search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    குறைகள் தீர்க்க கோரி மு.க.ஸ்டாலினிடம் குவிந்த மனுக்கள்

    ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரிடையாக குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றார்.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய பயணத்தை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    பொதுமக்கள் அளிக்கும் மக்கள் மீது தி.மு.க ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    முதன்முறையாக திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

    இதற்காக திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் பந்தல் அமைத்து மேடை அமைத்து இருந்தனர். அந்த பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டியிருந்தனர். இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.

    காலை 8 மணி முதலே மனுக்கள் கொடுப்பதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதிக் கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சானிடைசர் மூலம் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவருக்கும் முக கவசம், சிவப்பு கருப்பு நிற தொப்பி ஆகியவை வழங்கப்பட்டன.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரிடையாக குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றார். இதில் குறைகள் தீர்க்க கோரி ஏராளமான மனுக்கள் இருந்தன.

    மேலும் 150 கவுண்டர்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சீல் வைத்த பின்னர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

    மக்கள் கொடுத்த பொதுமக்களுக்கு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டன. மனுக்கள் கொடுப்பதற்காக தொடர்ந்து கூட்டம் அலைமோதியது. மதியம் ஒரு மணி வரை மனுக்கள் பெறப்பட்டது.

    சுமார் 10,000 பேர் வரை மனு அளிக்க வாய்ப்புள்ளது என தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நடந்த கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இதன் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பிச்சாண்டி எம்.எல்.ஏ, முன்னாள் நகர சபை தலைவர் ஸ்ரீதரன் உட்பட தி.மு.க.வினர் உடனிருந்தனர்.
    Next Story
    ×