என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள்
    X
    யானைகள்

    ஆம்பூர் அருகே 40 ஏக்கர் பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்

    ஆம்பூர் அருகே விவாசாய நிலத்திற்குள் புகுந்து யானை கூட்டம் 40 ஏக்கர் பயிர்களை நாசம் செய்தன.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகேயுள்ள உமராபாத்தை ஒட்டி தமிழக- ஆந்திர எல்லையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    அவ்வபோது சிறுத்தைகள் நடமாட்டமும் காணப்படுகிறது. காட்டு யானைகளும் அடிக்கடி ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக வன எல்லைக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 7 காட்டு யானைகள் கூட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகில் உள்ள மாச்சம்பட்டு, கெனத்தூர், பாலூர், உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தென்னை, வாழை, தக்காளி, பூந்தோட்டங்களை சூறையாடியும், மிதித்தும் நாசம் செய்தன.

    தொடர்ந்து யானை கூட்டம் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இன்று அதிகாலை சின்னவரிகம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்தன. அங்குள்ள தென்னை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தன.

    மேலும் நெற்பயிர்கள், பூச்செடிகளை மிதித்து நாசம் செய்துள்ளன. யானைகள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததில் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.

    15 விவசாயிகளுக்கு சொந்தமான 40 ஏக்கர் நெல், காய்கறி, பூச்செடிகள் நாசம் செய்துள்ளன.

    இன்று காலை விவசாய நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் யானைகள் பயிர்களை நாசம் செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வந்து யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.

    இதில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டத்தை காட்டு பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×