என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் கொரோனா பாதித்த இடங்களை சுற்றி எல்லை குறியீடு வரையும் பணி தொடங்கி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வரும் காட்பாடி, சின்னஅல்லாபுரம், ஆர்.என்.பாளையம், முள்ளிப்பாளையம், கருகம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்பகுதிகளில் 60 ஆயிரத்து 761 வீடுகளில் வசிக்கும் 2 லட்சத்து 42 ஆயிரத்து 197 பேர் விசாரிக்கப்பட்டு, 818 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் மேலும் ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவை கணக்கிட்டு அப்பகுதி மக்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதிகளை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அங்கு சாலைகளில் அதற்கான குறியீடு வரையும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஆர்.என்.பாளையம், கஸ்பா, சின்னஅல்லாபுரம் ஆகிய பகுதிகளை ஒரு மண்டலமாக உருவாக்கி கோட்டை சுற்றுச்சாலை உள்ளிட்ட எல்லை பகுதிகளில் குறியீடுகள் வரையப்பட்டுள்ளது.

    இதையடுத்து முள்ளிபாளையம், காட்பாடி பகுதிகளிலும் இப்பணி நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    இஸ்லாமியர்களின் ‌ஷபே பராத் நாளில் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்று அமைச்சர் நிலோபர் கபீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    வேலூர்:

    அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‌ஷபே பராத் முஸ்லிம்களுக்கு மிக முக்கிய நாளாகும். இந்த இரவு புனிதமான ஒன்றாகும். இந்த நாள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு (ஏப். 9, 10) நடுவில் வருகிறது.

    இந்த இரவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆண்கள் வழக்கமாக மசூதிகளில் கூடி தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். பெண்கள் வீட்டிலேயே படிப்பது வழக்கம். இது முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு பண்டிகையாகும்.

    கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் அனைத்து மத வழிப்பட்டுத்தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தங்களது 5 வேளை தொழுகையை வீட்டுக்கு உள்ளேயே நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்.

    அனைவருக்கும் ‌ஷபே பராத் தொழுகையை மசூதிகளில் நிறைவேற்ற ஆசை இருப்பது இயல்புதான். எனினும், நம்மில் யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியாது. பாதிப்பு ஏற்பட்ட நபரின் மூலமாக மற்றவர்களுக்கு எளிதாக பரவ வாய்ப்பு அதிகம். எனவே, ‌ஷபே பராத் தொழுகையை வீட்டுக்குள்ளேயே நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    வேலூரில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 26) பெயிண்டர். அரியூரில் அடித்து கொலை செய்யப்பட்டார். அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கொலையாளிகள் ராஜா, சேம்பர் ராஜா, மற்றும் சதீஷ் ,அமர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    சதீசுடன் ஏற்பட்டபண தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சதீஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    அசோக்கும் நானும் நண்பர்களாக பழகி வந்தோம்.அவர் எனக்கு ரூ.23 ஆயிரம் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தார். அதனால் நான் தோட்டப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று இதுபற்றி தட்டி கேட்டேன். அங்கு அசோக் இல்லை. சம்பவத்தன்று நான் தோட்டப்பாளையம் சென்றது சம்பந்தமாக அசோக் மற்றும் அவரது நண்பர் வந்து என்னிடம் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் எனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசோக்கை தாக்கியதில் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

    போலீசார் 4 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.
    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு வேலூரில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
    வேலூர்:
     
    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 4789 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்திலும் கொரோனா தீவிரமடையத் தொடங்கியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

    இதற்கிடையில், வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறியுடன் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் அந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்த நபர் எந்த வித வெளியூர் பயணங்களும் மேற்கொள்ளவில்லை எனவும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர, மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதன்தொடர்ச்சியாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக்காக கிருமி நாசினி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை நுழைவு வாயில் வழியாக செல்வதைப் போல் கிருமி நாசினி தெளிக்கும் நுழைவு வாயிலை ஏற்படுத்தி கலெக்டர் அலுவல வளாகத்தில் வைத்துள்ளனர்.

    காலையில் பணிக்கு வரும் அரசு ஊழியர்கள், அலுவலகப் பணிக்காக வரும் பொதுமக்கள் அனைவரும் இந்த நடைபாதையில் நுழைவதன் மூலம் அவர்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனால், தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக இத்தகைய நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிருமி நாசினி நடைபாதையின் செயல்பாட்டை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    வேலூர் அருகே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது26). பெயிண்டர்.

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ். ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று வேலூர் அருகே உள்ள அரியூர் அருகே கள்ளச்சாராயம் குடிக்க சென்றனர்.

    பின்னர் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்திக்க சென்றனர். அந்த நபருக்கும், அசோக் தரப்புக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இது குறித்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த தகராறுக்கு பின்னர் அந்த நபர் தனது தரப்பை சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் அழைத்து பேசினர்.

    அப்போது அசோக் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்த தரப்பினர் அசோக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அசோகக் சுருண்டு விழுந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ஊரடங்கு காரணமாக அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் படுகாயத்துடன் சுய நினைவை இழந்து கிடந்த அவரை ஜெயப்பிரகாஷ் மற்றும் காமேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் அசோக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அசோக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சம்பவ இடத்தை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    அசோக்கை தாக்கிய கும்பல் அரியூர் பகுதியை சேர்ந்த 4 பேர் என்பதும் அவர்கள் ரவுடிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ரவுடி கும்பலை பிடித்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    ஊரடங்கு உத்தரவு காரணமாக பெங்களூரில் இருந்து பைக்கில் வந்த நிறைமாத கர்ப்பிணிக்கு போலீசார் அறிவுரை கூறி காட்பாடிக்கு அனுப்பி வைத்தார்.

    வேலூர்:

    காட்பாடியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி. இவர் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி தவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள், ஒரு நாய் குட்டியை பைக்கில் அழைத்து கொண்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் பெங்களூரி இருந்து கிளம்பியுள்ளார்.

    தமிழக - கர்நாடக எல்லையில் பரிசோதனை செய்து அங்கிருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    நேற்று மதியம் 12 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் பைக்கில் வந்த இவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த பயிற்சி டி.எஸ்.பி. ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரஸ் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில், காட்பாடியை சேர்ந்தவர்கள் என்பதும், பிரசவத்துக்கு டாக்டர்கள் நாள் குறித்து கொடுத்துள்ளதாகவும், பெங்களூரில் போதிய வருமானம இல்லாததாலும், போக்குவரத்தும் இல்லை. இதனால் சொந்த ஊருக்கு பைக்கில் வந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இவ்வளவு தூரம் நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் அழைத்து வந்துள்ளாய்? நடுவில் ஏதாவது நடந்திருந்தால் என்ன செய்வது? இனி இதுபோன்ற தொலைதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

    நீண்ட தூரம் வந்ததால் வீட்டிற்கு சென்றவுடன் டாக்டரிடம் சென்று நிறைமாத கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

    வேலூர் மாநகராட்சியில் அம்மா உணவகங்கள் இரவு நேரத்திலும் இயங்கும் என்று அரசு அறிவித்தது. இதனால் சுடச்சுட இட்லியை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சார்பில், அண்ணா சாலை, கஸ்பா, கொசப்பேட்டை, பாகாயம், விருபாட்சிபுரம், சத்துவாச்சாரி, அலமேலு மங்காபுரம், கலெக்டர் அலுவலகம் எதிரில், தாராபடவேடு, காட்பாடி காந்தி நகர், என, 10 இடங்களில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு காலை உணவாக இட்லி 1 ரூபாய்க்கும் மதிய உணவாக சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் இரவு நேரத்திலும் இயங்கும் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 10 அம்மா உணவகங்களில் நேற்றுமுன்தினம் முதல் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. 

    இதனால் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் இட்லி வாங்கி சாப்பிடுகின்றனர். இங்கு பார்சலும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து இரவு நேரங்களில் சப்பாத்தி விற்பனை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் அருகே துப்பாக்கி சூடு நடத்திய கும்பலிடம் இருந்து சாராயம் வாங்கி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 மோட்டார்சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் ஒரு கும்பல் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது. 144 தடை உத்தரவையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்களின் பார்வை சாராயம் பக்கம் திரும்பியது. இதனால் அந்த மலைப்பகுதிக்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலர் சாராயம் குடிக்க சென்றனர்.

    மதுபிரியர்கள் ஏராளமானோர் சென்று வந்ததால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கருதிய புலிமேடு பகுதி கிராம பொதுமக்கள் சாராயம் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது சாராயம் விற்பதை தட்டிக் கேட்க சென்ற பொதுமக்கள் மீது சாராய கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின்னரும் மலைப்பகுதியில் சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கும்பலை பிடிக்க செல்லும் போது போலீசாரை கண்டதும் மலைப்பகுதியில் பதுங்கி விடுகின்றனர். எனவே போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிப்பது சவாலாகவே உள்ளது. அந்த மலைப்பகுதிக்கு பலர் மோட்டார்சைக்கிளில் சென்று சாராயம் வாங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அந்த மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மலையடிவாரத்தில் மோட்டார்சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்தன. அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய கும்பலிடம் இருந்து குடிப்பதற்காகவும், விற்பதற்காகவும் சாராயம் வாங்கி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 60 லிட்டர் சாராயம், 6 மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மலைப்பகுதிக்கு சாராயம் வாங்க வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். 
    ராணிப்பேட்டையில் 970 மதுபாட்டில்களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கீதா, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து ஈஸ்வரன், கோவிந்தசாமி மற்றும் போலீசார் ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒருவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அரி (38) என தெரியவந்தது.

    விசாரணையில் இவருக்கு சொந்தமான வீட்டில் அரசு மதுபானம் 180 எம் எல் அளவு கொண்ட 970 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அரியை கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் நோயாளிகள் வாட்ஸ்அப் மூலம் டாக்டர்களை தொடர்பு கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் வைரசை தடுக்க உரியவழி சமூக விலகல் மட்டுமே. ஆனால் மக்கள் இதனை அலட்சியப்படுத்தி வழக்கம் போலவே நடமாடுகின்றனர். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு பொது மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்களில் பெரும்பாலானோருக்கு பெரிய அளவில் உடல் நிலைகுறைவு இல்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளுக்கு வந்த வண்ணம் உள்ளதால் மற்ற நோயாளிகளிடம் இருந்து அவர்களுக்கும், அவர்களிடமிருந்து பிற நோயாளிகளுக்கும் அதேபோன்று அவர்களின் டாக்டர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளது.

    எனவே அனைவரின் நலனையும் கருதி வேலூர் மாவட்டத்தில் டெலிமெடிசின் என்ற முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி புறநோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வராமல் டாக்டர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவலை எழுத்துப்பூர்வமாக அனுப்பி தங்களது உடல்நலக்குறைவிற்கான மருந்து, மாத்திரைகளை டாக்டர்களிடம் பதில் தகவல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

    டாக்டர்களை செல்போனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் பணி நிமித்தம் காரணமாக எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பலாம். குறிப்பிட்ட நேரங்களில் தேவைப்பட்டால் மட்டும் டாக்டர்கள் நோயாளிகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பின் மூலமாக தொடர்பு கொள்வார்கள்.

    எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் டாக்டர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ மூலம் அழைத்து தொந்தரவு செய்யக்கூடாது.

    இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களின் செல்போன் எண்கள் மற்றும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்களின் செல்போன் எண்கள் மாவட்ட கலெக்டரின் https://vellore.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்த வசதியினை தங்களது மருத்துவ சேவைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த டெலிமெடிசின் வசதி 144 தடை உத்தரவு அமலில் உள்ள வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர் அருகே சாராயம் விற்பதை தட்டிக் கேட்ட கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

    டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    வேலூர் அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் கும்பலாக சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.

    அந்த மலைப்பகுதிக்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் பலர் சாராயம் குடிக்க சென்று வந்துள்ளனர். அதிகமானவர்கள் அங்கு சென்று வருவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக புலிமேடு பகுதி கிராம மக்கள் கருதினர். இதனால் அந்த மலைப்பகுதியில் சாராயம் விற்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு ஏன் சாராயம் விற்கிறீர்கள் என கேட்டு அவர்களை கண்டித்ததோடு சாராயம் விற்க கூடாது என எச்சரித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சாராய கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தங்களை கண்டித்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் பூபாலன் (வயது30), சங்கர்(23), அண்ணாமலை(19) ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தது. இதில் அவர்கள் 3 பேரும் காயமடைந்து சுருண்டு மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சாராயம் விற்ற கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தப்பி ஓடிய சாராய கும்பலை தேடி வருகின்றனர்.
    ×