என் மலர்tooltip icon

    வேலூர்

    • கடையில் இல்லாதபொருளை கேட்டதால் தகராறு
    • போலீசார் கைது செய்தனர்

    காட்பாடி:

    கழிஞ்சூரை சேர்ந்தவர் அன்பு இவர்ரெயில்வே கேட் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு 7 மணிக்கு சேனுர் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 36), அவருடைய தம்பி சதீஷ்குமார் (34) ஆகியோர் கடைக்கு வந்தனர்.

    கடையில் இல்லாதபொருளை கேட்டதால் அன்பு இல்லை என கூறினார். உடனே அவர்கள் இருவரும் தகராறு செய்ததால் அன்பு கடையை மூடினார்.

    இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அன்புவை தாக்கியுள்ளனர். இது குறித்து அன்பு விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காசிக்குட்டைக்கு செல்லும் சாலை யில் நின்று கொண்டிருந்த சாந்தகுமார், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • டிராக்டர் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திர காவிரி ஆற்றில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 24) என்பதும், இவர் ஆற்றில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    • குடியாத்தம் அருகே சுற்றித்திரிந்ததால் சந்தேகம்
    • மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது

    வேலூர்:

    குடியாத்தம் டவுன், ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம்பட்டியில் நேற்று மாலை வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்தார்.

    இதனால் வட மாநில வாலிபர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். பொதுமக்கள் வட மாநில வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ரெயில் டிக்கெட் எடுத்து ரெயிலில் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    மனநலம் பாதிக்கப்பட்டு ரெயிலில் வரும் வட மாநில வாலிபர்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம் பட்டியில் சுற்றித் திரிவது வழக்கமாக உள்ளது.

    அதேபோல் தான் இந்த வாலிபரும் வந்து உள்ளார். மனநலம் பாதிக்கப் பட்டவர் என தெரிந்ததால் அவரை ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.

    • நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை அருகே உள்ள சின்ன நாகல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தீபா என்கிற தேவி (35).

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கிருஷ்ணமூர்த்தி, அடிக்கடி மனைவி தீபாவிடம் தகராறு செய்வார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    நேற்று இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகிலிருந்த விறகு கட்டை எடுத்து, தீபாவின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த தீபா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி வீட்டிலிருந்த கயிறை எடுத்துவந்து, தீபாவின் கழுத்தை இறுக்கினார். இதில் தீபா துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • பைக் பறிமுதல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த அரிமலை, மலைஅடிவாரத்தில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர் 3 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வருவது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பைக் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து, பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை பகுதியை சேர்ந்த உலகநாதன் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி ஊராட்சி பூசாரிவலசை பகுதியில் பக்காசூரன்பட்டி, ஆலங்கனேரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    அதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை பரதராமி-பனமடங்கி செல்லும் சாலையில் பூசாரிவலசை கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சாலையின் இரு புறமும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்காக வெளியூர் செல்லும் கிராம மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    அதனை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • போலீசார் விசாரணை
    • பள்ளிக்கு விடுமுறை நாளில் துணிகரம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் வகுப்பு முடிந்ததும் பெல் அடிக்க தண்டவாள இரும்பு துண்டை பயன்படுத்தி வந்தனர்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மணி அடிக்கும் தண்டவாளம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எதிரே நிற்க வைத்து இருந்த பைக் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

    • குடிபோதையில் அசம்பாவிதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்( 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு மகன் மற்றும் 2 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

    ராஜேஷ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் திலகவதி கணவனை பிரிந்து தனது 2 வயது மகனுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 4 வயது மகன் அவரது தந்தை ராஜேசுடன் வசித்து வந்தான்.

    இந்த நிலையில் திலகவதி நேற்று கணவனிடம் சென்று, 4 வயது மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டார். அப்போது ராஜேஷ் மகனை, மனைவியுடன் அனுப்ப மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து திலகவதி மீண்டும் தாய் வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டார்.

    சிறுவன் கைகள் அறுப்பு

    இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த ராஜேஷ் தனது கைகளால் பிளேடால் அறுத்துக் கொண்டு தனது 4 வயது மகனின் 2 கைகளையும் பிளேடால் அறுத்துள்ளார்.

    அப்போது வலி தாங்க முடியாமல் துடித்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ராஜேஷிடமிருந்து குழந்தையை மீட்டனர்.

    பின்னர் ரத்த காயங்களுடன் துடித்த 4 வயது சிறுவனை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் 4 வயது மகனின் கைகளை தந்தையே பிளேடால் அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2008-ம் ஆண்டு கட்டப்பட்டதாக அதிகாரி தகவல்
    • அலுவலக கட்டடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலுார் மாவட்டத்தில் குடியாத்தம் தாலுகாவில் காட்பாடி இருந்து வந்தது. இதனால், காட்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பட்டா, சிட்டா, வருமானம் ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகளைப் பெற வேண்டும் என்றால், 31 கி.மீ. தொலைவில் உள்ள குடியாத்தத்துக்கு செல்லவேண்டி இருந்தது.

    இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, 1998-ம் ஆண்டு குடியாத்தத்தில் இருந்து காட்பாடி யை பிரித்து தனி தாலுகா உருவாக்கப்பட்டது.

    இதையடுத்து, சித்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பகுதியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில், 2008-ம் ஆண்டு ரூ.ஒரு கோடியே 27 லட்சம் செலவில், காட்பாடி குடியாத்தம் சாலையில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது, காட்பாடி புதிய தாலுகா உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு அடைந்தது. இதையொட்டி அலுவலக கட்டடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம் கூறியதாவது:-

    காட்பாடி புதிய தாலுகாவாக உருவாக்கப் பட்டு இன்றுடன் (நேற்று) 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தாலுகா பிரிக்கப்பட்ட நிகழ்வை வெள்ளி விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

    • ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி, பகுதி-2, 19-வது தெருவில் சப்தகிரி என்ற வணிக வளாகம் உள்ளது.

    இந்த வணிக வளாகத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா என்ற தனியார் வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் முன் பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இன்று அதிகாலை 3.10 மணிக்கு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்தனர்.

    அவர்கள் கையில் வைத்து இருந்த இரும்பு ராடால் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவை உடைத்தனர்.

    பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தி மூலம் அலாரம் ஒயரை துண்டித்தனர். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது.

    இதனைக் கேட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதே போல் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது.

    தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இது குறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க வந்தது தெரிய வந்தது.

    மேலும் கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் வடமாநில நபர்கள் ஈடுபட்டார்கள் அல்லது உள்ளூரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொள்ளை போகாமல் தப்பியுள்ளது. இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
    • 6 பேரை தவிர மீதமுள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், வள்ளிமலை அடுத்த மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாக:-

    மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நாகதேவி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஏல சீட்டில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என மொத்தம் 40 பேர் பணம் செலுத்தினோம்.

    இதில் 6 பேரை தவிர மீதமுள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால் எங்கள் 6 பேருக்கு மட்டும் பணத்தை தராமல் அவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.

    இது குறித்து கேட்டால் அவர்கள் மிரட்டுகின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • ஒட்டுமொத்த கொசு ஒழிப்பு பணி தீவிரம்
    • தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் ஒட்டுமொத்த டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து சுகாதார அலுவலர் லூர்த்துசாமி தலைமையில் அலமேலுமங்காபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக அங்கு 75 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் சென்று அபேட் கரைசல் தெளிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.

    கடந்த இரண்டு நாட்களாகவிட்டு விட்டு மழை பெய்து வருவதால் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×