என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் மின்வாரிய அலுவலர் வீட்டில் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாமரை நகர் 21-வது தெருவில் வசிப்பவர் ராஜசேகரன் (வயது58). இவர் திருவண்ணாமலை மின்வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதை முன்னிட்டு அவர் குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது தனதுவீட்டை பூட்டி விட்டு அருகில் வசிப்பவர்களிடம் சொல்லிவிட்டு சென்றார்.

    வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.33 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ராஜசேகரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி உடனடியாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சென்னையில் உள்ள ராஜசேகரனிடம் இது பற்றி தகவல் தெரிவித்தனர். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு போய் விட்டதாக தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வெம்பாக்கம் அருகே குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் நகை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது47). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு தமிழ் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் ராஜேஸ்வரி தனது வீட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கம் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் அணைக்க முடியவில்லை. செய்யாறு தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. குடிசை வீட்டிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் பசுமை வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய ரூ.2 லட்சம், 5 சவரன் நகை உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து மனோகரன் கொடுத்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறில் பைனான்சில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள விண்ணவாடி கிராமம் கதிர்வேல் மகன் சக்திவேல் வயது 34, என்பவர் செய்யாறு பஸ் நிலையம் அருகே பைனான்ஸ் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் மதியம் ஊழியர்கள் சாப்பாட்டிற்கு சென்று திரும்பிய போது பைனான்சின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே இருந்த கல்லாவை திறந்தபோது அங்கிருந்து ரூ.12,500 திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

    இது சம்பந்தமாக செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் தெரிந்தது.

    மேலும் இதேபோல 20 நாட்களுக்கு முன்பு 2 நிதி நிறுவனத்தில் திருடு போயிருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதே 2 வாலிபர்கள் தெரியவந்தது.

    இந்நிலையில் அதே வாலிபர்கள் நேற்று ஒரு பைனான்ஸில் திருட முயற்சி செய்தபோது ரோந்து சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

    பிடிபட்ட 2 வாலிபர்களும் திருச்செங்கோடு புதூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது27), ஈரோடு நாப்பியாளத்தை சேர்ந்த அருண் குமார் (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கண்ணமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அரியபாடி ஊராட்சி, சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் ராஜ்கமல் (வயது 24), ஒண்ணுபுரம் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அத்திமலைப்பட்டு-ஆரணி ரோட்டில் செல்லியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ராஜ்கமல் ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் புஷ்பகிரி கொல்லமேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), விவசாயி. அவரது மனைவி கஸ்தூரி (45). இவர்களுக்கு ராம்குமார் (18) என்ற மகனும், ரம்யா (16) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் பூச்சி மருந்து (விஷம்) குடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை அருகே மதுபோதையில் அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஷைலா (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    முருகன் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவிக்கு இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.

    அதன் பின்னர் ஷைலா படுத்து தூங்கி விட்டார். நள்ளிரவு 12.15 மணி அளவில் எழுந்த முருகன் அம்மிக்கல்லை எடுத்து வந்து ஷைலா தலையில் போட்டு அவரை கொலை செய்தார்.

    இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரியவந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் முருகனை கைது செய்தனர்.

    மேலும் ஷைலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆலத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் அய்யங்குளக்கரையில் உள்ள குருக்கள் வீடுகளில் இன்று தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
    ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தர்ப்பணம் செய்து கொள்வது வழக்கம். இன்று மகாளய அமாவாசை என்பதால் திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆகியோர் “பொதுமக்கள் யாரும் அய்யங்குளக்கரையில் தர்ப்பணம் செய்ய வரவேண்டாம். இந்த கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் “என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    ஆனால் இந்த உத்தரவுகளை கண்டு கொள்ளாமல் திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் இன்று அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். அவர்கள் குளக்கரையில் வேத விற்பனர்கள் மந்திரம் சொல்ல தங்களதுமுன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர். பின்னர் அருகில் உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்கள் அய்யங்குளத்தில் சென்று நீராடுவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை குளத்தின் நான்கு பக்கமும் உள்ள மதில் சுவர் இருப்பு கேட் மூடப்பட்டு பூட்டுகள் போடப்பட்டன.

    அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த குளம் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் அதில் குளிக்க முடியாது என்று பொதுமக்கள் வேறு இடங்களில் குளித்து விட்டு வந்தனர்.அவர்கள் தயாராக இருந்த வேதவிற்பனர்களிடம் தங்களது முன்னோர் பெயர் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றை  தெரிவித்து தர்ப்பணம் செய்து கொண்டனர்.

    வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். போலீஸ் மற்றும் கலெக்டர் தடை உத்தரவு காரணமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுவிடுமோ? என்று பொதுமக்கள் கருதிய நிலையில் அய்யங்குளக்கரையில் உள்ள குருக்கள் வீடுகளிலும் இன்று தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி குருக்கள் வீடுகளிலும் தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு போலீசார் அங்கு வராததால் எந்தவித தடையும் இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் முன்னோர்களுக்கு தடையின்றி தர்ப்பணம் செய்து சென்றனர்.

    கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி தினமும் குடிநீர் சப்ளை செய்து சாதனை படைத்துள்ளது ஆரணி அருகே உள்ள வெள்ளேரி ஊராட்சி.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரணியை அடுத்து உள்ளது வெள்ளேரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 412 வீடுகளும், 1,572 மக்களும் வசித்து வருகிறார்கள். 450 குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு உள்ள அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியமிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

    வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியம்

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெள்ளேரி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    ஊராட்சியில் உள்ள 412 வீடுகளுக்கும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி ஊக்கம் அளித்தார். அதன் பயனாக கடந்த ஜனவரி மாதமே பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.

    ஊராட்சியில் ஏற்கனவே 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தன. ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேலும் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டு தற்போது 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.

    இதன் மூலம் ஒருநாளைக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நீரேற்றப்பட்டு, காலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இரண்டு வேளை தினசரி தொடர்ந்து குடிதண்ணீர் வீட்டிற்கே சென்று அடையும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் மூலம் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ரூ.47 லட்சம் செலவு செய்துள்ளது.

    அனைத்து வீடுகளுக்கும் செக் வால்வுடன், பித்தளை குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மின் மோட்டார்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டதால் தற்போது மின் கட்டணம் அதிக அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை மின்சார கட்டணமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை செலுத்தப்பட்டுவந்தது. தற்போது ரூ.80 ஆயிரமாக குறைந்துள்ளது.

    மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிக்கும் பணிக்கு ஒருவர் மட்டுமே இருந்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கூடுதலாக 2 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் அனைத்து வீடுகளுக்கும் சராசரியாக குழாய் தண்ணீர் கிடைக்கப்பெறுகிறது.

    ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தில் அனைவருக்கும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் 114 குழாய் இணைப்புகள் இருந்தன. அவர்களுக்கும் புதிதாக குழாய் இணைப்பு இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. பழையகுடிநீர் குழாய் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்ணீருக்காக பொதுமக்களிடமிருந்து இன்னும் வரிவசூல் செய்யப்படவில்லை.

    பாரத பிரதமர் மோடி, தமிழ்நாட்டிலேயே எங்கள் ஊராட்சியை தேர்வு செய்து எங்கள் மக்களுக்காக பேச வாய்ப்பளித்தார். அதற்காக அவருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    போளூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    போளூர்:

    போளூர் அடுத்த பெலசூர் என்ற கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் துரைமுருகன் (வயது 31) கார் டிரைவர். இவர் கடந்த 1ம் தேதி காலை வீட்டு தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் ஏறி முருங்கக்காய் பறித்த போது தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    ஆரணியில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆரணி:

    ஆரணி வி.ஏ.கே.நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 44). கூலித்தொழிலாளியான அவர் பட்டு மளிகையில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவலால் 2 ஆண்டாக சரிவர வேலை இல்லாததால் பலரிடம் கடன் வாங்கினார். ஆனால் அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை.

    கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விவசாய நிலத்தில் மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம் என்று திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், உடைந்த மின் கம்பங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சேதமடைந்து வெளியே தெரியும் புதைவட கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பார்த்தவுடன் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேரிலோ, தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் விபத்தினை தவிர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 04175-255325 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். மேலும் 9445855768 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களுடைய மின் தடை குறித்த புகார்களை 9498794987 மற்றும் 1912 அல்லது 18004256912 என்ற இலவச தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் தடை நிவர்த்தி செய்யப்படும்.

    மழைகாலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்க வேண்டாம். விவசாய நிலத்தில் மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். மீறும் பட்சத்தில் இந்திய தண்டனை சட்டம் மின்சாரம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலையில் டிரான்ஸ்பார்மரில் செடிகளை அகற்றிய போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆவாரங்காடு தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 50). இவர் வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று பகலில் அவர் திருவண்ணாமலை அருகே நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சுற்றி இருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தினவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×