என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய அருள்ஜோதி நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கு சென்றார்.
    • மின்சாரம் தாக்கி வயர் மேன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பேரம்பாக்கம்:

    பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 51). இவர் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் வயர் மேன்னாக பணிபுரிந்து வருந்தார். இவருக்கு திருமணமாகி சாவித்திரி (38) என்கின்ற மனைவியும், கலையரசன் (21), தர்ஷினி (17) என்கின்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி, மேட்டு கண்டிகை திடீர் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது.

    இது குறித்து அங்கிருந்தவர்கள் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய அருள்ஜோதி நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கு சென்றார்.

    அப்போது அவர் டிரான்ஸ்பார்மர் மீது ஏரி பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் டிரான்ஸ்மார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருள்ஜோதி உயிருக்கு போராடினார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துபோனார் என தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மின்சாரம் தாக்கி வயர் மேன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.
    • காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குள் பலவித குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை வைப்பதற்கு இடமில்லாமல் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறு வைத்துள்ள இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.

    இவற்றை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கு ஓரளவிற்கு வருமானம் கிடைக்கும் என்றும் இந்த வாகனங்களும் நல்ல முறையில் இருக்கும் போது பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

    திருத்தணி:

    சீரான குடிநீர் வழங்க கோரி திருத்தணி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.

    திருத்தணி அரக்கோணம் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டியபோது இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக இந்திரா நகருக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கடந்த ஆறு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யாததால் எங்கள் பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். டிராக்டரில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை.

    மேலும் தெருக்குழாயில் வரும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாமல், மாசு கலந்து வருவதால் உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் நேரில் வந்து பொதுமக்களிடம் 2 நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்குவதாக உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
    • மழை காலத்தில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து ஆவணங்கள் சேதம் அடைந்து வருகின்றன.

    திருத்தணி:

    திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

    மேலும், மழை காலத்தில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து ஆவணங்கள் சேதம் அடைந்து வருகின்றன.

    எனவே ஆபத்தான நிலையில் உள்ள அரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக அலுவலகம் கட்டிதடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • பலத்த காயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராணி என்ற மகளும் சிவக்குமார், ரவி என்ற 2 மகன்களும் உள்ளனர். அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரவி வீட்டுக்கு சென்று தாய் கன்னியம்மாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவக்குமாருக்கும் ரவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தம்பி ரவி, தங்கை ராணி, தாய் கன்னியம்மாள் மூவரையும் வெட்டினார்.

    இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாய் கன்னியம்மாள் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சிவக்குமார், அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும்.
    • தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.

    சென்னை:

    திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை வெளிவட்ட சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.

    இரு வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலை 4 வழிச்சாலையாக விரிவு படுத்தப்படுகிறது.

    இதற்காக பாக்கம் புதுக்காலனி பகுதியில் 374 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அனைத்தும் 50 முதல் 60 ஆண்டுகள் வயதானவை.

    ரோட்டின் இரு பக்கமும் வரிசையாக நின்ற புளி, வேம்பு, ஆலமரங்கள், அரச மரங்கள் நிழல் தரும் மரங்களாக நீண்ட காலமாக நின்றிருந்தன. இந்நிலையில் தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்ட பசுமை குழு மரங்களை வெட்ட அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் வனத்துறை ஒப்புதல் பெற்று மதிப்பீடுகள் தயார் செய்து முறைப்படி டெண்டர் விடப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டன.

    இந்த சாலை விரிவாக்க பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றனர்.

    பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும். ரோடு பணிகள் நிறைவடைந்ததும் புதிய மரங்கள் நடும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டியுள்ளது.
    • மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும், நிலத்தடி கேபிள்கள் மூலமாக தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

    சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். அம்பத்தூர் ரெயில்நிலைய பகுதியில் மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் , சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் பொதுமக்கள் முன்வைக்கிறார்கள்.

    அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டியுள்ளது. எனவே அம்பத்தூர் பகுதியில் ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக குடியிருப்போர் நல சங்க தலைவர் சுரேஷ் கூறும்போது, மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் நீண்ட நாட்களாகவே முன் வைத்து வருகிறார்கள். அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அம்பத்தூரில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 54 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 22 வார்டுகளிலும் பணிகள் நடை பெற்று வரும் நிலையில் அனைத்து வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பொன்னேரி தச்சூர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தாயுமான்செட்டி தெரு, ஹரிஹரன் பஜார் வீதி, என்.ஜி.ஓ. நகர், ஆகிய இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளங்களால் பொன்னேரியில் அதிக நேரம் போக்குவரத்து நெரிசல், பள்ளி கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்தில் போக முடியாமல், தவிப்பு அடிக்கடி விபத்து, மற்றும் கனரக வாகனங்களால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பொன்னேரி மீஞ்சூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடபடாமல் இருந்ததால் அவ்வழியாக வந்த கார் பள்ளத்தில் விழுந்தது. லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பிய நிலையில், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காரை மீட்டனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- தெரிவித்ததாவது அடிக்கடி சாலையின் அருகே தோண்டப்பட்ட பள்ளங்களால் வாகனங்கள் சிக்கி தவிப்பதாகவும் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் பெயர்ந்து காணப்படுவதாகவும் பாதாள சாக்கடை திட்டப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    மேலும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு தடுப்புச் சுவர் அமைக்காததால் ஆடு மாடுகள் அதில் விழுந்துள்ளன.

    எனவும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்து வருவதாகவும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
    • தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள 621 காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெறுகிறது.

    இதற்கான எழுத்து தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 3 மையங்களில் நடைபெற்றது.

    இதில் காக்களூர் சி, சி, சி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1075 ஆகிய இரண்டு மையங்களில் ஆண்களும், திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி மேல்நிலை பள்ளியில் 558 பெண்களும் மொத்தம் 3 மையங்களிலும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 933 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். மேலும் ஆதார் அட்டையை சரிபார்த்து அனுமதித்தனர்.

    மேலும் தேர்வாளர்கள் கொண்டு வந்த கை பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் செல்போன், கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    இந்த தேர்வு பணிக்காக 3 தேர்வு மையத்திற்கு அமலாக்கத்துறை காவல்துறை தலைவர் ராதிகா மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தன், கிரியாசக்தி உள்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    போட்டியை கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, ஜெ.என் சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி டீன் சரஸ்வதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவஹர்லால், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சேகர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் கவுரிசங்கர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    • திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது‌

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதி வழியாக கூவம் ஆறு சென்னை நோக்கி செல்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆறு சென்னையை நெருங்கும் வரை நல்ல தண்ணீர் ஆறாக உள்ளது . இதற்கு பிறகு கழிவுநீர் கலந்து சாக்கடை ஆறாக மாறி விடுகிறது.

    திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் இன்று காலை கூவத்தில் செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் மட்டும் நான்கு டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை கொண்ட மீன்களாக இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கூவத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கழிவுநீரை விட்டு செல்வதாகவும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனங்கள் கூவத்தில் கலப்பதும் இது போன்று மீன்கள் செத்து மிதக்க காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மீன்கள் செத்திருக்கலாம் எனவும், ஆற்றில் நச்சு கலந்த நீர் கலந்து மீன்கள் இறந்ததா என்பதை அறிய மீன்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். வேறு ஏதேனும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் கழிவு நீர் கொட்டப்படுகிறது. மேலும் ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை ஆற்றில் கலந்து விடுகின்றனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆற்றுப்பகுதியை அதிகாரிகள் சரியாக பராமரிப்பது இல்லை, கண்காணிப்பதும் இல்லை. ஏற்கனவே மழைக்காலத்திற்கு முன்பாகவே மழை நீர் செல்லும் ஆற்றுப்பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் அது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகள் நிரம்பி தண்ணீர் செல்ல வழி இன்றி அடைத்து கிடைக்கிறது. தற்போது திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் இறந்த மீன்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் சிரமமடைந்துள்ளனர். மேலும் திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது

    • எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு.
    • பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதை முன்னிட்டு, பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆலோசனைப்படி நகர செயலாளர் செல்வக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் நகரத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள், செந்தில்குமார், சுரேஷ் கோவிந்தராஜ், அதிமுக நிர்வாகிகள் சம்பத், அருன்ராஜ், அருண், ஸ்ரீதர் திருக்குமார், நாகராஜ், செல்வம், வெங்கடேசன், லட்சுமி, சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×