என் மலர்
வேலூர்
வாணியம்பாடி:
கர்நாடக மாநிலம் மைசூர் மாண்டியாவை சேர்ந்தவர் குருபிரசாத். இவரது மகள் திருமணத்திற்கு பட்டு புடவை எடுக்க உறவினர்களான நமிதா, மேக்னா, சுருதி, சிவம்மா, மம்தா உள்ளிட்ட 6 பெண்களுடன் காஞ்சிபுரத்திற்கு நேற்று காரில் புறப்பட்டு வந்தார்.
பட்டுபுடவை எடுத்து முடித்த பின்னர் மீண்டும் மாண்டியாவுக்கு காரில் சென்றனர். வாணியம்பாடி சுங்கசாவடி அருகே கார் இரவு 11 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் என்ஜினீல் இருந்து திடீரென புகை வந்தது.
இதனைகண்ட குருபிரசாத் உடனடியாக காரை நிறுத்தினார். காரில் இருந்தவர்களை உடனடியாக வெளியே வரும்படி கூறினார்.
இதனால் காரில் இருந்த பெண்கள் பட்டு புடவைகளை எடுத்து கொண்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட சுங்கசாவடி ஊழியர்கள் அம்பலூர் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தீ விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த பிரதீப் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் பி.இ. படித்து விட்டு வேலை தேடி வருகிறேன். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் தனியார் கம்பெனியின் பங்குதாரர்கள் என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை தருவதாகவும் என்னிடம் கூறினர்.
மேலும் அதே கம்பெனியை சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர். அதன் பிறகு சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார்கள்.
அவர்கள் பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வருவதாகவும் ரூ. ஒரு லட்சம் செலுத்தினால் 9 மாதத்தில் 2 லட்சமாக தருகிறோம் என்று தெரிவித்தனர்.
அதன்பிறகு வேலூரில் இதேபோல் ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். அதில் அவர்கள் கலந்துகொண்டு என்னையும் என்னோடு அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் முதலீடு செய்யுமாறு தூண்டினார்கள்.
அதிக முதலீடுகள் வாங்கி கொடுத்தால் கார் இலவசமாக தருகிறோம். வெளிநாடு அழைத்து செல்கிறோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை கூறினர்.
இதனை நம்பி ரூ. 70 லட்சம் வரை முதலீடு செய்தோம். அதன்பிறகு கடந்த 3 மாதங்களாக அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை கேட்ட போது தராமல் இழுத்தடித்தனர். தற்போது அவர்கள் தமிழகம் முழுவதும் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்துபணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் போலி டீ தூள் விற்பனை செய்யப்படுவதாக வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் சென்றன.
இது தொடர்பாக ஆய்வு நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், நாகேஸ்வரன், ரவிந்திரநாத், ராஜேஷ், பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 15-க்கும் அதிகமான கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 50 கிலோ, குட்கா ½ கிலோ மற்றும் தலா ½ கிலோ எடைகொண்ட போலி டீ தூள் 300 பாக்கெட்டுகள், எச்சரிக்கை விளம்பரம் இல்லாத 70 சிகரெட் பாக்கெட்டுகள், 2 மளிகை பொருட்களில் கலப்படம் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து டீ தூள் பாக்கெட்டுகளில் 2 விதமான மாதிரிகளையும், மளிகை பொருட்களில் 2 விதமான மாதிரிகளையும் சேகரித்து சேலம் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று பொதுமக்கள் நலனில் பங்கம் விளைவிக்கும் வகையில் கலப்பட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு முதல் முறை என்பதால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், 2-வது முறை என்றால் 10 ஆயிரம், 3-வது முறை என்றால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
வேலூர்:
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (43). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கி அவரது தந்தையின் உடல் நிலையை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் சிறுநீரக தொற்று சம்பந்தமாக வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பேரறிவாளன் இன்று சிகிச்சை பெற்றார். அவருடன் போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் சுட்டகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு, போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கே.ஜி.எப். பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருடன் 2-வது திருமணம் நடந்தது. மகேஷ் பெங்களூரில் வேலை செய்து வருகிறார். ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 18-ந்தேதி அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரம் சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி கழுத்தில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
ரேவதி அணிந்திருந்த 10 பவுன் நகை, செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ரேவதியின் உறவினர் டெய்லர் செல்வராஜ் (44). அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சித்ரா(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
செல்வராஜ் ஆம்பூர் டவுனில் டெய்லர்கடை வைத்துள்ளார். சித்ரா திருப்பூரில் டெய்லராக உள்ளார். இவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ரா ஊருக்கு வந்திருந்தார். கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்தனர். அப்போது ரேவதியின் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். நகைகளை விற்று கடனை அடைத்துவிட்டு உல்லாசமாக ஊர்சுற்ற முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று ரேவதியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்தனர். நகைகளை சித்ரா அவரது வீட்டின் அருகே மண்ணில் புதைத்து வைத்து விட்டு எதுவும் தெரியாததது போல் நடந்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான 2 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகில் உள்ள மாச்சம்பட்டு, கெனத்தூர், பாலூர், உள்ளிட்ட கிராமங்களுக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தென்னை, வாழை, தக்காளி, பூந்தோட்டங்களை சூறையாடியும், மிதித்தும் நாசம் செய்தன.
தொடர்ந்து யானை கூட்டம் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. நேற்று அதிகாலை சின்னவரிகம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்தன. அங்குள்ள தென்னை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தன.
மேலும் நெற்பயிர்கள், பூச்செடிகளை மிதித்து நாசம் செய்துள்ளன. யானைகள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததில் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.
15 விவசாயிகளுக்கு சொந்தமான 40 ஏக்கர் நெல், காய்கறி, பூச்செடிகள் நாசம் செய்துள்ளன.
வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை கூட்டம் நேற்று இரவு மிட்டாளம் அருகே உள்ள பைரப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தன. அங்குள்ள மாந்தோப்பில் மரக்கிளைகளை முறித்து வீசின. மேலும் மாலை வாழை தோட்டத்திற்கு புகுந்து அட்டகாசம் செய்தன.
நேற்று இரவு யானைகள் அட்டகாசத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் வீணாகியுள்ளது. தொடர்ந்து யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன.கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டத்தை காட்டு பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மார்கழி மாதத்தில் ஆந்திரா எல்லையோரம் உள்ள கிராமங்களில் நெல் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்கின்றனர்.
இதனால் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் யானைகள் வருவது வழக்கமாகி விட்டது.
கடந்த ஆண்டு மார்கழி மாதம் குடியாத்தம் அருகே கொட்டமிட்டா பகுதிக்கு ஆந்திர மாநிலம் கவுண்டண்யா சரணாலயத்தில் உள்ள யானைகள் கூட்டமாக வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் 11 காட்டு யானைகள் கொட்டமிட்டா விளை நிலங்களுக்குள் புகுந்து வாழை மா மரங்களை சேதபடுத்தின.
வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர். இந்த ஆண்டும் மார்கழி மாத தொடக்கத்திலேயே யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகேயுள்ள உமராபாத்தை ஒட்டி தமிழக- ஆந்திர எல்லையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
அவ்வபோது சிறுத்தைகள் நடமாட்டமும் காணப்படுகிறது. காட்டு யானைகளும் அடிக்கடி ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக வன எல்லைக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 7 காட்டு யானைகள் கூட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகில் உள்ள மாச்சம்பட்டு, கெனத்தூர், பாலூர், உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தென்னை, வாழை, தக்காளி, பூந்தோட்டங்களை சூறையாடியும், மிதித்தும் நாசம் செய்தன.
தொடர்ந்து யானை கூட்டம் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இன்று அதிகாலை சின்னவரிகம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்தன. அங்குள்ள தென்னை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தன.
மேலும் நெற்பயிர்கள், பூச்செடிகளை மிதித்து நாசம் செய்துள்ளன. யானைகள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததில் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.
15 விவசாயிகளுக்கு சொந்தமான 40 ஏக்கர் நெல், காய்கறி, பூச்செடிகள் நாசம் செய்துள்ளன.
இன்று காலை விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் யானைகள் பயிர்களை நாசம் செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வந்து யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.
இதில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டத்தை காட்டு பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர்கள் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தோன்றிய ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மாருதி நகரை சேர்ந்த சித்ரா இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில் எனது கணவர் குமார் ஏற்கனவே பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை திருமணம் செய்ததை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
என்னை ஏமற்றி ரூ.60 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து கொண்டார். தற்போது என்னை பிரிந்து முதல் மனைவியிடம் சென்று விட்டார். என் கணவர் மோசடி செய்த நகை, பணம் ஆகியவற்றை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் உடனே அங்கு சென்று மனு கொடுக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் ராணிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனும், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியும் சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி உண்ணாவிரதம் இருந்தனர்.
சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 19-ந் தேதி முருகனை சந்திக்க அவரது உறவினர் ஒருவர் வேலூர் சிறைக்கு வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த உணவு பொருட்களை உள்ளே எடுத்து செல்ல சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகனை சந்தித்த உறவினர் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், உறவினர் சந்திப்பின்போது பாதியில் எழுந்து சென்றார்.
இதற்கிடை யில், நேற்று முன்தினம் வேலூர் பெண்கள் சிறையில் நளினியை, முருகன் சந்தித்தபோது, சிறையில் மீண்டும் தனக்கு கொடுமை நடப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்க போவதாக நளினியிடம், முருகன் கூறினார்.
அன்று காலை முதல் உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தார். இன்று 3-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக மனு எதுவும் கொடுக்கவில்லை. ஜெயில் உணவை சாப்பிட மறுத்துள்ளார். பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, இரண்டடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையொட்டி கடந்த நவம்பர் 26-ந் தேதி இந்த திட்டத்தை கோட்டையில் அவர் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசு உடனே கிடைக்குமா? கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் பலர் இருந்தனர்.
இதையொட்டி தமிழக அரசு கடந்த 20-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியானது.
இதுபற்றி மதுரை, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
“தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள 27 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 10 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது” என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெறாத சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பை ரேசன் கடைகள் மூலம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
எந்த தேதியில் இருந்து பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பது பற்றி அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இதற்காக ஒவ்வொரு பொருட்களை பாக்கெட் போட்டு தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், ரொக்கப்பணம் ரூ.1000 வழங்குவதற்கான மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பணத்தை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் உணவு கூட்டுறவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தினமும் 150 முதல் 200 ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யும்படியும், எந்தெந்த தேதியில் எந்தெந்த தெருக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரேசன் கடைகளில் எழுதி ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பாக்கெட் போட வேண்டும். இன்னும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வராததால் பரிசு தொகுப்பு தயாராகவில்லை.
மேலும் ரூ.1000 பணம் வரவில்லை பொருட்கள், பணம் வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் அடுத்த வார இறுதியில் அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்றார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் வேலூர் ஒருங்கிணைந்த (திருப்பத்தூர், ராணிப்பேட்டை) மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 32885 ஆண்கள், 15 லட்சத்து 94921 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 180 பேர் உள்பட மொத்தம் 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒருங்கிணைந்த மாவட்டம் முழுவதும் உள்ள 1665 வாக்குசாவடி மையங்கள் சப்-கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட மொத்தம் 1700 மையங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இதனை பார்த்து விவரம் தெரிந்து கொள்ளலாம். புதியதாக பெயர் சேர்க்க, சுருக்கம் திருத்தம் செய்ய இன்று முதல் ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை படிவங்கள் வழங்கப்படுகிறது.
பெயர் சேர்க்க படிவம்-6, நீக்க படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம்-6ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் இ.சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை நகலை பெற்று கொள்ளலாம்.







