தை முதல்வர் அறிமுகம் செய்திருக்கிறார்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-
ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். அதனால்தான் அவர் நடத்தும் ஆட்சியைக் கண்டு அகில இந்தியாவும் புகழ்கிறது.
தளபதி அவர்கள், கட்சி தலைவராகி முதலமைச்சர் ஆனவுடன், இன்றும் அதிகமாக அவரது கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கும் முதல் அமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் தளபதி என்று அகில இந்தியாவே ஒப்புக்கொண்டுள்ளது.
நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆனால், பிரதமர் மோடி அவர்கள், தளபதியை பார்க்கும்போதெல்லாம் சொல்வார், 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின், உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ வந்தால் என் வீட்டில் தங்கு. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்லும் அளவிற்கு இவருடைய கண்ணியம், பண்பாடு தலைதூக்கி நிற்கிறது.
யாராலும் இந்த ஆட்சியை பற்றி குறை கூற முடியவில்லை. மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்கின்றன. நமது முதலமைச்சர் அவர்கள் ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறார், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
இனிமேல் இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறியிருக்கிறார். இந்த ஆட்சியின் தத்துவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். எனவே, இன்னும் 60 ஆண்டு காலத்துக்கு இந்த இயக்கத்துக்கு பயமில்லை, ஆட்சிக்கும் பயமில்லை என்ற அளவுக்கு நம்மை வழிநடத்த தளபதி இருக்கிறார்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
- கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
- விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விருதுநகர் அருகே பட்டபுதூரில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. புதுச்சேரி நிர்வாகி சி.பி.திருநாவுக்கரசுவுக்கு பாவேந்தர் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கு நடந்தது.
- ‘மொழி வகுப்புகளை திறமையாக கையாளுவது எப்படி?’’ என்பது குறித்து ஆங்கிலத்துறை பேராசிரியர் சொற்பொழிவாற்றினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை ஆய்வுமன்றமான ''மினர்வா'' சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது.
ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் கே.பி. ஸ்வப்னா, வெளிப்ப டையான யதார்த்தவாதக் கோட்பாடுகள் மற்றும் கேத்தரின் பெல்சேயின் யதார்த்தவாதக் கோட்பா டுகளின் கருத்துகளை விளக்கினார். அவர் பேசுகையில், இந்த கோட்பாடுகள் ஆய்வுகளில் எவ்வாறு செயலாக்க முடியும்? என்பது பற்றியும், ஆய்வுகளை நுண்ணறிவு மிக்கதாகவும், ஆர்வ மிக்கதாகவும் கோட்பாடுகள் மாற்றுவதைப் பற்றி யும் விளக்கினார். அதனைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் எஸ்.சாந்தி, ''மொழி வகுப்புகளை திறமையாக கையாளுவது எப்படி?'' என்பது குறித்து சொற்பொழிவாற்றினார்.அவர் மொழி வகுப்புகளை விரிவான முறையில் கையாளுவதற்கான வழி முறைகளை வழங்கினார்.
உதவிப்பேராசிரியர் எம்.பரிதா பேகம் நன்றி கூறினார்.இதில் ஆங்கிலத்துறையின் அனைத்துப் பேராசிரி யர்களும் பங்கேற்றனர்.
- ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மில்கிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் பாபு (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி பிரிந்து விட்டதால் மனமுடைந்த பாஸ்கர்பாபு வீட்டில் தூக்குப்பபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீடு கடந்து 2 நாட்களாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பாஸ்கர்பாபுவின் தங்கை லட்சுமிபிரபாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பாஸ்கர் பாபு தற்கொலை செய்து பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் ரூ. 70.57 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
விருதுநகரில் ரூ. 70.57 கோடியில் புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு செயலர்கள் குமார் ஜெயந்த், பிரபாகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, போக்குவரத்து பணிமனை ஆகிய பகுதிகளில் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- வருகிற 17-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- சாலைகளை சீரமைக்க கோரியும், திட்டப்பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.
நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடனும், சரியான திட்டமிடுதலும் இன்றி நடந்து வருகிறது. மக்களும் இதனால் பரிதவித்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே நகரில் சாலைகளை சீரமை க்க கோரியும், திட்டப்பணிகளை துரி தமாக முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடத்து வது என முடிவு செய்ய ப்பட்டது. இதற்கு அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
- ராஜபாளையத்தில் குண்டும்குழியுமான சாலையில் ஊர்வலம்-மறியல் நடத்துவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
- இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழிற்சாலைகள் மிகுந்த நகரம், 2 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகராட்சி. தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட தென்பகுதிவாழ் பொதுமக்களுக்கு முக்கிய வழித்தடமாக ராஜபாளையம் இருந்து வருகிறது.
நாளும் பல நூறு கனரக வாகனம், பேருந்து, மகிழ்ந்து, இருசக்கர வாகனங்களும் வந்துசெல்கின்றன. ராஜபாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளான பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக்குடிநீர், சத்திரப்பட்டி ெரயில்வே மேம்பாலப் பணிகள் ஒருசேர நடக்கிறது.
ெரயில்வே மேம்பாலப்பணியால் டி.பி.மில்ஸ் சாலை முடக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டன் மார்க்கெட் பழையபேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக ஒரு வழிப்பாதை மட்டுமே இருக்கிறது.
திட்டப்பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கிறது. மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி பயணிக்க லாயக்கற்ற சாலையாக மாறுகிறது. வெயில் காலங்களில் தூசி பறக்கிறது.
முன்னே செல்லும் வாகனத்தை காண இயலாத அளவிற்கு தூசி பறப்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அரசியல் கட்சியினர் நடத்தும் சாலை மறியல், ஊர்வலம் அனைத்திற்கும் இந்த ஒருவழிச் சாலையையே தேர்தெடுக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் சொல்லொனத்துயரத்தை அடைகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக பெரும் துயரத்தை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண அதிகாரிகள் கண்காணிப்பதோடு, திட்டப்பணிகளை போர்கால அடிப்படையில் திட்டமிட்டு விரைந்து முடிக்க முன்வேண்டும்.
அப்போதுதான் நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.
- தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
விருதுநகர்:
மதுரை-விருதுநகர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்பு மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-ந் தேதி) மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு நெல்பேட்டைக்கு செல்கிறார். அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்பு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்ட தொடக்க விழாவிற்கு செல்கிறார். முன்னதாக நெல்பேட்டை மைய சமையல் கூடத்தை பார்வையிட்டு, காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.
மேலும் பள்ளி மாணவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு சாப்பிடுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புறப்பட்டுச் செல்கிறார்.
காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 70.57 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்பு விருதுநகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். மாலையில் விருதுநகரில் நடக்கும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.
தி.மு.க. முப்பெரும் விழாவிற்காக விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா தொடங்குகிறது. முப்பெரும் விழா நடக்கும் திடலில் நுழைவு பகுதியில் மலைமுகடு போன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி உருவ படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பந்தலில் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. விழா பந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் இரவை பகலாக்கும் வகையில் ஏராளமான மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழா பந்தல் 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவை 1 லட்சம் பேர் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி விழா பந்தலின் அருகில் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விழா நடக்கும் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கான விருது, பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரையாற்றுகிறார். மேலும் தி.மு.க.வின் அனைத்து நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழையும் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
தி.மு.க. முப்பெரும் விழாவில் தொண்டர்கள் கலைஞர் எழுதிய 4,041 கடிதங்கள், 21 ஆயிரத்து 510 பக்கங்கள் கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இந்த விழாவில் முதலமைச்சரின் எண்ணம் கொண்ட 148 பக்க திராவிட மாடல் புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு பெற்றுக்கொள்கிறார். முப்பெரும் விழா முடிவில் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மதுரையில் விமான நிலையம், முதல்-அமைச்சர் பயணிக்கும் சாலைகள், அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மதுரை நெல்பேட்டையில் நாளை நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட தொடக்க விழா நடக்கும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- ராஜபாளையம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மணல், ஜல்லி மாற்றி புதுப்பிக்கும் பணி நடந்தது.
- இதனை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
சுமார் 2½ லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ராஜபாளையம்- அய்யனார்கோவில் ரோட்டில் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் நகராட்சி குடிநீர் தேக்க ஏரி உள்ளது.
இந்த ஏரியை சேர்ந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் 6-வது மைல்கல் அருகில் உள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 13-ஆண்டுகளுக்கு பின்னர், தண்ணீர் சுத்திகரிப்புக்கு தேவையான தரமான ஆற்று மணல்கள் மற்றும் ஜல்லிகளை கொண்டு மாற்றி அமைத்து நடவடிக்கை எடுத்த அவர், நகராட்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.
பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை ராஜபாளையம் நகர மக்கள் பயன்படுத்த சேமிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியையும் ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் கவுன்சிலர்களுடன் சென்று பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா, ஆற்றுநீர் விரையம் ஆகாமல் முறையாக சேமிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து 6-வது மைல்நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார்.
- ராஜபாளையம் அருகே மின்வாரிய அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இந்த சம்பவங்கள் குறித்து கீழராஜகுலராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 52). மின்வாரிய அதிகாரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த முத்துவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வசந்தராஜ் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு உடல் நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- 100 நாள் வேலை திட்ட புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு, இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, குறை தீர்ப்பு அதிகாரியாக பெரியசாமி என்பவர் கடந்த 25.8.2022 முதல் விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுப்பார். பிரச்சினைகள் நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்துவார்.
பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தங்களது புகார் மனுக்களை குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் ombudsperson.vin@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி பெற்ற பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தின் குறை தீர்ப்பு அதிகாரியான பெரியசாமி என்பவரை 9443177406 மற்றும் 6369876887 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருப்புக்கோட்டையில் இன்று கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- தரமான சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகள் உள்ளன. இதனை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சியின் 16-வது வார்டான திருநகரம் பகுதியில் புதிய சாலை அமைக்க நகராட்சி சார்பில் ரூ. 1 கோடியே 16 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேற்கண்ட பகுதியில் ஏற்கனவே உள்ள குண்டும், குழியுமான சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மேலேயே புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை கண்டித்தும், தரமான சாலையை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திருநகரம் விருதுநகர் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகரச் செயலாளர் காத்த முத்து தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியல் கைவிடப்பட்டது.






