என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் இன்று இரு பிரிவினர் மோதல்
- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் கோதை நாச்சியார்புரம் உள்ளது.
- மோதல் சம்பவத்தை கண்டித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை ரோட்டில் கோதை நாச்சியார்புரம் உள்ளது. இங்கு இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். இன்று காலை இவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கம்பு, கல் போன்றவற்றால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
சிலர் அரிவாளாலும் வெட்டிக் கொண்டனர். இதில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே மோதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிந்தனர். கலவரக்காரர்களை அப்புறப்படுத்தி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோதல் சம்பவத்தை கண்டித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கோதை நாச்சியார்புரம் விலக்கு காயல்குடி ஆற்றுப்பாலத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் காரணமாக ராஜபாளையம்-மதுரை ரோட்டில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.






