என் மலர்
திருவள்ளூர்
- ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
- நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு, வாடிக்கையாளர்கள் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள், கருத்து பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன.
பொன்னேரி:
தமிழ்நாடு குளிர்சாதனம் பழுது பார்க்கும் தொழிலாளர் அமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் மோகன் தலைமையில் மாநில செயலாளர் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஏசி தொழிலாளர் பாதுகாப்பு, தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் பணி, தொழிலாளர்கள் நல வாரிய திட்டம், பொன்னேரி பகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு, வாடிக்கையாளர்கள் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள், கருத்து பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன.
இதில் மாநில பொருளாளர் ஞானவேல், திருவள்ளூர் மாவட்ட தலைவர் விஜயகுமார் செயலாளர் கார்த்திக ராஜன், பொருளாளர் சுந்தர்ராஜன், பகுதி நிர்வாகி ரகு, நூர்தின், சரத்குமார், அருள் உள்பட ஏசி பழுது பார்க்கும் தொழிலாளர் அமைப்பு உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை நூர்தின், சரத்குமார் செய்து இருந்தனர்.
- பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
- கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருவள்ளூர்:
தமிழகத்தின் மேற்கு பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது.
இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் திருத்தணியில் 13 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சராசரியாக 500 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அதிரடியாக உயர்ந்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு 1520 கனஅடியாக உயர்ந்தது.
இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர் மட்டம் 34 அடியாக உயர்ந்து உள்ளது. ஏரியில் மொத்தம் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரியில் 2792 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 35 அடியை எட்டிவிடும் என்பதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் எனவும், கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.
எனவே, நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.
- மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
- ஊராட்சி தலைவர் சுஜாதாரகு சுத்தமான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், வெங்கடாபுரம் இந்துஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
இவ்வாறு வழங்கப்பட்டு வரும் குடிநீர் அதிக உப்பு தன்மையுடன் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுபற்ற அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சுத்தமான குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை வசதி மின்விளக்கு வசதி ,அடிப்படை வசதிகள் மற்றும் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் ஊராட்சி தலைவர் சுஜாதாரகு பேச்சு வார்த்தை நடத்தினார். சுத்தமான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, அண்ணா நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்யாததால் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் கொண்டு வருகிறோம். குழாயில் வரும் தண்ணீரை சமையல் செய்யமுடியவில்லை. இதனால் கூடுதல் விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.சாலை வசதி, தெரு மின்விளக்கு செய்து தர வேண்டும் என்றனர்.
- விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.
- சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்திவிழா கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர், ஜனப்பசத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர், சோழவரம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரணி, மணலி, பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் பழவேற்காடு கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தடுப்பு அமைத்து ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.
டி.எஸ்.பி. கிரியாசக்தி தலைமையில் திருப்பாலைவனம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், பொன்னேரி இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
2 கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும், பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், சிலைகள் வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலைகளை கரைக்க வருபவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், இருக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.
- உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.
- சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா ?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். வீரலட்சுமிக்கு எதிராக சீமான் பல முறை கருத்துகளை முன்வைத்தார்.
இது இருவரிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியது. அவ்வபோது வீரலட்சுமியும் வீடியோக்களை வெளியிட்டு சீமானுக்கு எதிராக பேசி வருகிறார்.
இந்நிலையில், கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களே.. ஊடகவியாளர் மத்தியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் என்னை பெண் என்றும் பாராமல் ஒழிங்கினமாக பேசி வருகிறீர்கள். நீங்கள் பேசும் பேச்சுகளை பொது வாழ்வில் உள்ள ஒரு பெண்ணாக நான் பொறுத்துக் கொண்டு கடந்து செல்வேன். ஆனால், உங்களது இழிவான பேச்சுகளை கேட்டுக் கொண்டு அமைதியாக செல்ல எனது கணவருக்கு எந்த அவசியமும் இல்லை.
எனது கணவர் உங்களை செல்போனில் தொடர்புக் கொண்டபோது அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் தொடர்புக் கொண்டபோது சீமானிடம் தனக்கு உங்களுடன் பாக்ஸிங் செய்ய ஆசையாக இருக்கிறது. உங்களால் என் எதிரில் நிற்க முடியுமா என்று கேட்டார். ஆனால் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.
சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா? ஆனால், ஊடகவியளரிடம் தைரியம் இருந்தால் நேரில் வந்து நிற்க சொல்லுங்கள் என்று எனது கணவரை கூறியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சுமார் ஒரு மணி நேரம் கேள்வி கேட்டு பேசியவர் எனது கணவர்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இப்போது நின்றுக் கொண்டிருக்கும் இடம் திருவள்ளுவர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானம் இது. இங்குதான் பாக்சிங் செய்வதற்கு இடம் ஏற்பாடு செய்துள்ளேன். 2024ம் ஆண்டு தை மாதத்தில் வரும் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் சண்டை நடக்க போகிறது.
இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் என இதில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். அனைத்தையும் சமாளிக்க எனது கணவர் தயாராக இருக்கிறார். இதில் தோற்பவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன பந்தயம் என்பது குறித்து போட்டியின் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
- நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மனைவி சுஜாதா (45). இவர்களுக்கு 16 வயது, 14 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வசித்து வருகிறார்.
சுஜாதா தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் (32) என்பவருக்கு தனது 16 வயது மகளை கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மாங்காடு கோவில் வாசலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து 16 வயது சிறுமியின் உறவினர் 1098 சைல்டு லைன் எண் மூலம் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் போலீசார் குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜ் மற்றும் சிறுமியின் தாய் சுஜாதா ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
- பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது.
- கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 30). குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் கடந்த 11-ந்தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார். ஆத்திரம் அடைந்து தனது கணவரை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் தங்கலட்சுமியை போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
- தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது.
- நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த வெள்ளி வாயல் ஊராட்சியில் உள்ள மழை நீர் கால்வாய்வழியாக அருமந்தை, வழுதிகை மேடு, விச்சூர், ஞாயிறு, திருநிலை, முல்லைவாயல், கிராமங்களில் இருந்து மழை நீர் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டியுள்ளது. இதனால் மழைநீர் செல்வது தடைபட்டு ஊருக்குள் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளிவாயல் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
நீரோடை கால்வாயை முற்றிலுமாக தூர்வாராவிட்டால் மழை நேரங்களில் கிராமப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கால்வாய் அருகில் பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
- சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். 10-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தனி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்கிற பூபாலன் என்பவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பூபாலனுக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரது உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நகராட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருத்தணி:
திருத்தணி நகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகராட்சியில் ஒரு நாளைக்கு, சராசரியாக 10 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த 21 வார்டுகளிலும் தூய்மைப் பணிக்காக நகராட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் ஆட்டோவில் எடுத்து வந்து கொண்டிருந்தனர். அரக்கோணம் சாலையில் இருந்து வாரியார் நகருக்கு செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஊழியர்கள் இருவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
- சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆம்னி பஸ்முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
- தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் முழுவதும் பேட்டரியால் இயங்கும் வகையில் இருந்தது.
பூந்தமல்லி:
கோயம்பேட்டில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று காலை 6 மணியளவில் தனியார் பேட்டரி ஆம்னிபஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 8 பயணிகள் பயணம் செய்தனர்.
செம்பரம்பாக்கம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் ஆம்னிபஸ் கட்டுப்பாட்டை இழந்து எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்சின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதில் எலெக்ட்ரிக் ஆம்னிபஸ்சின் பின் பகுதி நொறுங்கிய நிலையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டதும் ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி பஸ்சில் இருந்து வெளியே இறங்கினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆம்னி பஸ்முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
பஸ் டிரைவர் அம்ரிஷ் பீன்ஸ் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ பஸ் முழுவதும் கரும்புகையுடன் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரோடு ரசாயனம் கலந்த பவுடரை கலந்து பீய்ச்சி அடித்து தீணை அணைத்தனர்.
எனினும் ஆம்னி பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ் முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடானது. நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து தீவிபத்தில் சிக்கிய ஆம்னிபஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விபத்து ஏற்படுத்திய மற்றொரு ஆம்னி பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது. உடனடியாக அந்த பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் தீ விபத்தில் இருந்து அந்த பஸ் தப்பியது.
இந்த தீ விபத்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பக்கத்தில் எதிரெதிர் திசையில் வாகனங்கள் சென்றதால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் முழுவதும் பேட்டரியால் இயங்கும் வகையில் இருந்தது. பின்னால் வந்த பஸ் மோதிய வேகத்தில் உடனடியாக ஆம்னி பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கல்லூரி மாணவி ஒருவரின் சான்றிதழ்கள், விலை உயர்ந்த 3 செல்போன்கள், பயணிகள் கொண்டு வந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து போனது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை.
- தற்போது பூண்டி ஏரியில் 2624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 1944-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஏரி நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன. ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்த பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடம்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
கடந்த ஜனவரி மாதத்தில் பூண்டி ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நதிநீரை பெறவில்லை. கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை ஏற்று கடந்த மே 1-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ம் தேதி பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 530 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. தற்போது வரை பூண்டி ஏரிக்கு தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. கிருஷ்ணா தண்ணீருடன் மழை நீரும் வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று பூண்டி ஏரிக்கு 630 கனஅடிவரை தண்ணீர் வந்தது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் தற்போது அதன் முழு கொள்ளளவில் 81 சதவீதம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2624 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. அதன் மொத்த உயரமான 35 அடியில் 33.35 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து லிங்க் கால்வாய் மூலம் 380 கனஅடிவீதம் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரி கட்டப்பட்டதில் இருந்து இதுவரை அதன் ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பூண்டியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகின்றது இந்த ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது பூண்டி ஏரியில் 2624 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது
தற்போது 1,2,4,5,6,14,15 ஆகிய ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஷட்டர்களில் இருந்து அதிகளவு நீர்க்கசிவு ஏற்பட்டு உபரிநீராக செல்கின்றன. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொதுப்பணித்துறையினர் உடனடியாக பூண்டி ஏரியின் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்கை மாற்றி சரி செய்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களுக்கு முக்கியமானது. கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கல்குவாரி தண்ணீர், விவசாய கிணறு மற்றும் ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. எனவே தற்போது ஏரியில் உள்ள தண்ணீரை உரிய முறையில் பாதுகாத்து சேமித்து வைக்க வேண்டும். ஏரியின் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். இல்லை எனில் இதுவே மதகுகளுக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது கூறியதாவது:-
பூண்டி ஏரியில் உள்ள ஷட்டர்களில் நீர்க்கசிவை ஊழியர்கள் தினமும் சரி செய்து வருகின்றனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஷட்டர்களில் அதே இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நீர்க்கசிவுக்கு நிரந்தர தீர்வுக்காக மதிப்பீடு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும்.
அதற்கான நிதி வந்தவுடன் ஷட்டர் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். பூண்டி ஏரியில் நீர் முழுவதும் வடிந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும். தற்போது அப்பணிகளை மேற்கொண்டால் தண்ணீர் அனைத்தும் வீணாக வெளியே சென்று விடும் என்றார்.






