என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது.
    • கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கள் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் சி. அண்புமணி போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி. விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்த பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அப்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடது. அந்த நேரத்திலேயே 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

    தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது. இவர்களுடன் அ.தி.மு.க. இல்லை. எனவே, தி.மு.க. வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.க.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
    • திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்கள்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கிய நிலையில் வரும் 21-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முக்கிய வீதிகள் வழியாக வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் பொன்முடி, எம்.பி., ஜெகத்ரட்சகன், கௌதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    • மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
    • நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்ததால், தி.மு.க., பா.ம.க.விடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளை பெற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் நீண்ட கால பல கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். அவை பின்வருமாறு:-

    விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் முடங்கி கிடக்கிறது. இந்தத் திட்டம் முழுமை பெற்றால் இந்த தொகுதியில் சுமார் 40 ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    இந்த தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைகளை தேடி வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்ற நிலை உள்ளது. இந்த பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும்.

    விக்கிரவாண்டி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு புதிய கட்டிட வசதியோடு இயங்கி வருகிறது. இந்த தாலுகாவை இணைக்கும் வகையில் காணை ஒன்றிய பகுதிகளில் இருந்து இந்த தொகுதியின் கடைக்கோடி பகுதி அன்னியூர், நல்லாபாளையம், கண்டாச்சிபுரம், கடையம், லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் வழியாக விக்கிரவாண்டி தாலுகாவை அடையும் வகையில் பஸ் வசதி மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கு லட்சுமிபுரம், முண்டியம்பாக்கம் அல்லது நரசிங்கனூர், புதுப்பாளையம், விக்கிரவாண்டி, வழியாக வருவதற்கு பஸ் வசதிசெய்து தர வேண்டும்.

    முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்படும் மருத்துவ கழிவுகள் மலை போல் குவிந்து பல்வேறு நோய்கள் பரப்பும் விதமாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செஞ்சி பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரத்தூர் முண்டியம்பாக்கம் வழியாக வரும் பொழுது முண்டியம்பாக்கம் ரெயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் ஆகவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

    சமீபத்தில் விக்கிரவாண்டி பேரூராட்சி காணை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் கடல் குடிநீர் ஆகும் திட்டம் மரக்காணம் பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இருப்பினும் மேற்கண்ட பகுதிகள் பயன்பெறு வகையில் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் .

    தமிழகத்தின் தென்மாவட்டம் கன்னியாகுமரி முதல் தலைநகரான சென்னைக்கு விழுப்புரம் விக்கிரவாண்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். விக்கிரவாண்டியில் சென்னை செல்லும் அரசு பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சி வரைக்கும் செல்லும் அரசு பஸ்களும் புறவழிச் சாலையில் நின்று செல்வதில்லை.

    பயணிகள் விக்கிரவாண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இறக்கிவிடப்படுகின்றனர். நிரந்தரமாக விக்கிரவாண்டி புறநகர் பஸ்கள் கட்டாயம் நின்று செல்லும் வசதி செய்து தர வேண்டும் மற்றும் விக்கிரவாண்டியில் உள்ளஅரசு பஸ் பணிமனை விரிவாக்கப்பட்ட அரசு பணிமனையாக அமைக்க வேண்டும்.

    விவசாயம் மற்றும் விவசாய நிலத்தடி நீர் மற்றும் உயரம் வகையில் பம்பை ஆறு மற்றும் வராக நதி ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

    விக்கிரவாண்டி தாலுகா அன்னியூர் குறு வட்டத்தைச் சேர்ந்த நல பாளையம், கடையம், புது கருவாச்சி , பழைய கருவாச்சி,டி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு வரவேண்டும் என்றால் கண்டாச்சிபுரம் வந்து கண்டாச்சி புரத்திலிருந்து விழுப்புரம் வந்து, பின்னர் விக்கிரவாண்டி வரவேண்டிய நிலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் 3 பஸ் மாறி வர வேண்டிய நிலை உள்ளது.

    தற்போது கண்டாச்சிபுரம் தாலுக்கா அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், இந்த தாலுக்காவை சேர்ந்த கிராமங்களை கண்டாச்சிபுரம் தாலுகாவில் இணைத்தால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தாலுக்கா சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இப்பகுதி மக்கள் காணை ஒன்றியத்திற்கு செல்வதற்கு நேரடி பஸ் வசதியும் செய்து தர வேண்டும்.

    இது மட்டுமல்லாமல் தாலுக்கா கருவூலம், மாவட்ட நூலகம், உட்கோட்ட காவல்துறை, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையத்திற்கு தனி இட வசதி. அரசுதொழிற்கல்லூரி, கிராமங்களை இணைக்கும் கிராம சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இத்தொகுதி மக்களின் கனவு கோரிக்கைகளாகவே இருக்கிறது.

    • விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜீலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மதியம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் உள்ள ஏறி நின்று ஒரு விரல் உயர்த்தி செல்பி எடுத்துக்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தனி தாசில்தார் ஜெயலட்சுமி, விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்.
    • சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காணை அடுத்த கொசப்பாளையத்தில் நடந்தது. தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    இந்த இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள். காரணம் மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ளனர்.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை. அ.திமு.க.வினர் ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக இம்முறை தி.மு.க.,விற்கு தான் வரும்.

    சமூக நீதி பற்றி பேசும் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், இத்தேர்தலில் பா.ஜ.க, வுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி வாரி கணக்கு எடுப்பு பற்றி பேசும் ராமதாஸ், அதை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறார்.

    சமூக நீதி பற்றி பேச தி.மு.க.,விற்கு தான் தகுதி உண்டு, காரணம் ஜாதி, மதம் பார்த்து தி.மு.க., எதையும் செய்வதில்லை. சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    தி.மு.க., மாதிரி தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிற கட்சிகள் ஏதுவும் கிடையாது. சமூக நீதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக வாய்ப்பளித்தார்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

    • ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமைச்சர் செஞ்சி மஞ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
    • பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அத்தொகுதியில் அமல்படுத்தப்பட்டன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரகுராமன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .

    அப்போது சென்னையிலிருந்து நெய்வேலிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 160 சில்வர் டிபன் பாக்ஸ், 48 பிளாஸ்க் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் காரில் வந்தவர் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் , பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு பரிசு பொருட்களை கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

    எனினும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பரிசு பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் ஒப்படைத்தனர். பின்னர் அலுவலக அதிகாரிகள் அந்த பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

    • பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், "நேர்மையுடனும், பாரபட்சமின்றியும் வாகன சோதனை நடத்துங்கள்" என்று தேர்தல் பறக்கும் படைக்கு உத்தரவிட்டார்.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும், தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி ஆய்வு செய்தார். அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாகன சோதனையின்போது நேர்மையுடனும், கணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அதேநேரத்தில் எந்தவித பாரபட்சமும் பாராமல் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளும்படியும், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் பறக்கும் படையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    • கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
    • பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    மயிலம்:

    மயிலம் அருகே செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கர்ண மோட்சம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்காக கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

    இதில் அங்கிருந்த அவுட்டு மற்றும் சரவெடிகள் மீது எதிர்பாரத விதமாக தீப்பொறி விழுந்தது. இதனால் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சக்திவேல் மகன்கள் கவியழகன் (வயது 7), தமிழழகன் (5) சுப்பிரமணியன் மகன் கவுஷிக் (7), காளி மகன் அன்பு (10), சிவமூர்த்தி மகன் உதயா (7), எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன் (47) ஆகியோரை மீட்டு திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் சிறுவன் உதயாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    செஞ்சி:

    குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் (வயது 35) மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று காலை குவைத் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட 7 தமிழர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் தனி ஆம்புலன்ஸ் மூலம் முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் செஞ்சி மற்றும் காட்டுமன்னார்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது.

    அப்பொழுது முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.

    முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடலை பார்த்ததும் அவர்களது மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதனைத் தொடர்ந்து செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை தலைமையிலான வருவாய்த்துறையினர் முகமது ஷெரிப் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை அவருடைய மத வழக்கப்படி முகமது முகமது ஷெரீப் உடல் உறவினர்கள் முன்னிலையில் செஞ்சியில் உள்ள பத்ஹா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்தனர்.

    அதுபோல் சின்னதுரை உடலுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வட்டாட்சியர் சிவக்குமார், எம்.ஆர்.கே. கல்வி குழுமத்தின் தலைவர் கதிரவன் மற்றும் காட்டுமன்னார்கோவில், எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், கேபிள் எழில் சிவா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சின்னத்துரை உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.
    • காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கீழ்செட்டி தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன் (வயது 53). இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 2015-17-ம் ஆண்டுகளில் இவர் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றியபோது உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இழப்பீடு மற்றும் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு போலீஸ்) விசாரணை நடத்தினர். அதில் தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 குழுக்களாக பிரிந்து தாசில்தார் சுந்தரராஜன் வசிக்கக்கூடிய கீழ்செட்டி தெருவில் உள்ள வீடு மற்றும் அரசு ஊழியர் குடியிருப்பு, சுந்தரராஜனுடன் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றிய விழுப்புரம் செல்வராஜ் நகரை சேர்ந்த தேவிகா மற்றும் முறைகேடுக்கு இடைத்தரகராக இருந்த வளவனூர் அருகே உள்ள தாதாம்பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    தாசில்தார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.
    • தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    விக்கிராவண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். ஆனால் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கபடவில்லை.

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.

    வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதை தொடர்ந்து 11.10 மணிக்கு அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார் சுயேட்சையாக போட்டியிட ரூபாய் நோட்டு மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.


    பின்னர் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை ரூ.10 ஆயிரத்தை சில்லரை காசுகளை மூட்டையாக கொண்டு வந்து தேர்தல் அலுவலரிடம் வழங்கினார். அதற்கு அடுத்தபடியாக தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    மேலும் நூர் முகமது, ராஜேந்திரன் ஆகியோரும் சுயேட்சையாக போட்டியிட தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    ×