search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து பலியான குழந்தையின் மலை கிராமத்துக்கு ஆம்புலன்சு வசதி- முதலமைச்சர் உத்தரவால் நடவடிக்கை
    X

    அல்லேரி மலைக்கு ஜீப் வடிவிலான ஆம்புலன்சு சேவையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.


    பாம்பு கடித்து பலியான குழந்தையின் மலை கிராமத்துக்கு ஆம்புலன்சு வசதி- முதலமைச்சர் உத்தரவால் நடவடிக்கை

    • சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக இறந்தது.
    • ஜீப் வடிவிலான ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு, தினமும் மலை கிராமத்திற்கு சென்று வர உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த 27-ந் தேதி பாம்பு கடித்தது.

    முறையான சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் எதிரொலியாக தமிழக அல்லேரி மலைக்கு ஆம்புலன்சை உடனடியாக வழங்க முதலமைச்சர் கலெக்டருக்கு உத்தரவிட்டார். அதன்படி அல்லேரி மலை கிராமத்திற்கு சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்சு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

    அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அல்லேரி மலைக்கு ஜீப் வடிவிலான ஆம்புலன்சை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    அல்லேரி மலை வாழ் மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆம்புலன்சு சேவை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி ஜீப் வடிவிலான ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு, தினமும் மலை கிராமத்திற்கு சென்று வர உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த ஆம்புலன்சு மூலம் அல்லேரி மலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கீழே அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதம் தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×