என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
    • புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், புதுச்சேரிக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் அங்குள்ள தென் ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

    இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செ.மீ. மழை பெய்திருந்தது. தற்போது 47 செ.மீ. மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏரியை சுற்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • கிடங்கல் ஏரியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்தது.

    திண்டிவனம்:

    வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் திண்டிவனத்தில் கிடங்கல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கிடங்கல் ஏரி நிரம்பியதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அத்தியாவாசிகள் தேவையான பொருட்கள் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த கிடங்கல் ஏரியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும் மேலும் மழைநீர் வீடுகளுக்குள் வராமல் இருக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்தது

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதலே மேக மூட்டங்களுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழையின் வேகமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த மழை இரவு முழுக்க கொட்டி தீர்த்தது. இதனால் மரக்காணம் பகுதியில் ஒரே நாளில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இந்த கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரானது மழை நீரோடு சேர்ந்து உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் மரக்காணத்தில் உள்ள சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பங்கள் மூழ்கி தற்போது பெரிய ஏரி போல் காட்சியளிக்கிறது. உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள உப்பளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    மரக்காணம் அருகே 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. காணிமேடு, மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மரக்காணம் செல்ல வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தூரம்சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது . இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் அப்பகுதியில் கட்டும் மேம்பாலம் பணியை உடனடியாக கட்டி முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
    • மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    மரக்காணம்:

    தமிழக பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை பெய்தது. இந்தப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உண்டானது. இது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறுகின்றனர். இதுபோல் ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தற்பொழுது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலில் மாறுபட்ட நீரோட்டம் ஏற்பட்டு கடல் அலைகளின் சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடல் அலைகளின் சீற்றம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

    • கடந்த 30-ந்தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணி உடலில் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்தார்.
    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் என்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி ராணி (வயது 47). இவர்களது மகன் கருணாமூர்த்தி. இவர், கடலூர் பாலூர் பகுதியை சேர்ந்த சுவேதா (20) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.

    பாண்டியனை ஒரு வழக்கில் போலீசார் தேடுவதால் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். கருணாமூர்த்தி சென்னையில் தங்கியிருந்து பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சுவேதாவும், ராணியும் மட்டும் என்.ஆர்.பாளையத்தில் உள்ள வீட்டில் இருந்து வந்தனர்.

    கடந்த 30-ந்தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணி உடலில் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதில் மருமகள் சுவேதா அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிவேதாவை கைது செய்தனர்.

    போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சதீஷ்குமாருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தோம்.

    இது எனது மாமியார் ராணிக்கு தெரிந்து என்னை கண்டித்தார். எனது கணவரிடம் கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து விடுவதாகவும் மிரட்டினார். இதனால் பயந்துபோன நான் கள்ளக்காதலன் சதீஷ்குமாரிடம் தெரிவித்தேன். அவர், எனது மாமியாரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விடலாம் என்று கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன். இதற்காக அவர் என்னிடம் ரூ.500 கொடுத்து பெட்ரோல் வாங்கி வைக்குமாறு தெரிவித்தார். அதன்படி 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி வீட்டில் மறைத்து வைத்திருந்தேன்.

    கடந்த 30-ந்தேதி மாமியார் ஹாலில் தூங்கினார். அன்று இரவு 10 மணிக்கு பிறகு வீட்டிற்கு வந்த சதீஷ்குமாரிடம் பெட்ரோலை எடுத்துக் கொடுத்தேன். அவர் எனது மாமியார் மீது பெட்ரோலை ஊற்றினார். நான் அவர் மீது தீக்குச்சியை கொளுத்திப்போட்டேன். இதனால் உடலில் தீப்பற்றி அவர் அலறி துடித்தார். ஆனால் நான் எனது அறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டு தூங்குவது போல் நடித்தேன். சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.

    இதைடுத்து கள்ளக்காதலன் சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    • அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுமார் 4 மணி நேரமாக நடந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இங்கு மயிலம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பத்திரப்பதிவு செய்ய வருவார்கள். இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் அங்குள்ள அதிகாரிகள், பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வாங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார், மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு சார்பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள், இவர்களை தவிர இடைத்தரகர்களும் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் சிலரும் இருந்தனர். உடனே அவர்கள் யாரும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு கதவுகளை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் அங்குள்ள பீரோக்களை திறந்து பார்த்தும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி காலையில் இருந்து மாலை வரை யார், யார் பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளனர். எத்தனை பேர் வந்தனர், அவர்களில் எவ்வளவு பேருக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது என்பது குறித்த விவரங்களை சேகரித்து அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சுமார் 4 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் போது அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கு அதிகாரிகள் உரிய கணக்கு காண்பிக்காததால் கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவற்றுடன் சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

    கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் கணேசன், வீர. அப்துல்லா, பால சுப்பிரமணியன், டிரைவர் சரவணன், புரோக்கர் செல்வம் உள்ளிட்ட 6 பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.
    • கூல் லிப் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திரா, பீகார், ஒடிசா மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகம் அம்பலமாகி தி.மு.க. சொல்லும் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. பொய்கள் மூலம் அரசு மக்களை ஏமாற்ற முடியாது. தெலுங்காவின் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாதத்தின் இறுதியில் முடிகிறது. இப்பணிக்கு ரூ 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு ரூ.250 கோடியில் 2 மாதத்தில் நடத்திமுடிக்கலாம். தெலுங்கானா காங்கிரஸ் அரசிடம் தி.மு.க. பாடம் கற்க வேண்டும். ஸ்டாலினின் முகமூடியை ராகுல்காந்தியும், ரேவன் ரெட்டியும் கழட்டியுள்ளனர். இதுவே தேசிய அளவில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்புக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.

    அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவேண்டும். 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதை மாற்றப்படவேண்டும். மருத்துவத்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவே பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம். ரூ. 40 ஆயிரம் கோடியை வரும் ஆண்டில் நிதி ஒதுக்கவேண்டும்.

    கூல் லிப் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் புகையிலை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. நீதிமன்றம் இந்த புகையிலைக்கு மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. எனவே மத்திய அரசு இப்புகையிலையை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் 2500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவிற்கும், அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன். இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவெனில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தவறில்லை. உதாரணமாக மரத்தில் கொழுந்தாக உள்ள இலை பின் பழுத்து விழுந்தால் அது தவறில்லை.

    சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கோட்டைக்கு போகாத நான் கோட்டைக்கு சென்று இக்கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினேன். இக்கணக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினை பாராட்டுவேன். நாகரீகமாகவும், நளினமாகவும் எங்கள் செயல்பாடுகள் உள்ளது. காவல்துறையில் கருணாநிதி கூறியது போல ஈரல் மட்டுமல்ல இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டது. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சென்ற மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர்மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஏமாளிகள். பொறுத்து பொறுத்து பார்க்கிறோம்.

    சிறைக்கு செல்வது எங்களுக்கு புதிது அல்ல. அமைதியை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. நூற்றுக்கு மேற்பட்ட அம்பேத்கர் சிலையை நான் திறந்து வைத்தேன். அச்சிலையை சேதப்படுத்தினால் பா.ம.க., வன்னியர் சங்கம்தான் குரல் கொடுக்கும். கடலூர் காவல்துறைக்கு கற்பனை அதிகம். ஒரு சார்பு இல்லாமல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களை அடக்க முடியாது. நாங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். கருணாநிதிதமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பார். அதையே நானும் சொல்கிறேன்.

    சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் அப்போது பொதுக்குழுகூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் இந்நூற்பா பொருந்தலாம். பிராமிணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முதலில் நான் தான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வன்னியர் சங்கத்தலைவர் பு. தா. அருள்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திறந்த வெளி ஏலக்கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் விற்பனைக் குழு-ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 2 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட ஒரு கிடங்கு, 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழவகைகள் (எளிதில் அழுகும் வேளாண் பொருட்கள்) இருப்பு வைத்து ஏல விற்பனை செய்வதற்காக 25 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு மற்றும் ஒரு திறந்தவெளி எலக் கொட்டகை ஆகிய வசதிகள் உள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல், நிலக்கடலை, பருத்தி, எள் ஆகிய வேளாண் பொருட்களை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்த அன்றைய தினமே தரப்பரி சோதனை கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் ஏலதார்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் விடப்படுகின்றன.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் விற்பனைக்குழு-ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி எள், நிலக்கடலை (மணிலா) மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளையும், திறந்த வெளி ஏலக்கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் விற்பனை செய்வதற்காக வந்திருந்த பிடாகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயியிடம் தற்பொழுது நெல் விற்பனை செய்ததற்கான ஏலத்தொகை விவரம், எத்தனை நாட்களுக்குள் தங்களுடைய வங்கி கணக்கில் நெல்லிற்கான தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து, அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    மேலும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அன்றாட சந்தை நில விவரம், விளைபொருட்கள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார்.

    விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருட்களுக்கான ஏலத்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் இ-நாம் மின்னணு ஏல முறை திட்டத்தின்கீழ், வரவு வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கணினியில் அமர்ந்து கணினியை இயக்கி ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      விழுப்புரம்:

      தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டம் வாரியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

      இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 9.40 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து வெளியே வந்தார். அவருடன் அமைச்சர் பொன்முடியும் வந்தார். சுற்றுலா மாளிகை வாசலில் தி.மு.க. வக்கீல்கள் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

      பின்னர் சிக்னல் பகுதிக்கு வந்தார். உதயநிதி ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு வரவேற்றனர். மக்கள் வெள்ளத்தில் அவர் மிதந்து வந்தார்.

      அவருக்கு கேரள செண்டை மேளம், பறை இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

      சாக்கு மூட்டைகளை நீங்களே கொண்டு வருகிறீர்களா என கேட்டார். அதற்கு விவசாயிகள் சாக்கு மூட்டைகளை நாங்கள் தான் கொண்டு வருவோம். கொள்முதல் செய்த பின்னர் அதனை எடுத்து சென்று விடுவோம் என்றனர். வியாபாரிகள் உரிய முறையில் பணம் வழங்குகிறார்களா என கேட்டார்.

      அங்குள்ள நெல், பஞ்சு உள்ளிட்ட 12 குடோன்களையும் ஆய்வு செய்தார். பின்னர் வெளியே வந்த அவருக்கு மல்லர் கம்பர் விளையாட்டு சிறுவர் , சிறுமிகள் 6 முதல் 21 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

      விழுப்புரம் நகராட்சி 13-வது வார்டில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன் தலைமையிலும், காந்தி சிலை அருகே விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ் செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

      விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளியின் எதிரே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

      அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் அறிவாலயம் வந்தார். அங்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். அதன்பின்னர் திருச்சி புறப்பட்டு சென்றார்.

      • கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி.
      • முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

      விழுப்புரம்:

      விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மரகதம் கந்தசாமி திருமண மண்டபத்தின் முன்பு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதிக்கு 3 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

      விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

      எனக்கும் இந்த விழுப்புரம் மாவட்டத்திற்கும் ஒரு நெருங்கிய, மறக்க முடியாத சொந்தமும், பந்தமும் உண்டு. நான் இளைஞரணி செயலாளராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பலமுறை இங்கு வந்துள்ளேன்.

      ஆனால் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக உங்களுடைய அன்பைப்பெற்று இங்கு வந்துள்ளேன். அதுவும் முதல் நிகழ்ச்சியாக கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      நான் 21 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2003-ம் ஆண்டில் தளபதி நற்பணி மன்றம் சார்பாக கவுதமசிகாமணி ஏற்பாடு செய்த விளையாட்டுப்போட்டி தான், எனது பொது வாழ்வில் முதன்முறையாக தொடங்கி வைத்த போட்டியாகும்.

      தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளை தொடங்கிவைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

      கலைஞரின் கொள்கைகள், லட்சியங்கள், அவருடைய எழுத்துக்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்று அனைத்து இடங்களிலும் கலைஞர் சிலையை திறந்து வைத்து வருகிறோம்.

      கலைஞர் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

      முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்திய திட்டங்களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். மகளிருக்கு கட்டண மில்லா பஸ் பயணம் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை மகளிர் சேமிக்கிறார்கள்.

      இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகைவழங்கப்பட்டு வருகிறது.

      இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் புதல்வன் என்றபெயரில் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

      மேலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டம் என்ற அற்புதமான திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

      இதுதவிர முத்தாய்ப்பு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

      ஒரு சில மாவட்டங்களில் இந்ததொகை விடுபட்டிருப்பதாக குறைகள் இருக்கிறது. அந்த குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இந்தநேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

      நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.விற்கு தேடிக் கொடுத்தீர்கள்.

      40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து 100 சதவீதம் வெற்றியை கொடுத்தீர்கள். தி.மு.க. அரசுக்கு மக்களால் கொடுக்கப்பட்ட நற்சான்றுதான் இந்த வெற்றிக்கு காரணம்.

      வரக்கூடிய 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்து குறைந்தது 200 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வைத்து தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் எல்லோரும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக இன்று முதலே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய அரசின் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளி இருப்பார்.

      அவர்களை தொடர்பு கொண்டு இப்போதே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனை கலைஞர் சிலை முன்பு நாம் எல்லோரும் உறுதி ஏற்கவேண்டும். எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும், எப்பேற்பட்ட கூட்டணி போட்டு வந்தாலும் அவர்களை வீழ்த்தி விட்டு தி.மு.க. கூட்டணியை மாபெரும் வெற்றி பெற வைக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் அயராது தேர்தல் பணியாற்ற வேண்டும்.

      இவ்வாறு அவர் பேசினார். 

      • தி.மு.க. கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.
      • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

      நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது, தி.மு.க. கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.

      இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

      விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் நடிகர் விஜய்-க்கு பதிலடி கொடுத்தார்.

      "எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, தி.மு.க.வுக்கே வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி அமைந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும்," என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

      ×