என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அலுவலகத்திற்கு பல்வேறு வேலை காரணமாக வரும் அலுவலர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இந்த கருவியின் முன்பு தான் நடந்து செல்ல வேண்டும். அப்போது இக்கருவி தானாகவே அதன் முன்பு நடந்து செல்வபவர்கள் உடல்வெப்பநிலையை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்கள் அதன் முன்பு சென்றால் அலாரம் அடிக்கும் வகையிலும் இந்த கருவி உள்ளது.
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
வாணாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி டிராக்டர் மூலம் விவசாயப் பணி செய்து முடித்த பிறகு டிராக்டரை நிலத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டு சென்றார். அடுத்தநாள் காலையில் நிலத்திற்கு வந்தபோது அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரை காணவில்லை. இது குறித்து அவர் வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேலையாபாக்கம் கலர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவருடைய மகன் முருகன் (38) என்பவர் டிராக்டரை திருடிச்சென்று அவரது வீட்டின் பின்பகுதியில் நிறுத்தியிருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (37). இவர் அந்தப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்து முருகனிடம் விற்றதாக தெரிகிறது. அதன்பேரில் போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
ஆரணி தாலுகா ராமசாணிக்குப்பம் கிராமத்தில் ஏரி உள்ளது. வண்ணாங்குளம் ஏரி நிரம்பி அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் ராமசாணிக்குப்பம் ஏரிக்கு கால்வாய் வழியாக வரும். இந்த நீர்வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது.
அதேபோன்று காளசமுத்திரம் ஏரி உபரி நீர் மற்றும் கொளத்தூர் நல்ல தண்ணீர் குளத்திலிருந்து வரும் உபரி நீர் ஆகியவையும் வண்ணாங்குளம் ஏரிக்கு வரும். அந்த கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து கால்வாய் காணாமல் போனதாகவும், அதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தற்போது பெய்த புயல் மழைகாரணமாக அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பி உள்ள நிலையில் ராமசாணிக்குப்பம் ஏரி மட்டும் நிரம்பாமல் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த ஏரி நிரம்பாத நிலை தொடர்கிறது.
எனவே ராமசாணிக்குப்பம் மற்றும் வண்ணாங்குளம் ஏரிகள் நிரம்ப, குடிமராமத்து திட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்தி நகர் பை-பாஸ் சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 49). முன்னாள் தி.மு.க.கவுன்சிலர்.ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி ஆனந்தி (40). இவர்களுக்கு ராதாகிருஷ்ணன் (22) என்ற மகனும், உமாமகேஸ்வரி (17) என்ற மகளும் உள்ளனர்.
பங்க்பாபுவும், அவரது நண்பர் பழனி (45), என்பவரும் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இவர்களை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் டீ கடைக்கு பங்க் பாபு வருவதை எதிர்பார்த்து நின்றனர்.
டீக்கடைக்கு வந்த பங்க் பாபுவை கடையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேரும் திடீரென அரிவாளால் சராமாரியாக வெட்டினர். மேலும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேரும் சேர்ந்து 4 பேர் கும்பல் பங்க் பாபுவை சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை தடுக்க முயன்ற பழனிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.
பட்ட பகலில் பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொலையாளிகள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களுக்கும் 20 வயதிற்குள் தான்இருக்கும். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை கார்கானா தெருவை சேர்ந்த முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளர் கனகராஜ் என்பவருக்கும், பங்க் பாபுவுக்கும் இடையே தொழில் ரீதியாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் தகராறு இருந்து வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு பங்க்பாபு உள்பட 3 பேர் சேர்ந்து கனகராஜை அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் கனகராஜ் உறவினர்கள் கூலிப்படையை வைத்து பங்க்பாபுவை கொலை செய்தார்களா? அல்லது வேறு பிரச்சனை காரணமாக பங்கு பாபு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பங்க் பாபு கொலை செய்யப்பட்ட காட்சிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அதனை போலீசார் பார்வையிட்டு கொலையில் ஈடுபட்ட வாலிபர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.






