என் மலர்
விழுப்புரம்
- நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர்.
- விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம்:
செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர். அதன்படி நேற்று 4,600 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆனால் அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இது குறித்து கமிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்கின்ற எடை போடும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூட்டை மாற்ற மாட்டோம் என பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் நேற்று கொண்டு வரப்பட்ட 4600 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் மழை பெய்து வருவதாலும், ஈ-நாம் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாலும் இப்பிரச்சனையில் சமூக தீர்வு ஏற்படும் வரை தங்களது விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நேற்று இரவு தான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் எதிரில் வைக்கப்பட்டது. இதனை அறியாத விவசாயிகள் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான நெல் மூட்டைகளை விற்பனைக்கு இன்றும் கொண்டு வந்திருந்தனர். அதிகாலையில் வந்த டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் இதனை கண்டித்து நெல்மூட்டை கொண்டு வந்த வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் செஞ்சி - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து மற்றும் செஞ்சி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கமிட்டி கேட்டை திறந்து நெல் மூட்டைகளை உள்ளே அனுமதித்ததால் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சாலை மறியலால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனைத் தொடர்ந்து இன்று கொள்முதல் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. இது போன்ற செயல்கள் மறைமுகமாக வெளி வியாபாரிகளை ஊக்குவிக்கும் செயலாக உள்ளதென விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- மேல்மலையனூர் அருகே மழைநீர் கால்வாய் சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
- அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தில் கீழண்டை தெரு உள்ளது. இப்பகுதியில் மழை பெய்தால் கால்வாய்மூலம் தண்ணீர் வெளியேறும்படி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு ஒரு பாலம் உயர்த்திக் கட்டியதாலும் சிலரது ஆக்கிரமிப்பாலும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது. அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேவனூர-கெங்கபுரம் சாலையில் இன்று காலை 10.15 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
மழைநீர் வீதியில் தேங்காதவாறு இருந்தது. தற்போது கீழண்டை தெரு ஆரம்பத்தில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவில்லை இதனால் கடந்த சில நாட்களாக பெய்யும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.மேலும் வீட்டின் உட்புறம் தண்ணீர் தேங்கியதால் இரவு முழுவதும் தூங்காமல் வீட்டில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறோம். மழைநீர் செல்லும் இடத்தில் சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாய் அமைக்க முடியாத நிலை உள்ளது. இதை நாங்கள்அதிகாரிகளிடம் முறையிட்டும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்த லாரியை அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
- நீதிமன்றம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
விழுப்புரம்:
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு லாரி புறப்பட்டது. இந்த லாரியை அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி லாரியின் கிளினராக உள்ளார். இந்த லாரி, திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள நீதிமன்றம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சரிந்தன.
லாரி டிரைவர், கிளினர் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். இது குறித்து லாரி உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த விபத்தினால் திண்டிவனம் - சென்னை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- விழுப்புரம் அருகே பள்ளி மாணவி மாயமானார்.
- குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர், மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தாய் செஞ்சி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செஞ்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
- இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார்.
விழுப்புரம்:
செஞ்சி தாலுக்கா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி பிரியா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பிரியாவை பல இடங்களில் தேடினார்.
எங்கும் கிடைக்க வில்லை. இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிளியனூர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தந்தி ராயன்பேட்டையை சேர்ந்த வர் சந்திரன் (வயது 40). இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும், கவுன்சிலராகவும் உள்ளார். இவர் நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார். அப்போது கிளியனூர் அருகே தென் கோடிப்பாக்கம் மேம்பா லத்தை கடந்தபோது, சாலை யில் இருந்த தடுப்புக் கட்டை யில் மோதி கார் விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த பொது மக்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இத்தகவல் அறிந்து தென்கோடி பாக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். மேம்பாலம் அருகில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இங்கு உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க வேண்டு மென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் பால முரளி மற்றும் போலீ சார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுஞ்சா லைத் துறை அதிகாரி கள் வந்து உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோ மென பொதுமக்கள் கூறினர். இதையடுத்து நெடுஞ்சா லைத் துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் பேசி னார். ஒரு மாதகாலத்திற்குள் மேம்பாலம் பகுதியில் உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதி யளித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் கூறினார். இதனையேற்ற பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் புதுவை - திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூனிமேடு ஊராட்சி. இங்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள விநாயகர் கோவிலில் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதும், அதனைத் தொடர்ந்து விநாயகர் கோவிலுக்கு திருவிழா நடத்துவதும் வழக்கமாக உள்ளது.
இதேபோல் இவர்கள் வைக்கும் விநாயகர் சிலைக்கு அருகில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினரும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினரும் வழக்கம்போல் தாங்கள் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் கொட்டகை அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதிக் கொள்ளும் அபாயம் உருவானது.
இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து முறையாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யுமாறு கூறினர்.
ஆனால் போலீசாரின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் இன்று விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யக்கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்த தடையை மீறி யாரும் அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் இது சம்பந்தமாக இரு தரப்பையும் அழைத்து மரக்காணம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தவும் போலீஸ் சார்பில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது.
- இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதில் மயிலம் அடுத்த பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.
மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கால் நடைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.
மயிலம், செப்.17-
மயிலம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றஸ்சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலையில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 6 மாத காலமாக கோவிலை புரைமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டி கோவில் புதுப்பிக்கப்ட்டு கோவில் அருகில் யாக சாலை அமைத்து கடந்த 15-ம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் பால சித்தர் வள்ளி தேவசேனா உடனுற சுப்பிரமணியர் வழிபாடு கணபதியாகம் நடைபெற்றது.மாலை 3 மணி அளவில் பூமித்தாய் புதல்வன் வழிபாடு புனித மண் சேகரித்தல் முளைப்பாரி எடுதல் காப்பு கட்டுதல் இறைவனை கலசங்களில் எழுந்தருள செய்தல் முதற்கால வேள்வி நெய் முதலான 108 புனித பொருட்களால் முதற்கால யாகம் நடந்தது. 16-ந் தேதி காலை 8.30 மணி அளவில் புனித ஆ வழிபாடு, 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.
108 நெய் முதலான புனித பொருட்களால் 3-ம்கால யாக கேள்விகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு யாக வேள்வி தத்துவங்கள் பூ சித்து இறை மூர்த்தத்தில் சேர்த்தல் நெய் மற்றும்108 புனித பொருட்களால் 4-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலை அளவில் புனித கலசங்கள் புறப்பாடு 6.45 மணி அளவில் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் விமான கலசம் மீது மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சுவாமிகள் கோபுர கலசம் மீது புனித நீரை ஊற்றியும் மூலவர் சுந்தர விநாயகருக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மை புற ஆதீனம் 20 பட்டம் சிவஞானபாளைய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
- மழை நீரானது சாலையில் தேங்கி சேரும் சகதியுமாக மாறி உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் மற்றும் மயிலம், பகுதியில் நேற்று இரவு 8 மணியில் இருந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இன்று காலை 5 மணி வரையில் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய பெய்த கனமழையால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழை நீரானது புகுந்தது.
திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் மழை நீரானது சாலையில் தேங்கி சேரும் சகதியுமாக மாறி உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அண்ணாமலை பேசுகிறார்.
- தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டுவிட்டு அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார் அண்ணாமலை.
விழுப்புரம்:
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோலியனூரில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணாவை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாவை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. கூட்டணியில் இருந்து கொண்டு தரம் தாழ்ந்து பேசுகிற அண்ணாமலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். அ.தி.மு.க. துணை இல்லாமல் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. மோடி மீண்டும் பிரதமராகுவதற்கு அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை. திட்டமிட்டே அண்ணாவை அண்ணாமலை இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார்.
அரசியலை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. வெற்றி பெற கூடாதென தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அண்ணாமலை பேசுகிறார். அதனால்தான் தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டுவிட்டு அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார் அண்ணாமலை.
உங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் தன் இருப்பை காட்டிக்கொள்ள கூட்டணி தர்மத்தை மீறி பேசிக்கொண்டிருக்கிறார். எங்களை விமர்சனம் செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அ.தி.மு.க.விற்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் முக்கியம். அண்ணாமலை கூட்டணியை பிரிக்க வேண்டுமென்று கங்கனம் கட்டி பேசிகொண்டிருக்கிறார். அண்ணாமலையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைமையிடம் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
- ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழுப்புரம்:
மரக்காணம் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் உலக ஓசோன் தினத்தை பெற்றோர்கள் மற்றும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
பள்ளி தாளாளர் அருணாச்சலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, புவி வெப்பமய மாதலை தடுக்க மாணவர்கள் அனைவரும் ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி செயலாளர் பாரதியார் ரவிக்குமார் முன்னிலை யில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓசோன் படலத்தை பாதுகாப்போம் உறுதி மொழி ஏற்றனர்.






