என் மலர்
திருவண்ணாமலை
தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய பயணத்தை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
பொதுமக்கள் அளிக்கும் மக்கள் மீது தி.மு.க ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இதற்காக திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் பந்தல் அமைத்து மேடை அமைத்து இருந்தனர். அந்த பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டியிருந்தனர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.
காலை 8 மணி முதலே மனுக்கள் கொடுப்பதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதிக் கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சானிடைசர் மூலம் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவருக்கும் முக கவசம், சிவப்பு கருப்பு நிற தொப்பி ஆகியவை வழங்கப்பட்டன.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரிடையாக குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றார். இதில் குறைகள் தீர்க்க கோரி ஏராளமான மனுக்கள் இருந்தன.
மேலும் 150 கவுண்டர்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சீல் வைத்த பின்னர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
மக்கள் கொடுத்த பொதுமக்களுக்கு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டன. மனுக்கள் கொடுப்பதற்காக தொடர்ந்து கூட்டம் அலைமோதியது. மதியம் ஒரு மணி வரை மனுக்கள் பெறப்பட்டது.
சுமார் 10,000 பேர் வரை மனு அளிக்க வாய்ப்புள்ளது என தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நடந்த கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இதன் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பிச்சாண்டி எம்.எல்.ஏ, முன்னாள் நகர சபை தலைவர் ஸ்ரீதரன் உட்பட தி.மு.க.வினர் உடனிருந்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை கூட்டம் ஆகிய தலைப்புகளில் பிரசார மேற்கொள்ளப்பட்டது.
அடுத்தகட்டமாக புதிய கோணத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்வு என்ற வாக்குறுதியுடன் இந்த பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார திட்டத்தை இன்று திருவண்ணாமலை தொகுதியில் தொடங்கினார். இன்று காலையில் திருவண்ணாமலை தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பிற்பகல் ஆரணி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த பிரசார திட்டத்தின் வாயிலாக, அடுத்த 30 நாட்களில் 3 தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற ஒவ்வொரு கூட்டத்திலும், அந்த தொகுதியைச் சேர்ந்த எந்த கிராமம் அல்லது வார்டினைச் சேர்ந்த யாரும் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளை கழகத் தலைவரிடம் நேரடியாகப் பதிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பக்தர்கள் கிரிவலம் செல்ல பவுர்ணமி தினங்களில் தடை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சாமி வீதி உலா நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய வகை கொரோனா பரவுவதாக கூறி இன்றும் (28-ந்தேதி) தைமாத பவுர்ணமிக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கலெக்டர் உத்தரவு பிறப்பித்தின் பேரில் இன்று அதிகாலை 1.45 மணி முதல் போலீசார் கிரிவலப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தடுப்புகள் வைத்து பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் பக்தர்கள் சாரைசாரையாக மாற்று வழியில் கிரிவலம் சென்று வருகின்றனர்.
அவர்கள் செங்கம் சாலை வழியாக அத்தியந்தல் மற்றும் அடி அண்ணாமலை வழியாக கிரிவலம் சென்று வருகின்றனர்.
இன்று காலை மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர். கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தராவிட்டாலும் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் வரை இன்று கிரிவலம் செல்வார்கள் என்று தெரிகிறது.
கிரிவலப் பாதையில் சென்ற பக்தர்களுக்கு அடி அண்ணாமலை பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் சில சன்னதிகளுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டனர் பக்தர்கள் வருகை காரணமாக பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
கலசபாக்கத்தை அடுத்த லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் ராஜீவ்காந்தி (வயது 33). இவர், போளூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் பீல்டு மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்தசில ஆண்டுகளாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு இருந்தது. இதனால் அவர் வேலை இழந்து வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் தொகை உயர்ந்ததால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜீவ்காந்தி நேற்று முன்தினம் விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தரணிபாலன் (வயது 50), விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளனர். மகள் சவுமியாவுக்கும், சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.
திருமணத்துக்காக தரணிபாலன், அப்பகுதியைச் சேர்ந்தவர்களையும், உறவினர்களையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் சென்னைக்குச் சென்று விட்டார். திருமணம் முடிந்து நேற்று வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் கதவும், அறைகளில் வைத்திருந்த பீரோக்களும் திறந்திருந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
அதிர்ச்சி அடைந்த அவர், உடனே ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், தரணிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
வீட்டின் பீரோக்களில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவைகளும், மணப்பெண் சவுமியாவுக்கு சீர்வரிசையாக வழங்க வைத்திருந்த தங்க நகைகளும் என மொத்தம் 35 பவுன் நகைகள் திருட்டுப்போய் இருந்தது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம், திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முகூர்த்த நாளான நேற்று குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளதாக ‘சைல்டு லைன்’ எண்ணிற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ‘சைல்டு லைன்’, சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில் திருமண வயது நிரம்பாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த 14 குழந்தை திருமணங்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். மணப்பெண்ணாக இருந்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் நிகழ்ச்சிக்கு புகழ் பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இதில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் சிறு வியாபாரிகள் முதல் பல்வேறு தரப்பினரும் பக்தர்களின் வருகையால் வருமானம் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவண்ணாமலையில் ஏப்ரல் மாதத்தில் வந்த பவுர்ணமியில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் தொடங்கி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணி வரை உள்ளது. இந்த பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்
ஆனால் புதிய வகை கொரோனா பரவி வருவதால் மீண்டும் அதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்துள்ளார். மேலும் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து 10-வது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது பக்தர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாகவும், உடனடியாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்களும், ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சாத்தனூரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சின்ன குழந்தை (76) முத்துவின் தம்பி மகன் பன்னீர்செல்வம், இவரது மனைவி பச்சையம்மாள் (45), சின்ன குழந்தைக்கும் பச்சையம்மாளுக்கும் உடல் நிலை சரியில்லை. இருவரையும் சின்ன குழந்தையின் மகன் சங்கர் (40) பைக்கில் வந்தவாசி தனியார் மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து வந்தார்.
சிகிச்சைக்கு பின்னர் சின்னகுழந்தையையும், பச்சையம்மாளையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சங்கர் சாத்தனூர் நோக்கி சென்றார்.
வந்தவாசி விளாங்காடு நெடுஞ்சாலை சளுக்கை கூட்டு சாலை அருகே பைக் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பாக்யராஜ் (24) ஓட்டி வந்த பைக் சங்கர் பைக் மீது மோதியது இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன குழந்தை பரிதாபமாக இறந்தார். மேல் சிகிச்சைக்காக பச்சையம்மாள், சங்கர் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






