என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை
    X

    முக ஸ்டாலின்

    தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகை

    • ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.
    • தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.

    விருதுநகர்:

    மதுரை-விருதுநகர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்பு மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-ந் தேதி) மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு நெல்பேட்டைக்கு செல்கிறார். அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்பு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்ட தொடக்க விழாவிற்கு செல்கிறார். முன்னதாக நெல்பேட்டை மைய சமையல் கூடத்தை பார்வையிட்டு, காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.

    மேலும் பள்ளி மாணவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு சாப்பிடுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புறப்பட்டுச் செல்கிறார்.

    காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 70.57 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்பு விருதுநகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார். மாலையில் விருதுநகரில் நடக்கும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.

    தி.மு.க. முப்பெரும் விழாவிற்காக விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா தொடங்குகிறது. முப்பெரும் விழா நடக்கும் திடலில் நுழைவு பகுதியில் மலைமுகடு போன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி உருவ படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பந்தலில் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. விழா பந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் இரவை பகலாக்கும் வகையில் ஏராளமான மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழா பந்தல் 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவை 1 லட்சம் பேர் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி விழா பந்தலின் அருகில் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விழா நடக்கும் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.

    அவர்களுக்கான விருது, பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரையாற்றுகிறார். மேலும் தி.மு.க.வின் அனைத்து நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழையும் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    தி.மு.க. முப்பெரும் விழாவில் தொண்டர்கள் கலைஞர் எழுதிய 4,041 கடிதங்கள், 21 ஆயிரத்து 510 பக்கங்கள் கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

    இந்த விழாவில் முதலமைச்சரின் எண்ணம் கொண்ட 148 பக்க திராவிட மாடல் புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு பெற்றுக்கொள்கிறார். முப்பெரும் விழா முடிவில் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மதுரையில் விமான நிலையம், முதல்-அமைச்சர் பயணிக்கும் சாலைகள், அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மதுரை நெல்பேட்டையில் நாளை நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட தொடக்க விழா நடக்கும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    Next Story
    ×