என் மலர்
திருவள்ளூர்
- தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மகன் ஜானகிராமன் (வயது 17). பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.
பிளஸ்-1 தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாற்று நட்டு 4 மாதங்கள் ஆகியும் நெல்மணிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
- தரமற்ற விதை நெல்லால் சுமார் 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மலட்டுத்தன்மை அடைந்து விட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள பெரிய முல்லைவாயல், புதுப்பாக்கம், கும்மனூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களை சேர்ந்தவர்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.
இவர்கள், அருமந்தை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கிலோ ரூ.85 -க்கு ஏ.ஜி.ஆர். என்ற விதை நெல்லை வாங்கி நெற்பயிர் சாகுபடி செய்து இருந்தனர்.
இந்த நிலையில் நாற்று நட்டு 4 மாதங்கள் ஆகியும் நெல்மணிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடையில் விற்கப்பட்டது தரமற்ற மலட்டு விதை நெல் என்பது தெரிந்தது.
இதுகுறித்து விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சோழவரத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற விதை நெல்லை சந்தையில் புழக்கத்தில் விட்டவர்கள் மற்றும் இதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தரமற்ற விதை நெல்லால் சுமார் 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மலட்டுத்தன்மை அடைந்து விட்டது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கவேண்டும்.
மேலும் முறையாக ஆய்வு செய்யாமல் மலட்டு விதை நெல்லை சந்தைப்படுத்திய தனியார் நிறுவனத்திற்கு தரச்சான்று வழங்கிய சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்து உள்ளனர்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகே சென்ற பஸ்சின் சக்கரத்தில் சிக்கி கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
- மணவாளநகர் போலீசார் பலியான கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
சென்னை முகப்பேர் 1-வது பிளாக்கை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 28). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் மோகன சுந்தரம் (38) என்பவருடன் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி சென்றார்.
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் தனியார் தொழிற்சாலை அருகே சென்ற போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகே சென்ற பஸ்சின் சக்கரத்தில் சிக்கி கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மோகன சுந்தரம் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணவாளநகர் போலீசார் பலியான கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உடல் முழுவதும் பரவிய தீயால் தேவகி அலறி துடித்தார்.
- அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த திருவெங்கடபுரத்தை சேர்ந்தவர் தேவகி(60). இவர் கடந்த 12-ந்தேதி குளிப்பதற்காக விறகு அடுப்பில் வெந்நீர் வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தேவகியின் சேலையில் தீப்பிடித்தது.
இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய தேவகியை மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக பொன்னேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
- விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் உமா சங்கர் (வயது 21). இவர் திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்து இருந்தார்.
பின்னர் கொரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உமாசங்கர் தனது நண்பரான நசரத் பேட்டையை சேர்ந்த விஜய் (வயது 20) என்பவருடன் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து டி.சி.யை திருப்பி கேட்டு எழுதி கொடுத்தார்.
பின்னர் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி திரும்ப சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திருத்தணி நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த விஜய் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- மீண்டும் மழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 23.50 அடிக்கு தண்ணீர் உள்ளது.
கடந்த ஒரு மாதமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டியதால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று முன்தினம் முதல்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை நீடித்ததால் நேற்று உபரி நீர் திறப்பு மேலும் 250 கனஅடி அதிகரிக்கப்பட்டது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் மொத்தம் 500 கனஅடியாக இருந்தது. இதற்கிடையே செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 510 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 707 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மீண்டும் மழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 3514 மி.கனஅடிக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 95 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 225 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இதைதொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் முன் எச்சரிக்கையாக 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இதில் 1,379 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 2368 உள்ளன. அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 253-ம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலையில் உள்ள படுக்கை வசதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் 95 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 80 சதவிகிதம் மக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். முன் எச்சரிக்கை தடுப்பூசி என்று சொல்லக்கூடிய 3-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளுக்காக 1,379 ஆக்சிஜன் படுக்கைகளும், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளாக 2,368 படுக்கைகளும், அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 253 என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான மொத்த படுக்கைகளாக 4 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுகள் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், அதனுடைய பாதிப்பு திறன் குறைவாக தான் உள்ளது. ஆகையால் நாம் அச்சப்பட தேவையில்லை. ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்களுக்கு மீண்டும், மீண்டும் தெரிவிக்க விரும்புவது என்ன வென்றால் வெளியில் செல்லும்போது முகக்க வசம் அணிய வேண்டும்.
கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் உடன் இருந்தார்.
- வீடுகளை இழந்த குடும்பத்தினர் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மாற்று இடம் இல்லாததால் தங்குவதற்கு வழி இல்லாமல் குழந்தைகளுடன் சாலையோரம் தங்கினர்.
- மழையிலும் வெயிலிலும் இரவு பகலாக அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த கொடூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் முன்னிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
இதனால் வீடுகளை இழந்த குடும்பத்தினர் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மாற்று இடம் இல்லாததால் தங்குவதற்கு வழி இல்லாமல் குழந்தைகளுடன் சாலையோரம் தங்கினர்.
மழையிலும் வெயிலிலும் இரவு பகலாக அவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர் கஸ்தூரி மகேந்திரன் ஆகியோர் சாலையோரம் தங்கி இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் கண்ணீருடன் பேசியது அனைவரையும் கலங்க வைத்தது.
- சந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் மதுபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டார்.
- அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
அம்பத்தூர்:
சென்னை, நொளம்பூர், 1-வது அவன்யூவை சேர்ந்தவர் ராசு. இவர் மெட்ரோ வாட்டரில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனகா. இவர்களது மகள் மகாலட்சுமி(5). ராசுவின் தம்பி சந்திரன் என்கிற விக்கி(வயது19). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
சந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் மதுபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டார். அவரை அண்ணன் ராசு கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் சந்திரன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது அண்ணன் மகள் சிறுமி மகாலட்சுமி செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். இதனை கண்ட சந்திரன், சிறுமி மகாலட்சுமியிடம் இருந்த செல்போனை பறித்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் சிறுமியை அடித்ததாகவும் தெரிகிறது.
இதனை கண்ட ராசு, தம்பி சந்திரனை கண்டித்தார். இதில் அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் கோபம் அடைந்த ராசு, அருகில் கிடந்த பெல்ட்டால் தம்பி சந்திரனின் கழுத்தை நெறித்தார். இதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நொளம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சந்திரனின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- மாணவி மோகனப்பிரியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.
- 2 மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கொப்பூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மூத்த மகள் மோகனப்பிரியா (17). இவர் திருவள்ளூரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.
மாணவி மோகனப்பிரியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனையில் இருந்த மோகனப்பிரியா வீட்டில் இருந்து வெளியே சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மோகனப்பிரியாவை தேடி வருகிறார்கள்.
இதேபோல திருவள்ளூரை அடுத்த பூண்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி சங்கீர்த்தனா (15). தேர்வில் தோல்வி அடைந்தார். அவரும் மாயமாகி உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது
- 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது.
நரசிம்மரின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார்.
திருமாலின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்த படி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிரித்த முகத்துடன் நரசிம்மர் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு. இக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி இன்று முதல் ஜூலை 1-ந்தேதி வரை தினசரி உற்சவர் காலை, மாலையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 3-ம் நாள் 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது. 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 23.60 அடியை தொட்டு உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த ஒரு மாதமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 23.60 அடியை தொட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது ஏற்கனவே நிறுத்தப்பட்டது.
வழக்கமாக ஏரியில் 23 அடியை தாண்டினால் உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முதல் கட்டமாக 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 775 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் மொத்தம் 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே உபரி நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ள பாதிப்பின்போது கூட செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 23.50 அடியில் தான் இருந்தது. அதன் பிறகு தற்போது கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 23.60 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஏரிக்கு நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 3540 மி.கனஅடிக்கு தண்ணீர் உள்ளது.






