search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
    • கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தின் மேற்கு பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் திருத்தணியில் 13 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு கடந்த மே மாதம் முதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சராசரியாக 500 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு 1520 கனஅடியாக உயர்ந்தது.

    இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர் மட்டம் 34 அடியாக உயர்ந்து உள்ளது. ஏரியில் மொத்தம் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரியில் 2792 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

    ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 35 அடியை எட்டிவிடும் என்பதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் எனவும், கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.

    எனவே, நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன் பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×