என் மலர்
வேலூர்
கே.வி.குப்பம்:
வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 45). இவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
மாலதி கே.வி.குப்பம் தொகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார். நேற்றிரவு கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் அருகே மாலதி மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லாரி மீது மோதியது.
கார் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி தலைமை பெண் போலீஸ் ஏட்டு மாலதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வீடியோ கிராபர் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைமை பெண் போலீஸ் ஏட்டு மாலதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் குறித்த புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் பணம் மற்றும் வேட்பாளர்கள் பெயர் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு பள்ளிகொண்டா பகுதியில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பணம் சப்ளை செய்யப்படுவதாக வேலூர் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பள்ளிகொண்டா பகுதியிலிருந்த பறக்கும் படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பணம் கொடுத்து கொண்டிருந்தவர்கள் ஒரு காரில் ஏறி தப்பினர்.
அந்த கார் வேலூர் நோக்கி வேகமாக வந்தது. பறக்கும் படை அதிகாரிகள் பின்னால் துரத்தி வந்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பள்ளிகொண்டாவில் இருந்து வேகமாக வந்த கார் வேலூர் மக்கான் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கு தயாராக இருந்தவேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் அந்த காரை மடக்கினர்.
அந்தக் காரில் பா.ம.க. முன்னாள் மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் (வயது 48) சாய்நாதபுரத்தை சேர்ந்த கோபி (24) ஓட்டேரியை சேர்ந்த சதீஷ் (24) ஆகியோர் இருந்தனர்.
மேலும் காரில் ரூ.4 லட்சம் பணம் மற்றும் பா.ம.க துண்டுகள், துண்டு பிரசுரங்கள் இருந்தன.இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர். பா.ம.க.வினர் 3 பேர் மீதும் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 6-ந்தேதி வரை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காட்பாடி பெரியபுதூரில் பறக்கும் படை அலுவலர் வேலாயுதம் தலைமையில் குழுவினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் 60 மதுபாட்டில்கள் இருந்தன. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவித்ததால் அவர்கள் மொத்தமாக வாங்கிச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வண்டறந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 32), ராமன் (35) ஆகியோரை கைது செய்தனர்.
தகவலறிந்த மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
வேலூர் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் பகுதியில் ஒரு கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் நிலைகண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நிலை கண்காணிப்பு குழுவினர் அலமேலுமங்காபுரம் கொல்லைமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அதிகாரிகளை பார்த்ததும் மர்மநபர் ஒருவர் தான் வந்த மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். சந்தேகமடைந்த அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
அதில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்காளர் பட்டியல், ஒரு அரசியல் கட்சியின் துண்டு பிரசுரங்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யப்பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகாரின்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கே. வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள துத்தி தாங்கல் கிராமத்தில் நேற்று நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து பறக்கும் படை அலுவலர் லட்சுமிபதி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது51)வீரசெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (42) ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.21 ஆயிரத்து 880 மற்றும் தி.மு.க தேர்தல் அறிக்கை சம்பந்தமான நோட்டீசுகள் வாக்காளர் பட்டியல் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 பேரையும் கே. வி குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் தி.மு.க. சார்பில் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் முரளி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் இன்று காலை பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நாட்டறம்பள்ளி பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 25-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் வருகையும் திடீரென ரத்து செய்யப்பட்டது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பெரிய தலைவர்கள் யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை.
ராமதாஸ் மற்றும் அன்புமணி அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
வேலூர் அருகே தெள்ளூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கடந்த 31-ந் தேதி இரவு மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் தப்பிச் சென்றனர். அதில் 2 பேரை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் ரூ.17 ஆயிரம் மற்றும் தி.மு.க.வின் தேர்தல் துண்டு பிரசுரங்களும் இருந்தன.
விசாரணையில் அவர்கள் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டரான கார்த்திபன் (வயது 51), தெள்ளூரை சேர்ந்த ராமமூர்த்தி (56) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கார்த்திபன் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.






