என் மலர்
விருதுநகர்
- 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் தொடக்கங்கப்பட்டது.
- தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட விஜயகரிசல்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.
இதில் பழங்கால சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் விஜயகரிசல் குளத்தில் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்த தற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன. அத்தோடு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன.
தமிழர்களின் நாகரீகம் மற்றும் பழமைகள் குறித்து மேலும் கண்டறிய வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப்பணி நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று தொடங்கின.
அகழ்வாரா ய்ச்சிக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணியும், குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி போன்றவை நடந்து வருகிறது.
- தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(36), சுமை தூக்கும் தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த கருப்பசாமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் மாணிக்க வாசகம்(30). இவரது மனைவி கற்பகமணி. சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக கற்பகமணி விஷம் குடித்தார்.
ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மனைவியின் விபரீத முடிவால் வெறுப்படைந்த மாணிக்கவாசகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள அர்ச்சனாபுரத்தை சேர்ந்தவர் சிவவேல்(35). இவரது மகன் 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிவவேல், மகன் இறந்த துக்கத்தில் சம்பவத்தன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 கீரிப்பிள்ளைகள், 30 முயல்கள், கவுதாரிகள் ஆகியவற்றை வேட்டையாடி பிடித்த கிராமத்தினர் லாரிகளில் ஊருக்கு புறப்பட்டனர்.
- பிடிபட்ட அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விருதுநகர்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டி, புதூர் கிராமங்களில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பாரிவேட்டை நடைபெறும்.
அதன்படி சம்பவத்தன்று மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 120 பேர் பாரி வேட்டைக்கு புறப்பட்டனர். லாரி-கார்களில் சென்ற அவர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வனப்பகுதியில் 5 வேட்டை நாய்களுடன் வேட்டையாடினர்.
இதில் 5 கீரிப்பிள்ளைகள், 30 முயல்கள், கவுதாரிகள் ஆகியவற்றை வேட்டையாடி பிடித்த கிராமத்தினர் பின்னர் லாரிகளில் ஊருக்கு புறப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு லாரிகளில் சென்ற 120 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட கீரிகள், முயல்கள் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து பிடிபட்ட அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வனச்சரக அலுவலர் கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோவில் திருவிழாவுக்காக விலங்குகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த தங்கராஜ், செல்வம், நடுவிலான், அழகர்சாமி, சின்னப்பொண்ணு, நாகராஜ் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர், உடந்தையாக இருந்த நர்சுகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஏழ்மை காரணமாக பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் தம்பதி குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரநேரி ஈசுவரன் காலனியை சேர்ந்தவர் பாண்டீசுவரன் (வயது 28). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (24). இவர்களுக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகன்களும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.
ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், பஞ்சவர்ணம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த மாதம் 23-ந்தேதி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில், 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.
ஏழ்மை காரணமாக பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் தம்பதி இந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாரநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்துவந்த அஜிதா (34) என்பவருக்கு தெரியவந்தது. அவர், தனக்கு தெரிந்த ஒருவர் நாகர்கோவிலில் உள்ளதாகவும், அவரிடம் குழந்தையை கொடுத்தால், தேவையான பணம் கொடுப்பார் என்று கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு பாண்டீசுவரன், பஞ்சவர்ணம் ஆகியோர் சிவகாசியில் இருந்து குழந்தையுடன் நாகர்கோவில் புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் நெல்லையில், வங்கி அதிகாரியான ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி ஐரின் (42) ஆகியோரிடம் ரூ.40 ஆயிரம் பெற்றுக்கொண்டு குழந்தையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பாண்டீசுவரன், பஞ்சவர்ணத்துக்கு இடையே குழந்தையை விற்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சவர்ணத்தின் தாய் மாரியம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜானகி, நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கு விற்றது உறுதியானது. இதை தொடர்ந்து அதிகாரி ஜானகி, மாரநேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டீசுவரன், பஞ்சவர்ணம், நாகர்கோவிலை சேர்ந்த ஜார்ஜ், அவருடைய மனைவி ஐரின், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக மாரநேரி ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் அஜிதா, முத்துமாரி அம்மாள் (51) ஆகிய 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், ஐரின், அஜிதா, முத்துமாரி அம்மாள் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2-வுக்கு இணையான தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி வழங்கப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அரசு தேர்வு இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022-ல் நடந்த மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பபடிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழி காட்டுதல் www.skilltraining.tn.gov.in (http://www.skilltraining.tn.gov.in/) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட சான்றிதழ் பெற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 04562-252655 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலியானார்.
- இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எட்டக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 31). இவர் வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று மடத்துப்பட்டிக்கு சென்றிருந்த சுரேஷ்குமார் அங்கு சலூன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சாப்பாடு வாங்கி வருவதாக கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் சுரேஷ்குமாரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் பலன் இல்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே தனியார் தோட்டத்து கிணற்று பகுதியில் சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள், சட்டை, செல்போன் ஆகியவை கிடந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர். அப்போது சுரேஷ்குமாரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
சலூன் கடைக்கு சென்ற சுரேஷ்குமார் அங்கு முடிவெட்டிய பின் கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
- நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வடிவமைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை மற்றும் புதுமை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கோவை சி.வி.ஓ. விட்டி வைஸ் நிறுவனர் சன்மதி கார்த்திக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வடிவமைப்பு சிந்தனையை விமர்சன சிந்தனையுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மைய மாக கொண்ட தீர்வுகளை வழங்கும் படைப்பாற்றலை புதுமை தூண்டுகிறது என்றார். வடிவமைப்பு சிந்தனை என்பது புதிய மற்றும் பழைய தீர்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான உலக ளாவிய பயன்பாடாகும்.
வணிகத் துறையில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து புதுமைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வர வேற்றார். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் நன்றி கூறினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 114 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- விருதுநகரில் வருகிற 24-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகாசி ராஜரத்தினம் கல்லூரியில் அறிவியல் போட்டிகள் நடந்தது.
- நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசி ரியர் மனோன்மணி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் ''உலகளாவிய அறிவியல்" என்ற தலைப்பில் மாநில அளவி லான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தன.
முதல்வர் பழனீஸ்வரி, நுண்ணுயிரியல் துறை தலைவர் சுபாரஞ்சனி ஆகியோர் தலைமை தாங்கினர். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராதா வரவேற்றார்.
கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 71 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசி ரியர் மனோன்மணி நன்றி கூறினார்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலாச்சார போட்டிகள் நடந்தது.
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை இலக்கிய மன்றமும், ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்திய கலாச்சார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் கலாச்சார போட்டிகளை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களான திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் கோகுலஹரி, சிவகாசி விஸ்டம் வெல்த் சர்வதேச பள்ளி நிர்வாக அதிகாரி முத்துக்குமார், புகைப்பட மற்றும் காணொளி வடிவமைப்பாளர் வித்யஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலாச்சார சமையல், வண்ண சுவரொட்டி தயாரித்தல், ரங்கோலி, குறும்படம். மாறுவேடப் போட்டிகள் நடந்தன. நடுவர்களாக முன்னாள் செயல்பட்டனர். 108 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 4 அணிகளாகப் பிரிந்து இந்த போட்டிகளில் பங்கேற்றனர். முதல்நிலை வெற்றியாளர்களுக்கான கோப்பையை கிளடியேட்டர்கள் என்ற அணி வென்றது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் பெமினா வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் புவனா, ஆங்கில மொழி பயிற்றுநர் ஹரிஹரன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தினர்.
- போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் புல்லலக் கோட்டை ரோட்டை சேர்ந்தவர் மாரிக்கனி. இவரது மகன் தங்க முனீசுவரன்(20). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் போலீசார் தங்க முனீசுவரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த தங்க முனீசுவரன் வேலைக்கு செல்லாமல் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவ த்தன்று அவரது தாயார் சதுரகிரி கோவிலுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாழ்க்கையில் வெறுப்ப டைந்த தங்க முனீசுவரன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவிலுக்கு சென்றுவிட்டு மாரிக்கனி வீட்டுக்கு வந்தபோது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
- சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துரையாடினார்.
அப்போது மாணவ மாணவியர் தரையில் அமர வைக்கப்பட்டதை கண்ட மாணிக்கம் தாகூர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் அதற்கான காரணத்தை கேட்டபோது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து தனது நிதியின் மூலம் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிவகாசி மாநகராட்சியை இணைக்க வேண்டும்.இதன் மூலம் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும்.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி கண்ணிற்கு முன் நிற்பதால் அழ தொடங்கிவிட்டார். அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்க உள்ளதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து கொண்டுள்ளார் .
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் ஆதரவு மிக முக்கியமான ஆதரவாக காங்கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.






