என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் 8-ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் லீலாவதி (வயது 13). அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லீலாவதி வீட்டில் இருந்து பாடங்கள் படித்து வந்தார். மேலும் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லீலாவதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி லீலாவதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி‌மு.கவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.18 லட்சம் சிக்கியதாக நானும் கேள்விப்பட்டேன் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்திலும் அவரது கணவர் சபரீசன் அலுவலகத்திலும் இன்று காலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக செய்தி வந்தது. தொலைக்காட்சியைப் பார்த்தும் தெரிந்துகொண்டேன்.

    இதேபோல அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்படுவதாக தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டேன்.

    தேர்தல் நெருங்கும் நேரம் ஒவ்வொரு கட்சியினரும் மிக வேகமாக பணிகளை முடித்து வாக்குச்சாவடிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட நேரத்தில் திடீரென மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கத்திற்காக நடத்தப்படுவதாக நான் அறிகிறேன்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படிப்பட்ட சோதனை நடத்துவதால் எங்கள் தலைவருடைய குடும்பம் கழகமும் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள் தேர்தலில் தளர்ச்சி அடைந்து விடுவார்கள் என்ற தவறாக மத்திய அரசு நினைக்கக்கூடாது.

    மிசா காலத்தில் இது போன்ற ஒரு வருமான வரிசோதனை ராசாத்தி அம்மையார் வீட்டில் நடந்தது. அபோது தலைவர் கருணாநிதி வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டு உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதிக் கொண்டிருந்தார்.

    சோதனைக்கு வந்திருந்தவர்களில் சிலர் அதிலும் சென்னைவாசிகள் உங்க பேரு கபாலியா இந்த வீட்டில் உங்களுக்கு என்ன வேலை என கேலியாக பேசினார்கள். அதை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விட்டு அஞ்சாமல் மடல் எழுதிக் கொண்டிருந்தார்.

    மு.க.ஸ்டாலின் வாழைக்கு கன்று அல்ல. ஆழுக்கு விழுதாக இறங்கியவர். தந்தையைவிட இரும்பு நெஞ்சம் கொண்டவர்.அவரை பயமுறுத்தி விடலாம். சோதனை மூலம் கழகம் கலகலத்துப் போய்விடும் என நினைப்பதை விட அரசியல் அப்பாவித்தனம் எதுவும் இருக்க முடியாது.

    எ.வ. வேலு வீடு மற்றும் சில இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனை பற்றிய பேச்சுக்கள் நிறைவடைவதற்கு முன்பாக செந்தாமரை இல்லத்தில் சோதனை நடத்துவதன் மூலம் எல்லா கட்சியினரும் நடுங்கி போய் விடுவார்கள் என நினைக்கிறார்கள்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகம் அல்ல. நியாயமற்ற அரசியல். தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    இதுபோன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் தி.மு.க. பயப்படாது.

    சோதனைகள் வழக்கு தண்டனை போன்றவற்றிற்கு பயபட்டிருந்தால் தி.மு.க. என்றோ செத்துப் போயிருக்கும். அந்த பிணத்தின் மீது புல் முளைத்திருக்கும். இது போன்ற சிந்தனைகள் எங்கள் கட்சியினருக்கு மேலும் உறுதியையும் சிந்தனையும் தரும்.

    மு.க.ஸ்டாலின் அவரது மகள் செந்தாமரை மீது அபரீத அன்பு வைத்திருக்கிறார். அந்த குழந்தையை துன்புறுத்தினால் தலைவர் கலகலத்துப் போய் விடுவார் என மத்திய சர்க்கார் நினைக்கிறது.

    முக ஸ்டாலின்

    ஒரு கனம் மகளைப் பற்றி நினைத்தாலும் மறுகணம் மக்களைப் பற்றி சிந்தித்து வீறுகொண்டு எழுவார் எங்கள் தலைவர். அப்படிப்பட்ட வீரசிங்கம் எங்கள் தலைவர். மத்திய அரசு இத்தகைய போக்கை கடைபிடிக்கக் கூடாது. இது அரசியலுக்கு உகந்தது அல்ல.

    காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி‌மு.க வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் ரூ.18 லட்சம் சிக்கியதாக நானும் கேள்விப்பட்டேன்.

    மற்ற இடங்களில் நடைபெறும் சோதனை கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது. எங்கள் தரப்பில் செய்யப்படும் சோதனை மூலம் எங்களை பயமுறுத்த நினைக்கிறார்கள். எப்படியாவது ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்று காலூன்றி விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது.

    ரஜினிக்கு பால்கே விருது பெற்றதற்காக அவருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் அருகே லாரி மோதி பலியான பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ.19¾ லட்சம் இழப்பீடு வழங்கும்படி வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வெற்றிச்செல்வி உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் தாலுகா தெள்ளைகிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 31), தனியார் பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தமிழரசன் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி மோட்டார் சைக்கிளில் மலைக்கோவில்-கீழ்கல்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தமிழரசன் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தமிழரசி கடந்த 2019-ம் ஆண்டு கணவர் பலியானதற்கு ரூ.1 கோடியே 12 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையில், வேலூரை அடுத்த கல்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் பாபு கனரக ஓட்டுனர் உரிமம் பெறாமல் டிப்பர் லாரியை இயக்கியதும், இலகுரக வாகன உரிமம் வைத்திருந்த டிரைவரிடம் டிப்பர் லாரியை அதன் உரிமையாளர் வாலாஜாவை சேர்ந்த மணி வழங்கியதும் தெரியவந்தது.

    அதையடுத்து உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் விபத்தில் பலியான தமிழரன் குடும்பத்துக்கு 19 லட்சத்து 89 ஆயிரத்து 400 ரூபாயை இழப்பீடாக லாரி உரிமையாளர் மணி வழங்க வேண்டும் என்று வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வெற்றிச்செல்வி உத்தரவிட்டார்.


    பெரிய அல்லாபுரத்தில் உள்ள கால்வாய் தூர்வாரி கரை அகலப்படுத்தப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் எஸ் .ஆர்.கே.அப்பு தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு திறந்த ஜீப்பிலும், நடந்து சென்றும் வீதி வீதியாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவர் நேற்று 51- வது வார்டுக்கு உட்பட்ட பெரிய அல்லாபுரம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தப் பகுதியில் உள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர். தொரப்பாடியில் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என்றனர்.

    நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பகுதியில் உள்ள கானார் தூர்வாரி கரைகள் அகலப்படுத்தப்படும். மேலும் பட்டா இல்லாமல் வசிக்கும் மக்களுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்வேன். தொரப்பாடியில் உள்ள தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் முதல் பணியே வேலூரில் உள்ள சாலைகளை சீரமைப்பதுதான்.

    மேலும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது வேலூர் தொகுதி பொறுப்பாளர் எம்.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சுகன்யா தாஸ், பகுதி செயலாளர் ஏ.ஜி.பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஆர். சுரேஷ், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் அசோக்குமார், வட்ட செயலாளர் பாபு, புதிய நீதி கட்சி நகர செயலாளர் முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக மக்கள் அமைதியாக வாழ மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையவேண்டும் என்று ஆற்காடு தொகுதி பா.ம.க. வேட்பாளர் கே.எல்.இளவழகன் கூறினார்.
    ஆற்காடு:

    ஆற்காடு தொகுதி பா.ம.க. வேட்பாளர் கே.எல். இளவழகன் நேற்று திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.புதூர், பின்டித்தாங்கல், மேல்நேத்தப்பாக்கம், அகரம், கலவைபுத்தூர், பின்னத்தாங்கல், வெல்லம்பி, குட்டியம், செங்கனாவரம், அத்தியானம் உள்ளிட்ட கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசும்போது கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து அதன்படி செயல்படும் அரசாக உள்ளது. மக்கள் கேட்காமலேயே எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியுள்ளார். தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500, விவசாயத்துக்கு உடனடி இலவச மின் இணைப்பு, மும்முனை மின்சாரம், குடும்ப இலவச கேபிள் இணைப்பு, இலவச வாஷிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

    இதனை செயல்படுத்தவும், தமிழக மக்கள் வறுமை இன்றி, அமைதியாக வாழ மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும். அதற்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் இந்த தொகுதி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது அ.தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கலவை அப்துல்லா, திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார், கலவை பேரூராட்சி செயலாளர் சதீஷ், பா.ம.க. மாநில நிர்வாகி மற்றும் தொகுதி பொறுப்பாளர் எம்.கே.முரளி, மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் சண்முகம், பொருளாளர் அமுதா, ஒன்றிய நிர்வாகிகள் விக்கிரமன், பெருமாள், சுரேஷ், எம். சாரதி, பா.ஜ.க. பொறுப்பாளர் மனோகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சொன்னதை செய்யக்கூடியவர் துரைமுருகன். எனவே காட்பாடி தொகுதியில் அவரை வெற்றி பெறச் செய்ய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என சங்கீதாகதிர்ஆனந்த் பேசினார்.

    வேலூர்:

    காட்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பிரசாரம் செய்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும் அமைச்சராக இருந்தபோது பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆற்றிய பல்வேறு திட்டங்கள், பாலாறு, ெரயில்வே மேம்பாலங்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அகலமான சாலைகள், காவிரி கூட்டுக் குடிநீர், அங்கன்வாடி, பள்ளி கட்டிடங்கள், ரேஷன் கடைகள், அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற திட்டங்களை எடுத்துக்கூறி வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் காட்பாடி தொகுதியில் ரூ.15 ஆயிரம் கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். வேட்பாளர் துைரமுருகன் ெசான்னதை செய்யக்கூடியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.

    அவருடன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வாசுகி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் கண்ணகி மற்றும் மகளிர் அணியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.

    நவ்லாக் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். எம்.சுகுமார் வாக்குறுதியளித்தார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். எம்.சுகுமார் நேற்று மாந்தாங்கல், வள்ளலார் நகர், தண்டலம், பழைய செட்டித்தாங்கல், செட்டித்தாங்கல், வ.உ.சி.நகர், எருக்கந்தொட்டி, வில்வநாதபுரம், கல்மேல்குப்பம், வாணாபாடி, மாணிக்க நகர், ஏரிக்கோடி, எடப்பாளையம், தமிழன்னை வீதி, பாரதி நகர், புளியங்கண்ணு, அவரக்கரை, தெங்கால் உள்ளிட்ட வாலாஜா ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் நவ்லாக் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கிடைக்கவும் பாடுபடுவேன். மாந்தாங்கல்-வள்ளலார் நகர் சாலையை அகலப்படுத்தி பஸ் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பேசினார்.

    அப்போது பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

    வேட்பாளருடன் அ.தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், அவைத்தலைவர் பாபு, ஒன்றிய பொருளாளர் பழனி, துணை செயலாளர் ஜெயந்தி நித்யானந்தம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பூங்காவனம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தகரகுப்பம் முனிசாமி, பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் சபரி கிரீசன், பாரத், தொகுதி பொறுப்பாளர் வக்கீல் ஜானகிராமன், புதா மணி, உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளும், வாணாபாடி தயாளன், வாலாஜா விக்கிரமன், த.மா.கா. நிர்வாகிகளும், பாஸ்கர், செங்காடு கஜேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

    இந்திய கட்டிட தொழிலாளர் பேரவையின் மாநில தலைவரும், புரட்சிகர தொழிலாளர் கட்சியின் மாநில பொருளாளருமான நேதாஜி நடேச கவுண்டர், நேற்று அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை நேரில் சந்தித்து, தங்கள் அமைப்பின் ஆதரவை அவருக்கு தெரிவித்து, தங்கள் அமைப்பினருடன் ராணிப்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து அரசு உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

    மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    கடந்த மாத தொடக்கத்தில் 10-க்கும் குறைவான நபர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் 43 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் 52 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், 10 பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    52 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் வெயில் தாக்கம் நேற்று 100 டிகிரியை கடந்து 106.3 டிகிரி கொளுத்தியது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக, மார்ச் மாதம் பிற்பகுதியில் தொடங்கி மே மாதம் இறுதிக்குள் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும்.

    இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக சுமார் 100 டிகிரி வெயில் அளவை நெருங்கியபடி பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், நேற்று 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி என்று தொடங்கும் வெயில் அளவு போகப்போகத்தான் அதிகரிக்கும்.

    ஆனால், நேற்று 100 டிகிரியை கடந்து 106.3 டிகிரி கொளுத்தியது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மார்ச் மாதத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது தற்போது தான் முதல் முறையாகும். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியுள்ளது.

    அதிகப்படியான வெயில் தாக்கத்தால் நேற்று பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. மாலை நேரத்தில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    ஏப்ரல் 3-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் இன்னும் வரும் நாட்களில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனை ஆதரித்து வேலூர் எம்.பி. டி.எம். கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
    வேலூர்:

    காட்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து வேலூர் எம்.பி. டி.எம். கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சேர்க்காடு, பெரிய ராமநாதபுரம், விண்ணம்பள்ளி, வள்ளிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை பொது மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குறுதிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்து மாமனாருக்காக வாக்கு சேகரித்தார்.

    துரைமுருகன் அமைச்சராக இருந்த போது ஆற்றிய பல்வேறு திட்டங்கள், பாலாறு, ரெயில்வே மேம்பாலங்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அகலமான சாலைகள், காவிரி கூட்டுக் குடிநீர், அங்கன்வாடி, பள்ளி கட்டிடங்கள், ரே‌ஷன் கடைகள், அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற திட்டங்களை எடுத்துக் கூறி வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    காட்பாடி தொகுதியில் ரூ.15 ஆயிரம் கோடியில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார்.
    கே.வி.குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு, விவசாயி. இவரின் மனைவி சுகன்யா (வயது 37). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் மகள்கள் உளளனர். சுகன்யா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார். குடும்பத்தினர் மீட்டபோது சுகன்யா இறந்து கிடந்தார்.

    இது குறித்து கணவர் நேரு கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கே.வி.குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தொற்று பாதிப்பு காணப்படும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. ஆனாலும் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

    நேற்று முன்தினம் 31 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய பரிசோதனையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×