என் மலர்
வேலூர்
- கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு
- 54 பேர் பயனடைந்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை மற்றும் பலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் பயனாளிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பீஞ்சமந்தை கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி குழு மு.பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சங்கர் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 54 பயனாளிகளுக்கு ரூ.33.15 லட்சத்தில் பயிர் கடன் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பலாம்பட்டு கிராமத்தில் பெரும்பல நோக்கு கூட்டுறவு புதிய கிளை, பகுதிநேர நியாயவிலைக் கடைக்கான அடிக்கல்லை நாட்டி விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சப் - கலெக்டர் கவிதா, வேலூர் மண்டல இணை பதிவாளர் முருகேசன், தாசில்தார் வேண்டா, துணை தாசில்தார் பிரகாசம், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர்.
- கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம் இயங்கி வருகிறது.
விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். இது தவிர பல ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
ஆவின் அலுவலகத்தில் பால் திருட்டு அடிக்கடி அரங்கேறி வந்தது. இதனை தடுக்க பொது மேலாளர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஆவினில் பணிபுரியும் அதிகாரிகள் இரவு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
இதில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு அருகே உள்ள திமிரி வழித்தடத்திற்கு கொண்டு செல்லப்படும் பால் வண்டியில் பால் திருடிச்செல்வது தெரியவந்தது.
இதனை கண்டுபிடித்த ஆவின் பொறியியல் பிரிவு மேலாளர் கனகராஜ் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்காணித்ததில், ஆவினில் பால் திருட்டு தொடர் கதையாகி வருவது அம்பலமாகி உள்ளது.
பால் திருட்டை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தபோது வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நேற்று அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்த போது டி.என்.23 ஏ.சி. 1352 என்ற ஒரே எண்ணில் 2 வேன்களில் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றி கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 2 வேன் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் உடனடியாக வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆவின் அலுவலகத்தில் இருந்த 2 வேன்களுக்கும் சீல் வைத்தனர்.
தொடர்ந்து இன்று ஆவின் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வேன்களை ஆய்வு செய்தனர். இதில் பொய்யான பதிவெண் கொண்ட வேன் எது என்பது கண்டுபிடிக்கப்படும். இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிக்குவார்கள் என தெரிவித்தனர்.
வேலூர் ஆவினில் பால் அளவு குறைந்தபடியே இருந்தது. இதனால் அனைத்து பால் வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். இந்நிலையில் நேற்று வேலூர் ஆவினில் இருந்து திமிரிக்கு இயக்கப்படும் வாகனங்களில் ஒரே பதிவெண்ணில் 2 வாகனங்கள் இயக்குவது தெரியவந்தது.
இதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் வரையில் பால் திருடியிருப்பதும். இப்படி பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது வட்டார போக்குவரத்து துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒரே பதிவெண்ணில் இயங்கிய வாகனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
- முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தருமபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவர் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் காரணமாக தருமபுரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணன் கடந்த 2019-ம் ஆண்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்சஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணா ராஜன் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதில் விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிவாக்கம் பகுதியில் உள்ள வனரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
- வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையத்தை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு காணொளி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் அதன் வழியாக செல்லும் வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
வேலூர் மாவட்டத்தில் 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்ற சம்பவங்களை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பெற்றோரிடம் அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் செல்வம் (வயது 22). இவர் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
செல்வம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் வலியுறுத்தி வந்தார். உனக்கு 22 வயது தான் ஆகிறது. எனவே கொஞ்ச நாள் பொறுத்து இருக்கும்படி அவரது பெற்றோர் மகனுக்கு அறிவுரை வழங்கினர்.
ஆனால் தனக்கு உடனே திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த செல்வம் திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் தகராறு செய்தார்.
அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தார்.
இதையடுத்து தனது அறைக்கு சென்ற செல்வம் அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதை கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் திருமணம் ஆகாத இயக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிய பஸ் நிலையத்தில் தொடரும் சம்பவம்
- கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும்
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்.
இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். பிரதீப்குமார் தனது மனைவி மற்றும் மாமியாரை அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து வேலூர் வருவதற்காக, திருப்பதி செல்லும் பஸ்சில் பயணம் செய்தார்.
அதன்படி பஸ் அதிகாலை 4.30 மணியளவில், வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. அங்கு பிரதீப்குமாரின் மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் கழிவறைக்குச் சென்றனர். பிரதீப் குமார் தனது கை குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, தான் கொண்டு வந்த பைகளையும் கீழே வைத்திருந்தார்.
அப்போது அவர் பையில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார். என்ன செய்வது என தெரியாமல் பதறிப்போன பிரதீப்குமார், இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, புதிய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம், நகை திருட்டு சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.
எனவே புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நோயாளிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்
- 10 இடத்தில் காணாறுகள் செல்கிறது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திகாடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவமனைக்கு நடந்தே தூக்கி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவ மனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டி தான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.
இதில் பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச் சென்றபோது இறப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது.
கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாத தால் கிராமத்திற்குள் வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது. துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் காணாறுகள் செல்கிறது.
ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர்.
தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராமத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
தற்போது வரை ஆற்றில் தண்ணீர் செல்வதால், மிகவும் சிரமப்பட்டு ஆற்றை கடந்து செல்கின்றனர்.
எப்போது மழை பெய்தாலும் இந்த கிராமத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சிரமமான காரியம். சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளது.
கிராம மக்கள் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் கூட இல்லை. இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி செல்வர். தார்சாலை அமைப்பதற்கு பலமுறை அளவீடு செய்தும் இதுவரை சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.
துத்திக்காடு கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு செல்ல ஆற்று வழி தவிர வேறு எந்த வழியும் இல்லை.
இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக் கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு 3 அடி அகலத்தில் சாலையும், கடந்து செல்ல 9 இடங்களில் தரைப்பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதி உடன் கூடிய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் சாலை அமைப்பதற்கு நபார்டுவங்கி திட்டத்தின் கீழ் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மலைப்பகுதியில் வாழும் மாணவர்கள் படிப்பதற்காக அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி அங்கு உள்ளது.
போக்குவரத்திற்கு லாயக்கற்ற கரடு முரடாக கிடக்கும் இந்த வழியில் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது, 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் தவறி கீழே விழுந்து கை உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர்.
கல்வி கற்க அதிக ஆர்வத்துடன் மாணவர்கள் இருக்கும்போதிலும், சாலை வசதியை காரணம் காட்டி ஆசிரியர்கள் பள்ளிக்கு சரிவர வராததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது.
உண்டு உறைவிடப் பள்ளியில் 3 வேளையும் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்பதோடு, அவர்களுக்கு சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அரசு வழங்குகிறது.
ஆனால் இந்த பள்ளிக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் எங்கே செல்கிறது என தெரியவில்லை. சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே மலைகிராமத்திற்கு சாலை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கிராம மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
வனத்துறை சார்பில் அனுமதி வழங்கியும் கூட சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை வசதி மட்டும் அரசு செய்து கொடுத்தால் போதும். மற்ற தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்வோம்.
இனியாவது அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மலைகிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.
இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக இறந்தது.
- ஜீப் வடிவிலான ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு, தினமும் மலை கிராமத்திற்கு சென்று வர உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த 27-ந் தேதி பாம்பு கடித்தது.
முறையான சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் எதிரொலியாக தமிழக அல்லேரி மலைக்கு ஆம்புலன்சை உடனடியாக வழங்க முதலமைச்சர் கலெக்டருக்கு உத்தரவிட்டார். அதன்படி அல்லேரி மலை கிராமத்திற்கு சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்சு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அல்லேரி மலைக்கு ஜீப் வடிவிலான ஆம்புலன்சை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
அல்லேரி மலை வாழ் மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆம்புலன்சு சேவை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி ஜீப் வடிவிலான ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு, தினமும் மலை கிராமத்திற்கு சென்று வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்சு மூலம் அல்லேரி மலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கீழே அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதம் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார்.
- என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் சின்ன ராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டதால் மனைவி, பிள்ளைகள் அனைவரும் நிம்மதி இல்லாமல் தவித்துள்ளார்கள்.
இதனால் வேதனை அடைந்த மகள் விஷ்ணு பிரியா (16) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணு பிரியா 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண் பெற்றிருந்தார். அடுத்து மேல்நிலைப்பள்ளி படிப்புக்கு தயாராகி வந்த நிலையில் தந்தையின் குடிப்பழக்கத்தால் இப்படி ஒரு துயர முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
"என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும். நன்றி. எனது குடும்பம் நல்ல குடும்பம். அப்பா, போய் வருகிறேன்... என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
- வேலூர் வாலிபருக்கு எஸ்.பி.பாராட்டு
- செல்போன், ஆடை, ஆபரணம் ஆபத்தாகிவிடக் கூடாது என அறிவுரை
வேலூர்:
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் ஆல்பர்ட் வினோத் (வயது32). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவர் பெண்கள் பாதுகாப்பு குறித்து பொம்மை (மிக்கி மவுஸ்) வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இதனை தொடங்கி வைத்து ஆல்பர்ட் வினோத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெண் குழந்தைகளுக்கு நல்லவை தீயவை குறித்து தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
செல்போன் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம்முடைய தேவைகளை அடுத்தவர்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆடை ஆபரணம் அழகிற்காக மட்டுமே அணிய வேண்டும்.அது நமக்கு ஆபத்தாகி விடக்கூடாது. கியாஸ் மின்சார பொருட்களை உபயோ கிக்கும் போது செல்போன் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறை எண்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளிடம் செல்போன்களை அதிகம் வழங்கக் கூடாது.
வெளிநாட்டு உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய உணவு குழந்தைகளுக்கு நல்ல உடல் வலிமையும் அறிவையும் வளர்க்கும். சாலைகளில் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இளைஞர்கள் வாகன ங்களில் சாகசம் செய்ய வேண்டாம். மது குடித்துவிட்டு செல்போன் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என அவர் பயணிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
- பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்க வலியுறுத்தல்
- குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த வேண்டாமணி தனது மகனுடன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை சமரசம் செய்து அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர்.
வேண்டாமணி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி மகன், மகள் உள்ளனர். எனக்கும், எனது கணவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் தற்போது எனது அம்மா வீட்டில் உள்ளேன்.
இந்த நிலையில் எனது கணவர் எனக்கு தெரியாமல் அதே பகுதியைச் சேர்ந்த வேறு பெண்ணை 2-து திருமணம் செய்து கொண்டார்.
எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனது கணவரை அழைத்து விசாரணை செய்து, என்னுடன் அவரை சேர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.






