என் மலர்tooltip icon

    வேலூர்

    அணைக்கட்டு அருகே கலெக்டர் உத்தரவின் பேரில் பெண் சாராய வியாபாரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    வேலூர்:

    அணைக்கட்டு அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரோசி (வயது 55). சாராய வியாபாரம் செய்து வந்த இவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து சாராயம் காய்ச்சி வந்ததால் ரோசி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் ரோசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    வேலூர் பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை ரம்யா பணி முடிந்து பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் 2 பேர் ரம்யா பையில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடிக்க முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட ரம்யா சத்தமிட்டார்.பயணிகள் அனைவரும் சேர்ந்து திருட முயன்ற பெண்களை மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களை விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த விமலா (28). கஸ்தூரி (25). என்பது தெரியவந்தது.

    இவர்கள் மீது ஏற்கனவே ஈரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆரணி வேலூர் ஆகிய இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. 2 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    பேரணாம்பட்டில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள மிட்டப்பல்லி கெம்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாபி (வயது 42). பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை 11 மணியளவில் பேரணாம்பட்டு டவுன் புத்துக் கோவில் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரத்தை துண்டித்து விட்டு பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் மின்சாரம் சரியாக துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பட்டாபி மயங்கிய நிலையில் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார்.

    இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து பேரணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று பட்டாபியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் பட்டாபியின் மனைவி நிர்மலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் சாலையில் மயங்கி விழுந்து வியாபாரி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது65). கருவாடு வியாபாரி.நேற்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாமூவேல் நகர் பகுதியில் கருவாடு விற்று வந்துள்ளார்.

    சாலையில் செல்லும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்தார். பொது மக்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் வடக்கு போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு அவருடைய உறவினரிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருட்டு நடந்த வீட்டை வேலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா சின்ன வாணிதெரு என்கின்ற வள்ளியம்மை தெருவில் வசித்து வருபவர் கவுரி (வயது 60). இவரது கணவர் பழனி ஆசிரியராக பணியாற்றி இறந்து விட்டார்

    இவர்களுக்கு தனஞ்செழியன் மற்றும் நிரஞ்சன் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனஞ்செழியன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக தன் கவுரி வீட்டை பூட்டி விட்டு இளைய மகன் நிரஞ்சனுடன் கடந்த 28-ந் தேதி சென்னை சென்றார்.

    பின்பு நேற்று பகல் ஒரு மணிக்கு தன் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகளை சிதறி போட்டு 50 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் சிங்காரம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    திருட்டு நடந்த வீட்டை வேலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் மோப்ப நாயுடன் திருட்டு சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிக குறுகிய தெரு இந்த தெருவில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளது. அப்படி இருந்தும் மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து 50 பவுன் நகையை திருடிச் சென்றது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
    சிறுவர்களை கொடுமைப்படுத்திய வேணி மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 35), கூலி தொழிலாளி. இவரும் ஈஸ்வரி என்பவரும் 2009-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சித்தார்த் (10), நித்திஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சித்தார்த் குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், நித்திஷ் பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் குடியாத்தம் செதுக்கரையை சேர்ந்த வேணி (30) என்பவர் தனது முதல் கணவரை பிரிந்து கடந்த 2019-ம் ஆண்டு சேட்டுவை திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது குடியாத்தம் பிச்சனூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் சேட்டு, 2-வது மனைவி வேணு, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    காலையில் வேலைக்காக வெளியூர் சென்று விட்டால் இரவு தான் சேட்டு வீடு திரும்புவார். பகல் நேரங்களில் மகன்களை சித்தி வேணி கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு கரண்டி மற்றும் கத்தியை சூடு செய்து முதுகு, கை, கால் என பல இடங்களில் சித்தார்த் மற்றும் நித்திஷ்க்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதில் அலறித்துடித்த அவர்களிடம் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். அண்ணன், தம்பி இருவரின் ஆண் உறுப்பிலும் சூடு வைத்துள்ளார். இதில் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    மேலும் சித்தார்த் தலையில் பூரிகட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை நித்தீஷ் வீட்டிலிருந்து செதுக்கரை பகுதியிலுள்ள பெரியம்மா மரியா மற்றும் நிஷாந்தியிடம் சென்று தன்னை சித்தி வேணி உடம்பில் சூடு வைத்ததை காட்டியுள்ளார். இதனை கண்ட அவர்கள் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட தகவல் அறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர்உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், முருகன், போலீஸ் ஏட்டுகள் சுரேஷ்பாபு, கல்பனா உள்ளிட்டோர் விரைந்து சென்று வீட்டிலிருந்த வேணி, சித்தார்த்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சித்தார்த், நித்திஷ் இருவரும் தனது சித்தி செய்த கொடுமைகளையும், உடலிலுள்ள காயங்களையும் காட்டினர். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை என கூறினர்.

    இதையடுத்து. சிறுவர்களை கொடுமைப்படுத்திய வேணி மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 2 சிறுவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஐஸ் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சின்னாலபல்லி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). ஐஸ் வியாபாரி. இவருக்கு மனைவி, 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    ராஜேந்திரன் வீட்டிற்கு அருகேயே தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இன்று அதிகாலையில் இப்பள்ளி வளாகத்தில் உள்ள புங்க மரத்தில் சேலையில் தூக்கிட்ட நிலையில் ராஜேந்திரன் இறந்த நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஐஸ் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்கள், 2079 கிராம ஊராட்சி வார்டுகளும், 7 ஊராட்சி ஒன்றியங்களில் 138 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வார்டுகள் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மறுசீரமைக்கப்பட்ட வார்டு எல்லைக்குட்பட்டு, வார்டு வாரியான ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

    மொத்தம் வேலூர் மாவட்டத்தில் 1331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக வாக்காளர் பட்டியலை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார். வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 898 ஆண்கள், 3 லட்சத்து 68 ஆயிரத்து 6 பெண்கள், இதர பிரிவினர் 80 பேர் என மொத்தம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர்.
    குடியாத்தத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர்ரோடு காந்திநகர் புத்துக்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 74). இவருக்கு வித்யா என்ற மனைவியும். ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். நேற்று மதியம் பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் வித்யா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்ட சிறப்பு குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் கவிதா திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் சரகத்தில் பணியாற்றி வரும் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடலாடியில் பணியாற்றி வரும் மங்கையர்கரசி ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணியாற்றி வரும் லட்சுமி குடியாத்தம் டவுனுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வரும் யுவராணி உமராபாத்துக்கும், அங்கு பணியாற்றி வரும் நிர்மலா குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வரும் நந்தினிதேவி பெரணமல்லூருக்கும், தேசூரில் பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் ஆம்பூர் தாலுகாவுக்கும், அரக்கோணம் டவுனில் பணியாற்றி வரும் முரளிதரன் கடலாடிக்கும், வேட்டவலத்தில் பணியாற்றி வரும் நிலவழகன் வேலூர் தாலுகாவுக்கும் மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் நந்தகுமார் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வரும் சாலமோன்ராஜா கண்ணமங்கலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல காவேரிப்பாக்கத்தில் பணியாற்றி வரும் மகாலட்சுமி ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், லத்தேரியில் பணியாற்றி வரும் கவிதா போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றி வரும் திருநாவுக்கரசு சோளிங்கருக்கும், அங்கு பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ் போளூருக்கும் மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

    வேலூர் தாலுகாவில் பணியாற்றி வரும் அல்லிராணி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வரும் சாஜின் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் கலையரசி செய்யாறு மதுவிலக்கு அமலாக்கபிரிவுக்கும், போளூரில் பணியாற்றி வரும் கோவிந்தசாமி பாணாவரத்துக்கும், வேலூர் மாவட்ட சிறப்பு குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் கவிதா திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் புனிதா போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வரும் பிரகாஷ் கந்திலிக்கும், அரக்கோணம் தாலுகாவில் பணியாற்றி வரும் கோகுல்ராஜன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்துக்கும், கந்திலியில் பணியாற்றி வரும் மணிமாறன் காவேரிப்பாக்கத்துக்கும், பாணாவரத்தில் பணியாற்றி வரும் லட்சுமிபதி கீழ்பென்னாத்தூருக்கும், திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் நாகராஜன் வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், கீழ்பென்னாத்தூரில் பணியாற்றி வரும் சியாமளா வேலூர் தெற்கு குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி.பாபு பிறப்பித்துள்ளார்.
    பள்ளிகொண்டா அருகே பஸ் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டாவை அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விவேக் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலூரிலிருந்து திப்பசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு சாலையில் செல்லும் போது பின்னால் அதிவேகமாக திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் விவேக்தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சென்று விவேக் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு அருகே ரூ.1 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அணைக்கட்டு:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 27). அணைக்கட்டு அருகே உள்ள ஓங்கப்பாடியை சேர்ந்தவர் சந்தானம் வயது (28). இருவரும் கோவையில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.

    நேற்று இரவு இருவரும் ஓங்கபாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தனர். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அணைக்கட்டு-ஒடுகத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் 8 பேர் கும்பல் வந்தனர். அவர்கள் திடீரென திருமலையை காரில் தூக்கி போட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தானம் அலறி கூச்சலிட்டார். அதற்குள் கார் வேலூர் நோக்கி சென்று விட்டது.

    திருமலையை கடத்தி வந்த கும்பல் காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு வந்தனர். அங்கு வைத்து திருமலையை அடித்து துன்புறுத்தினர். இதனை தொடர்ந்து திருமலையின் செல்போனில் இருந்த அவரது நண்பர் கார்த்திக் என்பவரிடம் அந்த கும்பல் தொடர்பு கொண்டனர்.

    அப்போது ரூ.1 லட்சம் பணம் தந்தால்தான் திருமலையை விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். அவ்வளவு பணம் தர முடியாது என கார்த்தி தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என சந்தானம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கும்பல் 10,000 கொடு என கேட்டுள்ளனர்.

    இதற்கிடையே சந்தானம் மற்றும் கார்த்திக் இருவரும் திருமலை கடத்தப்பட்டது குறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். மேலும் கும்பல் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்தது குறித்து தகவல் தெரிவித்தனர். அப்போது போனில் பேசிய கும்பல் வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே பணத்துடன் வரும்படி கூறினர்.

    இதனை தொடர்ந்து சந்தானம் மற்றும் தனிப்படை போலீசார் மேல்மொணவூருக்கு வந்தனர்.

    சந்தானம் தனியாக சென்று கும்பலிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் வெளியில் வந்தனர். போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் திருமலையை அங்கேயே விட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    திருமலையை மீட்ட போலீசார் அவரை எங்கு அடைத்து வைத்திருந்தனர் என்பது குறித்து விசாரித்தனர்.

    மேலும் இதுதொடர்பாக காட்பாடியை சேர்ந்த சதிஷ், பிரவின், சீனிவாசன், ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×