என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலின் தாக்கத்தால் சூறாவளி காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கடந்த வாரத்தில் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாகவே வேலூரில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது.
சென்னை- பெங்களூர் 6 வழிச்சாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.
மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்குகிறார்கள். சூரியன் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை குளிரால் வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.
பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
நாட்கள் செல்ல செல்ல பனிப்பொழிவும், உறைய வைக்கம் குளிரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் சளி, காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிடும் பணிகளையும், நீர்வரத்து குறித்தும் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் விவரம் வருமாறு:-
வேலூர் மாநகராட்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சதுப்பேரிக்கு பாலாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிகளையும், கால்வாயில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ள பணிகளையும், விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து வரும் தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பிவிடும் பிரிவு கால்வாய்களையும், மதகுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கவசம்பட்டு கொட்டாறு பாலத்தை ஆய்வு செய்து, கொட்டாறு வழியாக செல்லும் நீரை முறையாக கால்வாய்களுக்கு திருப்பி விடும் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து செதுவாலை, ஒக்கனாபுரம் ஏரிகளுக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வரும் கந்தனேரி அருகே கால்வாய்களை பார்வையிட்டு, கந்தனேரி ஊராட்சி பகுதியில் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து ஏரிகளுக்கு நீரினை விகிதாசாரப்படி பிரித்து அனுப்ப அமைக்கப்பட்டுள்ள மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு ஏரியில் வீடு கட்டும் பணிகளை சிலர் செய்து கொண்டிருந்தனர். அதைப்பார்த்த கலெக்டர், அவர்களிடம் ஏற்கனவே அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை பட்டா இடத்திற்கு குடிபெயருமாறு அறிவுறுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பள்ளிகொண்டா அருகே உள்ள கீழாச்சூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பாலாற்று பகுதியிலிருந்து செதுவாலை, ஓக்கநாபுரம், கந்தனேரி, இறைவன்காடு ஆகிய ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் மூலம் தண்ணீர் பிரித்து அனுப்ப செய்யப்பட்டு உள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கே.வி.குப்பம் தாலுகாவுக்குட்பட்ட பசுமாத்தூர் ஏரிக்கு செல்லும் கால்வாயை ஆய்வு செய்து கால்வாய்களின் கரைகள் பலப்படுத்தி தண்ணீர் வீணாகாமல் ஏரிகளில் தேக்கி வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். காவனூர் ஏரிக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து நிரப்பும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியாத்தம் தாலுகா வேப்பூர் ஏரிக்கு செல்லும் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், தாசில்தார்கள் ரமேஷ், சரவணமுத்து, வத்சலா, ராஜேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சியில் தென்னல், எஸ்.கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர்.
அதன்படி கடந்த மாதம் நெல்வாய், தென்னல், எஸ்.கொளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக கொண்டு சென்றனர். அப்போது அதிகாரிகள் கடந்த 23-ந் தேதியே நெல்லை கொள்முதல் செய்யும் காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் நெல் மூட்டைகளை தற்போது கொள்முதல் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல்களால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழானது. மூட்டைகளில் இருந்தபடியே நெல்முளைவிட்டு வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை கிடைக்காததால் வட்டிக்கு பணம் வாங்கி தங்களின் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து விளைவித்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றால் அதிகாரிகள் அதனை வாங்க அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால் நாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் காமேஷ் (வயது 29). நேற்று இரவு ஊசூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் காமேஷை சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். அவரை ஓட ஓட வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காமேஷை சாலையோரம் வீசிவிட்டு கும்பல் காரில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காமேஷை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அரியூரை அடுத்த புலிமேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (வயது 25), சென்னை புழல் ஜெயிலில் பணியாற்றி வந்த தணிகைவேல் (26), ஆகியோர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதனை கண்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே இரவு வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் டி.எஸ்.பி. திருமால்பாபு, இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட காமேஷ் விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த திவாகர், வார்டன் தணிகைவேல் ஆகிய 3 பேரும் நண்பர்கள் என தெரியவந்தது.
கொலையாளிகள் விவசாய நிலத்தில்இருந்த திவாகர், தணிகைவேலு ஆகியோரை சுற்றிவளைத்து வெட்டி சாய்த்துள்ளனர். அவர்கள் துடிதுடித்து இறந்ததும் அங்கிருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டு வந்துள்ளனர்.
வரும் வழியில் காமேஷ் வந்துள்ளார். அவரைக் கண்டதும் ஆத்திரமடைந்த கும்பல் காமேஷையும் வெட்டி கொன்றுள்ளனர்.
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அசோக் ( 26). கடந்த ஏப்ரல் மாதம் அரியூரில், 7 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் அரியூரை சேர்ந்த பிரபல ரவுடி எம்.எல்.ஏ. ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.
இன்று கொலை செய்யப்பட்ட திவாகர், காமேஷ் ஆகியோர் அசோக்கின் நண்பர்கள் ஆவர்.
அசோக்கை கொலை செய்த கும்பல் தங்களை பழிக்கு பழியாக காமேஷ் தரப்பினர் கொலை செய்ய வாய்ப்புள்ளது என முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
திவாகரை வெட்டியபோது அவருடன் இருந்த வார்டன் தணிகைவேலையும் வெட்டி கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக அரியூர் பகுதியை சேர்ந்த ரவுடி எம்.எல்.ஏ. ராஜா உட்பட 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் ரவுடி கும்பலால் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் பல்வேறு கொலை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் பலர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடி வசூர் ராஜா பெங்களூரில் வசித்து வருகிறார். காட்பாடியை சேர்ந்த ரவுடி ஜானி கால் முறிவு ஏற்பட்டு தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அரியூர் பகுதியில் மீண்டும் ஒரு ரவுடி கும்பல் தலைதூக்கியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கணவாய் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 62) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நேற்று கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் உள்ள பகுதிக்குள் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஆட்டை சுற்றிக்கொண்டு விழுங்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தசாமி மலைப்பாம்பிடமிருந்து ஆட்டை மீட்டுள்ளார். அப்போது அந்த மலைப்பாம்பு கோவிந்தசாமியை சுற்றியுள்ளது. இதனால் தன்னை காப்பாற்றிக்கொள்ள கத்தியால் மலைப்பாம்பை வெட்டியுள்ளார். இதில் மலைப்பாம்பின் தலை துண்டாகியது.
இதனையடுத்து கோவிந்தசாமி இது குறித்து யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அவர்கள் கோவிந்தசாமியை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக கூறவே சந்தேகம் கொண்டு அவரிடம் தீவிர விசாரணை செய்தனர்.
அப்போது ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்க்கவ தேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில், மலைப்பாம்பை வெட்டிக்கொன்ற கோவிந்தசாமிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராதத் தொகை செலுத்திய பின் கோவிந்தசாமி விடுவிக்கப்பட்டார்.
ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பாம்பை வெட்டிக் கொன்ற சம்பவத்தில் கோவிந்தசாமி மட்டுமே ஈடுபட்டாரா? அல்லது வேறு யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் முத்துமண்டபம் டோபிகானா அடுக்குமாடி குடியிருப்பில் 157 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த பகுதியில் உள்ள 5 ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்மோட்டார் பராமரிப்பு, மின் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.250 செலுத்தி வந்துள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வசூலித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடுக்குமாடி குடியிருப்புக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறு மின்மோட்டார்களுக்கு மின்கட்டணம் செலுத்தாததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி நேற்று குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேரில் அங்கு சென்றனர். அப்போது அங்குள்ள பொதுமக்கள் திடீரென குடிசை மாற்றுவாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர். குடிநீருக்காக மாதந்தோறும் ரூ.250 தவறாமல் செலுத்தி வருகிறோம். ஆனாலும் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், மின்கட்டணத்தை விரைவில் செலுத்தப்படும். அதுவரை மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 25). இவர் சங்கரன்பாளையத்தில் உள்ள ஒரு கடையில் நின்றிருந்தபோது அங்கு வந்த 2 சிறுவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். சேட்டு தண்ணீர் எடுக்க அருகில் சென்றபோது இரு சிறுவர்களும் சேட்டுவின் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்த தப்பியோடினர்.
இதுகுறித்து பாகாயம் போலீசில் சேட்டு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவனை கைது செய்தனர். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கோட்டி, துணை செயலாளர் சாந்தகுமார், வேலூர் தொகுதி துணை செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் விஜயசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லபாண்டியன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அம்பேத்கர் போராடி பெற்ற கல்வி உதவித்தொகை திட்டமான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறுத்த கூடாது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி தேர்வு வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் சமூக நல்லிணக்க பேரவை மாநில செயலாளர் பிலிப், மாவட்ட பொருளாளர் சஜின்குமார், மாவட்ட சமூக ஊடக அமைப்பாளர் கோவி.தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட 2-ம் பகுதி செயலாளர் ரீகன் நன்றி கூறினார்.






