search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    லாரி மோதி பலியான பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ.19¾ லட்சம் இழப்பீடு - வேலூர் கோர்ட்டு உத்தரவு

    வேலூர் அருகே லாரி மோதி பலியான பஸ் கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ.19¾ லட்சம் இழப்பீடு வழங்கும்படி வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வெற்றிச்செல்வி உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் தாலுகா தெள்ளைகிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 31), தனியார் பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தமிழரசன் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி மோட்டார் சைக்கிளில் மலைக்கோவில்-கீழ்கல்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தமிழரசன் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தமிழரசி கடந்த 2019-ம் ஆண்டு கணவர் பலியானதற்கு ரூ.1 கோடியே 12 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையில், வேலூரை அடுத்த கல்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் பாபு கனரக ஓட்டுனர் உரிமம் பெறாமல் டிப்பர் லாரியை இயக்கியதும், இலகுரக வாகன உரிமம் வைத்திருந்த டிரைவரிடம் டிப்பர் லாரியை அதன் உரிமையாளர் வாலாஜாவை சேர்ந்த மணி வழங்கியதும் தெரியவந்தது.

    அதையடுத்து உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் விபத்தில் பலியான தமிழரன் குடும்பத்துக்கு 19 லட்சத்து 89 ஆயிரத்து 400 ரூபாயை இழப்பீடாக லாரி உரிமையாளர் மணி வழங்க வேண்டும் என்று வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வெற்றிச்செல்வி உத்தரவிட்டார்.


    Next Story
    ×