என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • குருமூர்த்தியிடம் சிலர் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டனர்.
    • தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 48). இவர் ராஜபாளையத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

    மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளராகவும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    குருமூர்த்தி தனது அலுவலகத்தை ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் காம்ப்ளக்சில் அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார்.

    இதற்கிடையே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு வரும் நபர்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக குருமூர்த்திக்கும், மற்ற பயிற்சி பள்ளிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது. சிலர் குருமூர்த்தியிடம் வாக்குவாதம் மற்றும் தகராறிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு குருமூர்த்தி தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பயிற்சி பள்ளியை சேர்ந்த வேல்முருகன் உள் பட 6 பேர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் குருமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் குருமூர்த்தி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர் கள் அங்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக் டர் பவுல் ஏசுதாஸ், பலத்த காயம் அடைந்த குருமூர்த் தியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் குருமூர்த்தி தாக்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தலைமறைவான வேல்முருகன் உள்பட 6 பேர் கும்பலையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளைத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
    • விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் எஸ். ராமலிங்கபுரம் சாலையில் மருத்துவ துணி சலவை செய்யும் ஆலை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் ஜெயபாலன் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் மருத்துவ துணி உற்பத்தி ஆலைகளில் இருந்து கிரே கிளாத் எனப்படும் மருத்துவ துணியை வாங்கி தனது ஆலையில் அதனை சலவை செய்து வெண்மையாக மாற்றி வழங்கி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவில் ஆலையில் கிரே கிளாத் பண்டல்கள் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரே அறையில் 100-க்கும் மேற்பட்ட பண்டல்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் ஒரு பகுதியில் பற்றிய தீ மள மளவென அனைத்து பகுதிகளிலும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    தீ விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ துணி எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து உள்ளனர். எனவே பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி சக்தி ஸ்தலங்களில் ஒன்றான இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவை காண மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு வந்த பக்தர் கள் அம்மனை வேண்டி ஆயிரம் கண்பானை, தவழும் பிள்ளை, கரும்பு தொட்டில் குழந்தை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இன்று மாலை இரண்டு மணிக்கு மேல் ஆடிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் அம்மன் ரிஷப வாகன பல்லக்கில் ஊர்வலமாக தெருக்களில் வீதியுலா வந்து ஆற்றில் இறங்கி கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் சூப்பிரண்டுகள் மற்றும் 4 டி.எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 2,000-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும்.
    • பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்த பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

    • பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன.
    • பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வருகிறார்.

    இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன. அங்கு பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த பட்டாசு ஆலையில் மல்லி, மானகசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்து பட்டாசு தயாரிப்பை தொடங்கினர். முதலில் வெடிமருந்து கலவை பணிகள் நடைபெற்றன.

    இந்த நிலையில் இருந்து பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது. அதனை தொழிலாளர்கள் இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த விநாடி அருகில் இருந்த கட்டிடங்களிலும் தீ பரவி 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது.

    இந்த விபத்தில் புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யாராவது இந்த விபத்தில் சிக்கி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டாசு தயாரிப்பு மற்றும் விபத்து தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தாலும் இன்னும் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. உரிமையாளர் மட்டுமே ஆலையை நடத்த வேண்டும் என விதிமுறைகளை விதித்தாலும் உரிமையாளர் மற்ற நபரிடம் ஒப்பந்தத்திற்கு விடுவதும் அரங்கேறி வருகிறது.

    இதுபோன்று விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளாவை சேர்ந்த நடிகரும், மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ்கோபி நேற்று சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அவர் ஆய்வு செய்த மறுநாளே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரிக்கு வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செட்டிக்குறிச்சியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு வருபவர்கள் பெரும்பாலனோர் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் மாணவ, மாணவிகள் பயணித்து கல்லூரி, வீடுகளுக்கு செல்வது சிரமமாக உள்ளது.

    இருப்பினும் பல்வேறு இன்னல்களை தாண்டி மாணவ, மாணவிகள் கல்வி பயில கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பஸ்களை துரத்தி சென்று ஏறும் நிலையும், மாணவிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்லும் நிலையும் ஏற்பட்டது.

    கல்லூரி பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. இதனால் தொடர்ந்து அரசு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்றாமல் சென்றது.

    இதனை கண்டித்தும், பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை கல்லூரிக்கு வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி எதிரே உள்ள மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி. காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அரசு பஸ்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். திடீர் சாலைமறியலால் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மேளதாளம் முழங்க ஆண்டாள்-ரெங்க மன்னார் திருத்தேரில் எழுந்தருளினர்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    108 வைணவ திருத்தலங்க ளில் 48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் அவதார தின மான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக் கான ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் திருநாளான 3-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான இன்று (7-ந்தேதி, புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க மிதுன லக்னத்தில் ஆண்டாள்-ரெங்க மன்னார் திருத்தேரில் எழுந் தருளினர்.

    காலை 9.05 மணிக்கு தேரோட்டத்தை கலெக்டர் ஜெயசீலன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத் தார். இதில் தமிழகம் மட்டு மின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத் தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.

    தேரோட்டத்தை முன் னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக் கப்பட்டு இருந்தது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்தி ரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.

    • லாரி பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
    • லாரி டிரைவர் மணிகண்டன் என்பவரை போலீசா கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

    கடந்த 2 வாரங்களாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் மூன்றாவது வெள்ளியான இன்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். 3, 4, 5 என குழு குழுவாக அவர்கள் நடந்து வந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை சாத்தூர் அருகேயுள்ள நல்லி பகுதியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து சிவகங்கை நோக்கி சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த லாரி திடீரென்று கட்டுப்பாடடை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது அந்த லாரி பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ் (வயது 35), பவுன்ராஜ் (45), முருகன் (45) ஆகிய மூன்று பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப் பார்த்த பாதயாத்திரையாக வந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக அந்த வழியாக வந்த வாகனங்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய சிமெண்டு லாரி டிரைவர் மணிகண்டன் என்பவரை போலீசா கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    ஆடி மூன்றாம் வெள்ளிக்கு பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்த 3 பக்தர்கள் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் சக பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்களும் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (1-ந்தேதி) முதல் வருகிற 5-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆடி பிரதோஷமான இன்று சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு முதல் விருதுநகர், மதுரை, நெல்லை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பஸ், வேன், கார்களில் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நேற்று இரவு மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் தங்கினார்.

    இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறுவதற்காக தாணிப்பாறை கேட் முன்பு கூடினர். காலை 5.30 மணி அளவில் பக்தர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பக்தி கோஷமிட்டு ஆர்வத்துடன் மலை ஏறினர். சுமார் 3 மணி நேரம் மலையேறி சுந்தர சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    மலைப்பாதைகளில் வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சண்முகநாதன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மலையடிவாரத்திலும் கோவில் பகுதியிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆடி அமாவாசை முன்னிட்டு முதல் நாளான இன்று வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இன்னும் 4 நாட்கள் இருப்பதால் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. சித்தர்களின் பூமி சிவகிரி என அழைக்கப்படும் சதுரகிரிக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    சதுரகிரி கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி ஆடி அமாவாசை ஆகும். இதனை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    வழக்கமாக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைமேல் உள்ள கோவில் மற்றும் அடிவார பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தாணிப்பாறைக்கு மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    இதற்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலைஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்குட்பட்டவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதால் அதற்கேற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது.
    • விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது அமாவாசை பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 19-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 19-ந்தேதி ஆடி மாத பிரதோஷம், இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவு முதல் சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர ஊர்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் தாணிப்பாறைக்கு வருகை தந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்பகுதியில் குவிந்தனர்.

    இதனையடுத்து காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்து மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.

    அதன் பின்பு பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு சென்றனர் தற்போது விடுமுறை தினமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறு கிறது.

    அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×