என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 1,379 படுக்கைகள் தயார்
- திருவள்ளூர் மாவட்டத்தில் 95 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 225 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
இதைதொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளூர் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் முன் எச்சரிக்கையாக 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இதில் 1,379 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 2368 உள்ளன. அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 253-ம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலையில் உள்ள படுக்கை வசதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் 95 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 80 சதவிகிதம் மக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். முன் எச்சரிக்கை தடுப்பூசி என்று சொல்லக்கூடிய 3-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளுக்காக 1,379 ஆக்சிஜன் படுக்கைகளும், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளாக 2,368 படுக்கைகளும், அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 253 என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான மொத்த படுக்கைகளாக 4 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுகள் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், அதனுடைய பாதிப்பு திறன் குறைவாக தான் உள்ளது. ஆகையால் நாம் அச்சப்பட தேவையில்லை. ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்களுக்கு மீண்டும், மீண்டும் தெரிவிக்க விரும்புவது என்ன வென்றால் வெளியில் செல்லும்போது முகக்க வசம் அணிய வேண்டும்.
கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் உடன் இருந்தார்.






