என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Park"

    • கும்கியாக மாற்ற ஆலோசனை
    • கூட்டத்தை இழந்து தனியாக சுற்றி திரிந்ததால் ஆக்ரோஷமாக காணப்பட்டது

    வேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், குடிபாலா மண்டலம், 190 ராமாபுரம் ஹரிஜன வாடா கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேரை ஒற்றை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

    தகவல் அறிந்து அங்கு சென்ற ஆந்திர வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனை அடுத்து யானை நேற்று முன்தினம் ஆந்திரா எல்லைப் பகுதியை கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் வன பகுதியில் சுற்றி திரிந்தது.

    காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள சூளைமேட்டு பகுதியில் பாலகிருஷ்ணன் (வயது 60) என்ற விவசாயின் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை தும்பிக்கையால் தாக்கி வீசியது.

    இதில் ஆடுகள் மற்றும் மாடுகள் யானையை கண்டு பயத்தில் கத்தியது. சத்தம் கேட்டு வெளியே வந்த பாலகிருஷ்ணன் மனைவி வசந்தா (54) என்பவரை மிதித்து கொன்றது.

    தொடர்ந்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் அந்த யானை தமிழக வனப்பகுதியில் இருந்து தப்பித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமாபுரம் ஏரி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியது.

    இரு மாநில வனக்குழுவினர் 100 பேர், ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானைகளான ஜெயந்த், விநாயகா ஆகிய 2 யானைகள் மூலம், அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை 3 மணியளவில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மழைபெய்து வந்ததால், மாலை 4.30 மணியளவில் மற்றொரு மயக்க ஊசி செலுத்தி, கும்கியானைகள் மூலம் யானை பிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து சித்தூர்மாவட்டம் பலமனேர் பகுதியில் உள்ள யானைகள் முகாமிற்கு லாரி மூலம் பிடிபட்ட யானையை கொண்டு சென்றனர். பின்னர் யானை திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பதி வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் யானை உடல்நிலை குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். தனது கூட்டத்தை இழந்து தனியாக சுற்றி திரிந்ததாலே அது ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதனுடன் தற்போது மற்ற யானைகள் இருப்பதால் ஆக்ரோஷம் குறைந்து அமைதியாக காணப்படுகிறது.

    இருப்பினும் அதன் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதனை கும்கி யானையாக மாற்றவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு கும்கி யானையாக மாற்ற, ஒற்றை யானைக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×