என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் பவதாரணி (வயது 18), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவதாரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விவசாயி வீட்டில் நகை,பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூரை அடுத்த கரைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 74), விவசாயி. இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, ரூ.12 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போளூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து வேனில் மணல் கடத்தி வந்த போளூரை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர்.
    ஆரணியில் சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை நாடகசாலை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் அன்புவேலன் (வயது 40). இவர் சுமார் 10 வருடங்களாக சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சீட்டு கட்டி முடித்தவர்களுக்கு அன்புவேலன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் அளித்தனர். ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

    மோசடி செய்த பணம் கோடிக்கணக்கில் இருப்பதால் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி துணைபோலீஸ் சூப்பிரண்டு காலம் கடத்தி வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆரணி டவுன் போலீஸ் நிலையத்துக்கு, அன்புவேலனை, போலீசார் வரவழைத்து, பாதிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் 50 சதவீத பணத்தை தந்துவிடுவதாக கூறியிருக்கிறார்.

    இந்த நிலையில் 15 நாட்களாகிவிட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, மற்றும் போலீசார் விரட்டி அடித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அன்புவேலன், அவரது தந்தை பாலசுந்தரம் ஆகிய இருவரின் வீடுகளுக்கும் பூட்டு போட சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், ஆரணி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்தனர்.

    மேலும் அன்புவேலன் அவருடைய தந்தை பாலசுந்தரம் ஆகியோர் வீட்டில் இல்லை. அதனால் போலீசாரே வீட்டை பூட்டிவைத்துக்கொள்ளும்படி பொதுமக்கள் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் வரும்போது அவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். அதன்படி போலீசார் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
    வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலம் அருகே உள்ள பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மூத்த மகன் பிரேம் (வயது21), வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், பன்னியூர் புறாக்கல் மலை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 47), ரியல் எஸ்டேட் அதிபர். இவரை, மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை அ.தி.மு.க. பிரமுகர் கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பழியாக கூலிப்படையை ஏவி கனகராஜின் மனைவி, மாமியார் உள்பட உறவினர்கள் சிலர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 6 பேர் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (39) என்பவரை நேற்று திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
    செங்கம் பகுதியில் 17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    செங்கம்:

    செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
    கீழ்பென்னாத்தூர் அருகே எலி மருந்து சாப்பிட்டவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். அவரது மகன் ஏழுமலை (வயது 35), மனநிலை பாதிக்கப்பட்டவர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை மருந்து என நினைத்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ‘பூஜ்ஜியம்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 ஆயிரத்து 427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 19 ஆயிரத்து 109 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.

    34 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 284 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
    திருவண்ணாமலை அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால் (வயது 42). சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பத்மபிரியா (36). இவர்களுக்கு ஆரியா (12) என்ற மகனும், மிருதுளா (8) என்ற மகளும் உள்ளனர்.

    பத்மபிரியாவின் தந்தை சதீஷ்குமார்(68), சென்னை மாதவரத்தில் சொந்தமாக லாரிவைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி(60).

    இந்த நிலையில் ஸ்ரீபால் தனது மனைவி பத்மபிரியா, குழந்தைகள், மாமனார் சதீஷ்குமார், மாமியார் சாந்தி ஆகியோருடன் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். ஊசாம்பாடி என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஸ்ரீபால், பத்மபிரியா, சாந்தி, சதீஷ்குமார் ஆகியோர் பலியானார்கள். படுகாயமடைந்த ஆரியா, மிருதுளா ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசப்பாக்கம் அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சொரகொளத்தூர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை எதிரே காப்புக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இதனால் ஏற்பட்ட தகராறால் அவரை மர்மநபர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட மர்மநபர் காமவெறியால் பெண்ணின் உடல் பாகங்களை பல்லால் கடித்துள்ளார். அதற்கான அடையாளங்கள் பெண்ணின் உடலில் பல இடத்தில் இருந்தன.

    திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் ‘மியா’ மற்றும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மோப்பநாய் பெண்ணின் பிணத்தை மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடியது. கைரேகை நிபுணர்கள் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் பிணம் கிடந்த இடத்தில் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேலாடை டாப்ஸ் ஆகியவை கிடந்தன. அதை, போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த கொலை சம்பந்தமாக 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு நேர் எதிரே காப்புக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் மதுப்பிரியர்கள் யாரேனும் குடித்துவிட்டு, போதையில் பெண்ணை கற்பழித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு வந்து சென்றவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். விரைவில் துப்பு துலங்கும் என போலீசார் தெரிவித்தனர். 

    விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40), விவசாயி. இவர், இருசக்கர வாகனத்தில் முருகர் கோவில் அருகில் வந்த போது, சோ.புதூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் விஜய் (வயது 25) என்பவர் வழி மடக்கி கத்தியை காட்டி மிரட்டி, செந்தில்குமார் வைத்திருந்த ரூ.3 ஆயிரம், ஆதார்கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்தார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், கைதான விஜய் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
    ×