என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வேலூர் அருகே ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை

    ஒரே நாளில் ரவுடி கும்பலால் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் காமேஷ் (வயது 29). நேற்று இரவு ஊசூர் ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் காமேஷை சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். அவரை ஓட ஓட வெட்டினர்.

    ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காமேஷை சாலையோரம் வீசிவிட்டு கும்பல் காரில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காமேஷை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அரியூரை அடுத்த புலிமேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (வயது 25), சென்னை புழல் ஜெயிலில் பணியாற்றி வந்த தணிகைவேல் (26), ஆகியோர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    இதனை கண்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே இரவு வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் டி.எஸ்.பி. திருமால்பாபு, இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட காமேஷ் விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த திவாகர், வார்டன் தணிகைவேல் ஆகிய 3 பேரும் நண்பர்கள் என தெரியவந்தது.

    கொலையாளிகள் விவசாய நிலத்தில்இருந்த திவாகர், தணிகைவேலு ஆகியோரை சுற்றிவளைத்து வெட்டி சாய்த்துள்ளனர். அவர்கள் துடிதுடித்து இறந்ததும் அங்கிருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டு வந்துள்ளனர்.

    வரும் வழியில் காமேஷ் வந்துள்ளார். அவரைக் கண்டதும் ஆத்திரமடைந்த கும்பல் காமேஷையும் வெட்டி கொன்றுள்ளனர்.

    வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அசோக் ( 26). கடந்த ஏப்ரல் மாதம் அரியூரில், 7 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் அரியூரை சேர்ந்த பிரபல ரவுடி எம்.எல்.ஏ. ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.

    இன்று கொலை செய்யப்பட்ட திவாகர், காமேஷ் ஆகியோர் அசோக்கின் நண்பர்கள் ஆவர்.

    அசோக்கை கொலை செய்த கும்பல் தங்களை பழிக்கு பழியாக காமேஷ் தரப்பினர் கொலை செய்ய வாய்ப்புள்ளது என முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

    திவாகரை வெட்டியபோது அவருடன் இருந்த வார்டன் தணிகைவேலையும் வெட்டி கொன்றுள்ளனர்.

    இது தொடர்பாக அரியூர் பகுதியை சேர்ந்த ரவுடி எம்.எல்.ஏ. ராஜா உட்பட 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே நாளில் ரவுடி கும்பலால் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூரில் பல்வேறு கொலை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் பலர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடி வசூர் ராஜா பெங்களூரில் வசித்து வருகிறார். காட்பாடியை சேர்ந்த ரவுடி ஜானி கால் முறிவு ஏற்பட்டு தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் அரியூர் பகுதியில் மீண்டும் ஒரு ரவுடி கும்பல் தலைதூக்கியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×